search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவராத்திரி"

    • மன்னர் பயன்படுத்திய உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன் பிறகு 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் ஆட்சி காலத்தில் இந்த விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

    அந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சிலைகளை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

    அப்போது மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பத்மநாபபுரம் அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் உடைவாளும் கொண்டு செல்லப்படும். சாமி சிலைகள் புறப்பாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெறும். பாரம்பரிய முறைப்படி பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மேலும் சுவாமி சிலைகள் ஊர்வலம் புறப்படும் இடத்தில் இருந்து கேரள மாநில எல்லை வரை பொது மக்கள் திரண்டு நின்று பூப்பந்தல் மற்றும் அலங்கார வளைவுகள் அமைத்தும். மின் விளக்குகளால் அலங்கரித்தும் வரவேற்பு கொடுப்பார்கள்.

    தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் சாமி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படும். இதில் தமிழக-கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்த சாமி சிலைகள் ஊர்வ லத்தில் யானையும் பயன் படுத்தப்படும்.

    பின்னர் சாமி சிலை களை மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு. இந்த ஆண்டு நடைபெறும் நவராத்திரி விழாவையொட்டி நேற்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலத்துடன் புறப்பட்டு குமாரகோவில் முருகன் கோவில் வந்தடைந்தது. பின்னர் இன்று காலை பூஜைகள் முடிந்து முன்னுதித்த நங்கை அம்மனுடன் குமாரகோவில் முருகனும் பல்லக்கில் பத்மனாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து கேரள அரசின் பாரம்பரிய மரியாதையுடன் கேரள போலீசார்அணிவகுப்பு மரியாதையுடன் பத்மனாபபுரம் அரண்மனை முன்பு வந்தடைந்தது. அப்போது அங்கு பூசாரிகள் மூலம் பிடிகாணிக்கை வழங்கபட்டது. பின்னர் அரண்மனையில் உள்ள உப்பரி மாளிகையில் பாதுகாக்கப்பட்ட மன்னர் பயன்படுத்திய உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பூஜைகளுக்கு பின்னர் அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார் உடைவாளை எடுத்து கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அந்த உடைவாளை அவர் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார். அவர் குமரி மாவட்ட இணை ஆணையர் ஞானசேகரிடம் வழங்கினார். பின்னர் இது அரண்மனை ஊழியர் சுதர்சனிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து அரண்மனை ஊழியர் உடைவாளுடன் முன் சென்றார். யானையில் சரஸ்வதி அம்மன், 2 பல்லக்கில் முன்னுதித்த நங்கையம்மன், முருகன் ஆகியோர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிகழ்ச்சிகளில் கேரளா பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் குமாரகுருபரன், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, தாசில்தார் வினோத், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், நகர தி.மு.க. செயலாளர் சுபிகான், மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவர் குமரி ரமேஷ், நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், மத்திய அரசு வக்கீல் வேல்தாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலமாக சென்ற சுவாமிகளை வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நின்று வழிபட்டனர். இன்று கேரளபுரம் திருவிதாங்கோடு வழியாக ஊர்வலம் குழித்துறை செல்கிறது. அங்கு தங்கிவிட்டு நாளை காலை சாமி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு தமிழக எல்லையான களியக்காவிளை செல்கிறது. அங்கு கேரள மாநில அரசு முறைப்படி மரியாதை செலுத்தப்பட்டு நெய்யாற்றின் கரையில் தங்க வைக்கபடுகிறது. தொடர்ந்து புறப்பட்டு திருவனந்தபுரம் ஆரிய சாலையில் வந்தடைகிறது.

    அங்கு 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்கிறது. 10 நாள்கள் பூஜை முடிந்து அங்கிருந்து சாமி சிலைகள் மீண்டும் புறப்பட்டு குமரி வந்தடைகிறது.

    • நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் மட்டும் 25-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது.
    • 5-ந்தேதி அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

    மக்களை துன்புறுத்தி வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு 10-வது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அம்மன் கோவில்களில் 10 நாட்களும் திருவிழா கொண்டாடப்படும்.

    அதன்படி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில், தென்னூர் உக்கிரமாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நவராத்திரி விழா தொடங்குகிறது. அன்று முதல் 5-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.

    உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் மட்டும் 25-ந்தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. இதையொட்டி தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) இரவு அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல் திருச்சி கருமண்டபம் வசந்தநகர் ஜெயநகர் வெற்றி விநாயகர் கோவிலில் 26-ந் தேதி முதல் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

    • திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. 4-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி தெய்வானையுடன் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் நவராத்திரி திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 4-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவை யொட்டி கோவர்த்தனாம்பிக்கைக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.

    திருவிழாவின் முதல் நாளான 26-ந்தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம் 27-ந்தேதி நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், அலங்காரம், 28-ந்தேதிஊஞ்சல் அலங்காரம், 29-ந்தேதி பட்டாபிஷேகம் அலங்காரம், 30-ந்தேதி திருக்கல்யாணம் அலங்காரம் ,அக்டோபர் 1-ந்தேதி தபசுக்காட்சி அலங்காரம், 2-ந்தேதி மகிஷாசூரமர்த்தினி அலங்காரம், 3-ந்தேதி சிவபூஜை அலங்காரம், 4-ந்தேதி சரஸ்வதி பூஜை நடக்கிறது திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக 5-ந்தேதி மாலை பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்க குதிரையில் எழுந்தருளி எட்டுதிக்குமாக அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவிலுக்குள் கம்பத்துடி மண்டப வளாகத்தில் நவராத்திரியையொட்டி கொலு பொம்மைகள் போல சுவாமி எழுந்தருள கூடிய அனைத்து வாகனங்களும் ஒரே இடத்தில் வைக்கப்படுவது தனிசிறப்பாகும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • பெண்கள் மலர் தூவி அம்மனை வழி அனுப்பி வைத்தனர்.
    • இந்த பவனி வருகிற 25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது.

    தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநக ராக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் இருந்தபோது அரண்மனையில் உள்ள மண்டபத்தில் நவராத்திரி விழா விமரிசையாக நடந்து வந்தது. பின்னர், தென் திருவிதாங்கூர் தலைநகர் திருவனந்த புரத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த நவராத்திரி விழாவும், திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாறியது.

    இதற்காக ஆண்டுதோறும் குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய சாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது காலந்தொட்டு நடந்து வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இதையடுத்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோவிலில் அதிகாலையில் பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேள தாளங்களுடன் கோவிலை விட்டு வெளியே எடுத்து வரப்பட்ட அம்மனுக்கு கேரள, தமிழக போலீசார் மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், இணை ஆணையர் ஞானசேகர், தாசில்தார் சேகர், பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எடுத்து வரப்பட்ட அம்மன் 4 ரத வீதிகளிலும் வலம் வந்தது. அப்போது பெண்கள் விளக்கு ஏற்றியும், மலர் தூவியும் அம்மனை வழி அனுப்பி வைத்தனர். சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன் ஆசிரமம், கோட்டார், பார்வதிபுரம் வழியாக இன்று மாலை பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்டசாமி கோவிலை சென்றடைகிறது. நாளை (23-ந்தேதி) காலையில் வேளிமலை குமாரசுவாமி விக்ரகம் பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும். பின்னர் அங்கிருந்து கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் விக்ரகங்கள் பவனி தொடங்கும் முன்னதாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்மனையில் உள்ள உப்பரிகை மாளிகையில் நாளை காலை 7.30-க்கு நடக்கிறது.

    இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக, கேரள உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கெட்டு வந்தடையும் சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டுவரப்பட்டு பூஜை கள் செய்யப்படும்.

    அங்கிருந்து அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்கில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை வேளிமலை முருகன் ஆகியோர் வீற்றிருக்க பெண்களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும்.

    இந்த பவனி வருகிற 25-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது. அங்கு தொடங்கும் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளி மலைமுருகன் ஆரியசாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலும் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின்னர் விஜயதசமி முடிந்து அங்கிருந்து விக்ரகங்கள் பவனியாக புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தடையும்.

    • 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 26-ந் தேதி காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும், காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி, இரவில் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வருதல் போன்றவை நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம் போன்றவற்றில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வருவார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 9.15 மணிக்கு அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

    நிகழ்ச்சியில் யானை ஊர்வலம், குதிரை ஊர்வலம், முத்துக்குடை ஊர்வலம், நாதஸ்வரம், பஞ்சவாத்தியம், செண்டை மேளம், தேவராட்டம், கோலாட்டம் போன்றவை இடம்பெறுகின்றன. ஊர்வலம் முடிவில் மகாதானபுரத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு வருதல் நடைபெறும்.

    நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு விழா நடக்கிறது. தொடர்ந்து ஆண்டுக்கு 5 முக்கிய நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்கள் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் பரிவேட்டை நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் பக்தர்கள் சங்கம் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா அக்டோர் 1-ந் தேதி முதல் 5 -ந் தேதி வரை நடக்க உள்ளது.
    • 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் வசிக்கும் மேற்கு வங்க மக்கள் சார்பில் திருப்பூர் பெங்காலி கல்ச்சுரல் அசோசியேஷன் இயங்கி வருகிறது. இவர்கள் நவராத்திரி விழாவில் துர்கா சிலைகளை செய்து திருப்பூரில் பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கால், 2 ஆண்டுகள் விழா நடைபெறாத நிலையில் 14வது ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா அக்டோர் 1-ந்தேதி முதல் 5 -ந் தேதி வரை, சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கொல்கத்தா பாணியில் சிலை வடிவமைக்கப்படுகிறது.

    கொல்கத்தாவில் இருந்து வந்துள்ள 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள், துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி, விநாயகர் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    இது குறித்து சிலைகள் வடிவமைக்கும் கலைஞர்கள் கூறியதாவது :- கொல்கத்தாவில் இருந்து களி மண், கங்கை ஆற்று மண், வைக்கோல், கயிறுகள் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைகளை அங்கிருந்து கொண்டுவர இயலாது என்பதால் திருப்பூர் வந்து சிலை வடிவமைக்கிறோம்.இயற்கை வண்ணத்தால் கலர் கொடுத்து அலங்கரிக்கப்படும். மேலும் கொல்கத்தாவை போலவே ஜரிகை, ஜடாமுடி, அலங்கார பொருட்களை கொண்டு தத்ரூபமாக அலங்காரத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படும். சிலை வடிமைப்பு பணி 25-ந் தேதிக்குள் நிறைவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் புலவர் ராஜாராம் தலைமையில் பட்டிமன்றம்.
    • மதுரை, மீனாட்சியம்மன் கோயிலில் சுசித்ரா குழுவினரின் பக்தி பாட்டு, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் மஹதி குழுவினரின் பக்தி இன்னிசை.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குட முழுக்குகள் நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்கள் புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்ற மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

    2022-2023-ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது, கோவில்களில் திருவிழா மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மீண்டும் முதற்கட்டமாக 48 முதுநிலை கோவில்களில் சிறப்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இறையன்பர்கள் பயன் பெறும் வகையில் முதற்கட்டமாக முக்கிய கோயில்களில் அந்தந்த மாவட்ட கலை பண்பாட்டுத் துறையினருடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்திட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தேச மங்கையர்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் புலவர் ராஜாராம் தலைமையில் பட்டிமன்றம், மதுரை, மீனாட்சியம்மன் கோயிலில் சுசித்ரா குழுவினரின் பக்தி பாட்டு, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் மஹதி குழுவினரின் பக்தி இன்னிசை, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் எஸ்.கே. நாட்டிய கலா நிகேதன் அகாடமி நடத்தும் பரதநாட்டியம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

    மேலும், ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மேல்மலையனூர், அங்காளம்மன் கோவில், சென்னை, சூளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களிலும் நவராத்திரி திருவிழாவின்போது ஆன்மிக சொற்பொழிவு, பரத நாட்டியம், பக்தி இன்னிசை, வில்லுப்பாட்டு, கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நவராத்திரி திருவிழாவின்போது முக்கிய கோயில்களில் நடத்தப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகளில் இறையன்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில்.
    • நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது.

    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதாவது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மஹாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அதர்மமான மகிஷாசூரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக 9 நாட்கள் கடும் தவம் புரிந்து, 10-வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்தலத்தின் மரபு.

    அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி, அக்டோபர் மாதம் 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 26-ந் தேதியன்று அம்மன் குமாரிகா அலங்காரத்திலும், 27-ந் தேதி திரிமூர்த்தி அலங்காரத்திலும், 28-ந் தேதி கல்யாணி அலங்காரத்திலும் (துர்க்கை அம்சம்) எழுந்தருளுகிறார்.

    29-ந்தேதி ரோகினி அலங்காரத்திலும் 30-ந்தேதி காளகா அலங்காரத்திலும், அக்டோபர் மாதம் 1-ந்தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார். அக்டோபர் 2-ந் தேதி ஸாம்பவி, துர்கா அலங்காரத்திலும், 8-ம் நாள் விழாவான 3-ந்தேதி சுபத்ரா அலங்காரத்திலும், (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார்.

    அக்டோபர் 4-ந்தேதி விஜயதசமியன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • இந்த ஆண்டு நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்குகிறது.
    • 27-ந்தேதி முதல் 5 -ந்தேதி வரை ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை நடைபெறும்.

    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    நவராத்திரி விழாவினை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு தினந்தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படும். அதேபோன்று கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் உற்சவர் காமாட்சி அம்மன் மாலை நேரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    நவராத்திரி மண்டபத்தில் தினந்தோறும் மாலையில் சிறப்பு இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. பாட்டு, மாண்டலின், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், வீணை, சிறப்பு தவில், நாதஸ்வரம் போன்ற கச்சேரிகள் புகழ்பெற்ற இன்னிசை கலைஞர்களால் நாள்தோறும் நடைபெறுகிறது.

    வருகிற 26-ந்தேதி தொடங்க உள்ள நவராத்திரி விழாவில் 27-ந்தேதி முதல் 5 -ந்தேதி வரை தினந்தோறும் காமாட்சி அம்மன் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ சக்கரத்திற்கு நவ ஆபரண பூஜை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெறும்.

    அந்த நேரத்தில் கோவில் கருவறை மூடப்பட்டிருக்கும். பின்னர் ஒரு மணிக்கு கோவில் நடை திறந்து நவாபரண பூஜையின் சிறப்பு பிரசாதமான சங்கு தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இது மிகவும் சக்தி வாய்ந்த பிரசாதம் ஆகும்.

    • இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
    • சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி 22-ந்தேதி நடக்கிறது.

    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த விழா 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்பு இந்த விழாவில் கலந்து கொள்ளும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அங்கு நவராத்திரி விழா முடிந்த பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சாமி சிலைகள் குமரி மாவட்டத்தில் இருந்து வருகிற 23-ந் தேதி ஊர்வலமாக புறப்பட்டு செல்கின்றன.

    முன்னதாக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி 22-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு இரவு பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலை சென்றடைகிறது.

    23-ந் தேதி காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உப்பரிகை மாளிகை மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் உடைவாளை கேரள தேவசம் மந்திரி குமரி மாவட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் மற்றும் முருகன் சிலைகள் பல்லக்கிலும், சரஸ்வதி அம்மன் சிலை யானை மீதும் திருவனந்தபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்படும். ஊர்வலம் அன்றையதினம் இரவு குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்கும். 24-ந் தேதி குழித்துறையில் இருந்து புறப்பட்டு நெய்யாற்றங்கரை கிருஷ்ணன் கோவிலை சென்றடையும்.

    25-ந் தேதி காலையில் அங்கிருந்து புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலை சென்றடையும். அங்கு தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மனை கோட்டையில் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் பூஜைக்காக வைப்பார்கள். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனை செந்திட்டை அம்மன் கோவிலிலும், குமாரகோவில் முருகனை ஆரிய சாலையில் உள்ள சிவன் கோவிலில் வைத்தும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் விழா முடிந்த பிறகு மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டத்திற்கு கொண்டுவரப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட தேவசம் நிர்வாகமும், கேரள தேவசம் நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.

    • நவராத்திரி உற்சவம் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • 5-ந்தேதி அம்மன் சிவன்-பார்வதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. அதையொட்டி காமாட்சியம்மன் தினமும் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதை முன்னிட்டு 23-ந்தேதி கோவிலில் ஆலய சுத்தி எனப்படும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து 26-ந்தேதி கலச ஸ்தாபனம், அங்குரார்ப்பணம், 27-ந்தேதி காமாட்சிதேவி அலங்காரம், 28-ந்தேதி ஆதிபராசக்தி அலங்காரம், 29-ந்தேதி மாவடி சேவா அலங்காரம், 30-ந்தேதி அன்னப்பூர்ணாதேவி அலங்காரம், அக்டோபர் மாதம் 1-ந்தேதி மஹாலட்சுமி அலங்காரம், 2-ந்தேதி சரஸ்வதிதேவி அலங்காரம், 3-ந்தேதி துர்காதேவி அலங்காரம், 4-ந்தேதி மகிஷாசுர மர்த்தினி அலங்காரம், 5-ந்தேதி விஜயதசமியை முன்னிட்டு அம்மன் சிவன்-பார்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் ெதரிவித்தனர்.

    • காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.
    • நவராத்திரி திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா, வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெற்று வரு கின்றன.

    இந்த விழா காலங்களில் 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேக புனித நீர், விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த வைகாசி விசாக திருவிழாவின் போது யானை பயன்படுத்தப்பட வில்லை. இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் சில கட்டுப்பாடுகள் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.

    வைகாசி விசாக விழா வின் 10 -ம் நாள் நடந்த தேரோட்டத்தின் போது தேர் தடி எடுத்து போடு வதற்கு கூட யானை பயன்படுத்தப்படவில்லை. இது பக்தர்களுக்கு மன வேத னைைய ஏற்படுத்தியது. இந்த நிலையில் நவராத்திரி திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இந்த விழாவின் போது பாரம்பரிய முறைப்படி 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை எடுத்துவருவதற்கு யானையை பயன்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்காக வனத்துறையின் அனும தியை பெற இந்து அற நிலையத்துறையினர் தற்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×