search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.

    சென்னை:

    மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது. பாக். ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.

    தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை கேட்டுக் கொண்டுள்ளார்.

    • கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.
    • மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    மும்பை:

    ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.

    பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா.வால் போதிய வெற்றியை பெற முடியாததற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    • அன்டோனியோ குட்டெரஸ் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார்.
    • இந்தியா வந்துள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார்.

    அகமதாபாத்:

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டெரஸ் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. சபை பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்திய பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் 26/11 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திற்கு சென்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில், குஜராத் சென்றுள்ள ஐ.நா.சபை பொது செயலாளர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை எகிப்து செல்கிறார்.
    • இந்தப் பயணத்தில் இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 15-ம் தேதி 2 நாள் பயணமாக எகிப்து செல்கிறார்.

    இந்தப் பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நியூசிலாந்து சென்றுள்ள வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே பேசினார்.
    • அப்போது, எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் என குறிப்பிட்டார்.

    வெலிங்டன்:

    வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டனில் புதிய இந்தியத் தூதரக துணை அலுவலகத்தை மந்திரி ஜெய்சங்கர் திறந்துவைத்தார். அப்போது நியூசிலாந்து வாழ் இந்திய வம்சாவளியினர் இடையே பேசுகையில் அவர் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு எப்போதும் நாம் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இந்தியா, நியூசிலாந்து இடையே வர்த்தகம் உள்பட பல துறைகளில் நம் உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

    கிரிக்கெட்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. நியூசிலாந்து வீரர் ஜான் ரைட்டை இந்தியர் எவரும் மறக்க மாட்டர்கள். ஐ.பி.எல். போட்டியைப் பார்க்கும் எவரும் ஸ்டீபன் பிளெமிங்கை புறக்கணிக்க முடியாது.

    கிரிக்கெட்டில் நமது அணி வெற்றிபெற வேண்டும் என்றே விரும்புவோம். அதே நேரத்தில் மற்ற அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்போம்.

    எனக்கு பிடித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர், ஆனால் அது வேறு விஷயம் என குறிப்பிட்டார்.

    • இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது.
    • பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது.

    வதோதரா:

    குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை. இந்த வகையான நடத்தை மற்றும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தது என்பதை நீங்கள் உலகிற்கு எப்படி காட்டுவீர்கள். நரேந்திர மோடி அரசு, இராஜ தந்திர நடவடிக்கையால் மற்ற நாடுகளையும் (பாகிஸ்தான்) பயங்கரவாத பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வைத்துள்ளது.

    இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது. அண்டை நாடு (பாகிஸ்தான்) சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது. பயங்கரவாதம் இப்போது கட்டுப்படுத்தப்படா விட்டால் எதிர்காலத்தில் அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாக உணர்த்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.

    இதற்கு முன், இது வேறு எங்கோ நடப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என நினைத்து, மற்ற நாடுகள் இதை புறக்கணித்தன. இன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் (பாகிஸ்தான்) மீது அழுத்தம் உள்ளது. இது எங்களின் இராஜதந்திர நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரஷியாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
    • இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    வாஷிங்டன்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 


    இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:

    உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது. 


    தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது.

    பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றம் அவர் குறிப்பிட்டார்.

    • தற்போதைய உலகுக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும்.
    • இந்தியா எப்போதும் பல வளரும் நாடுகளுக்காக பேசுகிறது.

    நியூயார்க் :

    ஐ.நா. பொதுச்சபை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க்கில் நேற்று முன்தினம் அவர் ஐ.நா. ெபாதுச்சபையில் உரையாற்றினார்.

    அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவு மந்திரிகளையும் அவர் சந்தித்து பேசினார். மேலும் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசையும் அவர் சந்தித்தார்.

    இத்துடன் தனது அமெரிக்க பயணத்தின் முதல் பகுதியை நிறைவு செய்து 2-வது பகுதி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று வாஷிங்டன் பயணமானார்.

    முன்னதாக இந்திய பத்திரிகையாளர்களை நியூயார்க்கில் சந்தித்து பேசினார். அப்போது தனது முதல் பாதி அமெரிக்க பயணத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலகின் தற்போதைய நிலையை இந்த ஐ.நா. பொதுச்சபை பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் தற்போதைய உலகுக்கு இந்தியா மிகவும் முக்கியமானது ஆகும். நாம் ஒரு பாலம், ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு ஊடகமாக இருக்கிறோம்.

    உலக அளவில் தெற்கின் குரலாக இந்தியா பரவலாகக் கருதப்படுகிறது. இந்தியா எப்போதும் பல வளரும் நாடுகளுக்காக பேசுகிறது. சர்வதேச மன்றங்களில் அவர்களின் பிரச்சினைகளை அழுத்தமான முன்னிலைப்படுத்துகிறது.

    உலகப் பொருளாதாரத்தில் உணவு மற்றும் எரிபொருளின் விலை, உரங்கள் பற்றிய கவலை, கடன் நிலைமை ஆகியவை தற்போது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. இது பல நாடுகளுக்கு ஆழ்ந்த கவலைகளை கொடுத்துள்ளது.

    இந்த பிரச்சினைகள் செவிசாய்க்கப்படாமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த உணர்வுகளை பேசுவது, இதற்காக குரல் கொடுப்பது, இந்தியாதான்.

    கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த ஐ.நா. பருவநிலைமாற்ற மாநாடு மற்றும் சமீபத்திய பிராந்திய சந்திப்புகளில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து பலரும் என்னிடம் பேசினர். இது நிலப்பரப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகிய இரண்டும் சார்ந்தது ஆகும்.

    இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உருவாக்கியுள்ளது. அந்தவகையில் இந்த உலகில் இந்தியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதற்கு பிரதமரின் தலைமைத்துவம், அவரது பிம்பம், உலக அரங்கில் அவர் என்ன செய்துள்ளார் என்பதும் தான் காரணம்.

    இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

    இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் பிரேசிலுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதற்கு ரஷியா ஆதரவு தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக ஐ.நா. பொதுச்சபையில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவ் பேசும்போது கூறுகையில், 'இந்தியாவும், பிரேசிலும் முக்கிய சர்வதேச செயல்பாட்டாளர்களாகவும், கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெறுவதற்கு தகுதியான உறுப்பினர்களாகவும் இருப்பதை கவனிக்கிறோம்' என்று தெரிவித்தார்.

    பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதும் இந்த கருத்தை அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது
    • பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது.

    பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நட்பு நாடுகள் பலமுறை ஐ.நா.சபையில் தீர்மானங்கள் கொண்டு வந்தன. ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்து நிறுத்தியது.

    இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வில் இந்தியா சார்பில் பேசிய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் இதை கடுமையாக குறை கூறினார். தமது உரையில் தமது தெரிவித்துள்ளதாவது:

    பல தசாப்தங்களாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை இந்தியா உறுதியாக பின்பற்றுகிறது. எங்கள் பார்வையில், எந்த ஒரு பயங்கரவாதச் செயலையும் நியாயப்படுத்த முடியாது. எவ்வளவு புனிதமானதாக இருந்தாலும், பயங்கரவாதத்தின் ரத்தக் கறைகளை மறைக்க முடியாது.

    ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகளைப் பாதுகாக்கும் நாடுகளும் உள்ளன. ஐ.நா.வின் தடைகளை அரசியலாக்குபவர்கள், சில சமயங்களில் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அளவிற்கு கூட அதை செய்கிறார்கள். அவர்களின் சொந்த நலனுக்கோ அல்லது அவர்களின் நற்பெயருக்கோ அதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன.
    • எனது முதல் பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

    பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அனுப்பியிருந்த செய்தியை, பிரதமர் மோடியிடம் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் எடுத்துரைத்தார். பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் அதிபர் மேக்ரோனுடன் நடந்த சந்திப்புகளை பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்த கேத்தரின்,  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். 


    பின்னர் பேசிய பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளதாவது: ஒரு மந்திரியாக இந்தியா வருவது இதுவே முதன்முறை, எனது முதல் பயணமாக இந்தியாவை தேர்வு செய்தேன்.  இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. பாதுகாப்புத் துறையில், வேறு எந்த நாடும் வழங்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிந்து கொள்வதை நினைத்து பிரான்ஸ் பெருமை கொள்கிறது. உலக அமைதி மற்றும் ஸ்திர தன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஒரு வழிப் பாதையாக இருக்க முடியாது.
    • இந்தியாவுடனான சீனாவின் உறவு கடினமான கட்டத்தில் உள்ளது.

    சாவ் பாலோ:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: 

    இந்தியா – பிரேசில் இடையே சிறந்த நட்புறவு நிலவி வருகிறது. ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு சிறந்த இணைப்புப் பாலமாக திகழும் இந்திய வம்சாவளியினருக்கு நன்றி.

    உறவு ஒரு வழிப்பாதையாக இருக்க முடியாது, அதைத் தக்க வைக்க பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். சீனா அண்டை நாடு, ஒவ்வொருவரும் தங்கள் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறார்கள்.

    இந்தியாவுடனான எல்லை ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளன. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் இரு நாடுகளுடனான உறவில் கறை படிந்த நிழல் போல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.
    • சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது.

    பாங்காக் :

    சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5' இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பலில், 750 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    எனவே, கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை சீன உளவு கப்பல் கண்காணித்து பாதுகாப்பு ரகசியங்களை சேகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதுதொடர்பான கவலைகளை இந்தியா தெரிவித்ததால், கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. அதனால், கடந்த 11-ந் தேதி வரவேண்டிய கப்பல், தாமதமாக 16-ந் தேதி வந்து சேர்ந்தது.

    இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள், கப்பலின் தானியங்கி அடையாள சாதனத்தை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும், இலங்கை கடல் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளை இலங்கை அரசு விதித்து இருப்பதாக தெரிகிறது.

    22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இந்தநிலையில், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம், சீன உளவு கப்பல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

    அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்கள், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துவோம்.

    இந்தியாவின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வையும் மிக மிக உன்னிப்பாக கண்காணிப்போம். இதை ஏற்கனவே எங்கள் செய்தித்தொடர்பாளர் சொல்லி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, சீன உளவு கப்பலின் கேப்டன் ஜாங் ஹாங்வாங் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும். பன்னாட்டு கப்பல்கள் வந்து செல்லும் சர்வதேச துறைமுகம் என்ற முறையில், சர்வதேச நடைமுறைப்படி, தேவையான உதவிகளை இந்த துறைமுகம் அளிக்கும் என்று நம்புகிறோம்.

    சீன கப்பலின் வருகையால், விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா-இலங்கை இடையிலான தொடர்பு வலுப்படும். இரு நாடுகளின் மக்கள் இடையிலான நட்புறவு மேலும் வளரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான்சன் லியு கூறியதாவது:-

    இலங்கை அரசும், இலங்கை துறைமுக ஆணையமும் அனுமதிக்கும் பன்னாட்டு கப்பல்களை இந்த துறைமுகம் வரவேற்று வருகிறது. கடந்த மாதம் வரை, நூற்றுக்கணக்கான எண்ணெய், எரிவாயு கப்பல்கள், சுற்றுலா கப்பல்கள். படகுகள் ஆகியவை வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×