search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓணம் பண்டிகை"

    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலையில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்வையிட வருவார்கள்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்கும்போது இங்கும் பண்டிகை தொடங்கிவிடும். பண்டிகை நாட்களில் அரண்மனை முன்பு ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும். அதில் ஆடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. மேலும் ஓணம் பண்டிகையான நேற்று அரண்மனை திறக்கப்படவில்லை. அரண்மனை வாசல் இழுத்து மூடப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கம் போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் அரண்மனை மூடப்பட்டிருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டுதோறும் ஓணம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொண்டாடப்படாதது பத்மநாபபுரம் பகுதி மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரண்மனை வாசல் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பத்மநாபபுரம் நகராட்சி துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், கவுன்சிலர்கள் வினோத், நாகராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் குமரி ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போதிய நிதி இல்லாததால் இந்த ஆண்டு ஓணம் விழா கொண்டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா வழக்கம் போல் கொண்டாட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப்.
    • ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்தே மாநிலம் முழுவதும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்தபடி இருந்தது.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்தார். கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப் (வயது52).

    முன்னாள் தேசிய கைப்பந்து வீராங்கனையான இவர் மலப்புரம் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் தான் மேரிக்குன்னு பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

    அங்கு நடத்தப்பட்ட இசை நாற்காலி போட்டியில் பங்கேற்று விளையாடியபோது ஜிப்சி திடீரென சுருண்டு விழுந்தார். சுயநினைவின்றி காணப்பட்ட அவர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

    ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓணம் கொண்டாட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • நேஷனல் அகாடமியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி யில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை வகித் தார். கல்லூரி ஆசிரியர்கள் மது, மோனிஷா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதக் கத்துல்லா வரவேற்றார். ஒணம் பண்டிகையொட்டி கல்லூரியில் மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கபட்டன. முடிவில் ஆசிரியர் பூவிழி நன்றி கூறினார்.

    • செய்யது ஹமீதா கலை கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் அனைவரும் புத்தாடை அணிந்து வந்து கல்லூரி வளாகத்தில் அத் தப்பூ கோலமிட்டு உற்சாகத்து டன் ஓணம் பண்டிகை கொண்டாடினர். நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் ராஜ சேகர் கலந்து கொண்டு பேசுகையில், ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஓணம் திருவிழா இன்றும் மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருவதோடு இந்திய கலாசார நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது என்றார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற் பாடுகளை தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் மலர், வணிகவியல் துறை தலை வர் யமுனா, அனைத்து மகளிர் பேராசிரியர்களும் மாணவிகளும் செய்திருந்தனர். முகமது சதக் அறக்கட்டளை தலைவர் மற்றும் தாளாளர் முகமது யூசுப், நிர்வாக இயக்குநர் ஹாமிது இப்ராகிம், செயலர் ஷர்மிளா, நிர்வாக இயக்குனர் கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    • ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
    • மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள்.

    மார்த்தாண்டம் :

    கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. பள்ளித்தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். இயக்குநர் இலக்கியா, முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முன்னிலை வகித்தனர், கவுரவ விருந்தினர்களாக வெள்ளறடை ஆர்.எம். தேவி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் மோகன், தென்காசி எஸ்.எம்,ஏ கல்விக்குழுமத்தின் இயக்குனர் டாக்டர் ராஜ்குமார், கரிக்ககம் ஸ்ரீ குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

    மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் டைட்டன்ஸ், ஒலிம்பியன்ஸ், ஸ்பார்டன்ஸ் என மூன்று குழுக்களாகப் பிரிந்து அத்தப்பூ கோலமிட்டார்கள். மாணாக்கர்களும் ஆசிரியர்களும் பாரம்பரிய ஆடை அணிந்திருந்தார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது
    • அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர்

    திருவட்டார் :

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் கேரளா முறைப்படி ஓணவில் பெருமாளுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர். இதையடுத்து ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன் மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

    தொடர்ந்து ஓணவில்கள் கிருஷ்ணசாமி சன்னதியிலும், ஆதிகேசவப்பெருமாள் சன்னதியிலும் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.

    • கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.
    • குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

    கோவை:

    கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. இந்த பண்டிகை 10 நாட்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு ஓணப்பண்டிகை கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோலமிடுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கேரள மக்கள் தங்கள் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட தொடங்கினர். 10 நாட்களிலும் 10 வகை பூக்களை வைத்தும் அத்தப்பூ கோலம் போட்டும் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    10-வது நாளான இன்று ஓணம் பண்டிகை வெகுவிமரிசையாக கேரள மக்களால் கொண்டாடப்பட்டது.

    கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரியிலும் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள்.

    கோவை மாநகரில் சித்தாபுதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவிலான கேரள மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலும் உள்ளது.

    இன்று இங்குள்ள மக்கள் அதிகாலையிலேயே எழுந்து, தங்கள் வீடுகள் முன்பு பெரிய அளவிலான பூக்கோலங்களை வரைந்து, மாவேலி மன்னனை வரவேற்று ஓணம் பண்டிகையை கொண்டாடினர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய உடையணிந்து வீட்டில் பல வகை உணவுகளை தயாரித்து சுவாமிக்கு படையல் வைத்து சாமி கும்பிட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். அங்கு வந்திருந்த அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 500 கிலோ பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் மற்றும் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது அங்கு வந்திருந்தவர்களை மிகவும் கவர்ந்தது. பக்தர்கள் அத்தப்பூ கோலத்தை பார்வையிட்டனர்.

    மேலும், தங்களது சொந்தபந்தங்கள், அக்கம்பக்கத்தினருக்கு உணவு, உடை மற்றும் பரிசு பொருட்களை அளித்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்பது கேரளா பழமொழி. அதற்கேற்ப, அறுசுவைகளில் கசப்பை தவிர மற்ற காய்கறிகளை வைத்து 64 வித உணவு வகைகளை கேரள மக்கள் தயாரித்து பரிமாறி மகிழ்ந்தனர்.

    இதுதவிர திருவாதிரைக் களி நடனம், ஊஞ்சல் கட்டி ஆடுவது, கயிறு இழுத்தல், பாடல்களை இசைக்க விட்டு அதற்கு ஏற்ப நடனம் ஆடுவது, புலி வேஷமிட்டு நடனமாடுவது என பல வகைகளிலும் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    பல்வேறு பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மகளிர் ஒன்றாக இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஓணம் திருவிழாவை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகைகளை கட்டி உள்ளது.

    இதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஓணம் பண்டிகைகளை கட்டியது. குன்னூர் ரெயில் நிலையம், வெலிங்டன், ராணுவ மையம் போன்றவற்றிலும் ஓணம் பண்டிகை விமரிசையாக நடந்தது.

    பூக்கோலமிட்டு, மாவேலி அரசரை பொதுமக்கள் வரவேற்றனர். தொடர்ந்து தங்கள் பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனமாடினர்.

    கேரளாவில் தொடர் விடுமுறை என்பதால் நீலகிரிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்துள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    • அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது
    • அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமை ந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட்டது. ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.விழாவை யொட்டி அனைத்து துறை மாணவ-மாணவிகளும் புத்தாடை அணிந்து, ஊஞ்ச லாடி, இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

    மேலும் அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது. விழாவில் கல்லூரி துணை தலைவர் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்
    • புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    நாகர்கோவில் :

    கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    நாகர்கோவிலில் வடசேரி பகுதிகளில் பொதுமக்கள் ஓண ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடைகளை அணிந்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் அவர்கள் ஓண ஊஞ்சலாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    நாகர்கோவிலில் பல்வேறு பகுதிகளிலும் ஓண ஊஞ்சல் வீடுகள் முன்பு கட்டப்பட்டிருந்தது. அதில் குடும்பத்தோடு ஆடி மகிழ்ந்தனர். வீடுகள் முன்பு அத்தப்பூ கோலமும் போடப்பட்டிருந்தது. பல்வேறு கலரிலான பூக்களில் பெண்கள் கோலமிட்டு மகிழ்ந்தனர். வடசேரி கிருஷ்ணன்கோவில் வடிவீஸ்வரம், பார்வதிபுரம் வெட்டூர்ணிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளும் முன்பு அத்தபூக்கோலம் போடப்பட்டிருந்தது. கேரளாவை ஒட்டியுள்ள களியக்காவிளை, மார்த்தாண்டம், மேல்புறம், குழித்துறை, தக்கலை பகுதிகளிலும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதிகளில் வீடுகள் முன்பு அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. புத்தாடைகளை அணிந்து பெண்கள் ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    ஓணம் பண்டிகையைடுத்து இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டிலும் வியாபாரிகள் பூக்களை வாங்குவதற்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் ஓணம் பண்டிகையையொட்டி விடிய விடிய பூக்கள் வியாபாரம் நடந்தது.

    ராயக்கோட்டை, பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மதுரை, திண்டுக்கல், சங்கரன்கோவில் பகுதியில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்டத்தில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வந்து இருந்தது.

    பிச்சிப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டது. மற்ற பூக்கள் குறைவான அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.

    • திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
    • பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.

    திண்டுக்கல்:

    கேரளாவில் பிரசித்தி பெற்ற பண்டிகைகளுள் ஒன்று ஓணம் பண்டிகை. பண்டிகை நாளன்று மக்கள் வீட்டின் முன்பு பலவகை வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிடுவர். புத்தாடை அணிந்து, 10க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்தளித்து கொண்டாடி மகிழ்வர். ஓணம் பண்டிகை கேரள மாநிலம் மட்டுமின்றி தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி திண்டுக்கல்லில் வசித்து வரும் தமிழக வாழ்வு கேரளா மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். பாலகிருஷ்ணாபுரம் விஸ்தரிப்பு பகுதி சர்வேயர் நகரில் கேரளாவைச் சேர்ந்த செந்தில் - பினு தம்பதியினர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீட்டு வாசலில் அத்தப்பூ கோல மிட்டு மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்றனர்.

    10 நாட்களாக வீட்டு வாசலில் மலர்களால் கோலமிட்டு வந்தனர். இன்று பவள மல்லி, தாமரை, வாடாமல்லி, டோரியா, சம்பங்கி உள்ளிட்ட 9 வகையான பூக்கள் கொண்டு 10 அடுக்கு வரிசையில் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் உறவினர்களுடன் பருப்பு, பால் பாயசம், அப்பளம், இஷ்டு, அவியல், ஓலன், காலன், புளி இஞ்சி உள்ளிட்ட 12 வகையான உணவு பதார்த்தங்கள் உடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

    • சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளத்தின் அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகை ஓணம்.

    மகாபலி சக்கரவர்த்தியை சூழ்ச்சியால் வீழ்த்திட திருமால் வாமனராக அவதரித்து பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன் முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்பது வரலாறு.

    அதன்படி மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுக்கு ஒருமுறை மக்களை காண வருவதாகவும், அவரை வரவேற்கும் விதமாக திருவோண திருநாளாவை கேரள மக்கள் கொண்டாடுகின்றனர். சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளத்தின் அறுவடைத்திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந்தேதி தொடங்கியது. அன்று முதலே கேரள மாநிலம் ஓணம் கொண்டாட்டத்தால் களைகட்ட தொடங்கியது.

    மாநிலத்தில் பல இடங்களில் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் நடைபெற்றன. பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் நடந்த ஓணம் கொண்டாட்டங்களில் மாணவ-மாணவிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடைகள் அணிந்தனர். பின்பு உறவினர்கள், நண்பர்களுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

    ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் போடப்படும் அத்தப்பூ என்ற பூக்கோலம் ஆகும். அதன்படி இன்று அனைவரின் வீடுகளின் முன்பும் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்தன.

    அனைத்து வீடுகளின் முன்பும் அத்தப்பூ கோலங்கள் வரையப்பட்டிருந்ததால் எங்கு பார்த்தாலும் வண்ணமயமாக காட்சியளித்தது. அது மட்டுமின்றி பல இடங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடந்தன. அதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் கலந்துகொண்ட ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் தங்களின் வீடுகளில் பல வகையான சிறப்பு உணவுகள் தயார் செய்தனர். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் பல வகையான உணவுகளை தயாரித்து குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் தங்களின் வீட்டில் தயாரித்த உணவு பதார்த்தங்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தால் கேரள மாநிலம் முழுவதும் இன்று களை கட்டி காணப்பட்டது.

    கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளின் படியே ஓணம் கொண்டாடப்பட்டது. வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிந்தபடியே அனைவரும் காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று இல்லாத காரணத்தால் 3 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் முகக்கவசம் அணியாமல் ஓணம் பண்டிகை கொண்டாடியதை காண முடிந்தது.

    • ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
    • கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    போரூர்:

    ஓணம் பண்டிகை நாளை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்கள் விலை சற்று அதிகரித்து உள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், சேலம் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இன்று 40 வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு குவிந்து இருந்தன.

    ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. கனகாம்பரம் கிலோ ரூ.400-க்கும் மல்லி-ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை விபரம் (கிலோவில்) வருமாறு:-

    சாமந்தி- ரூ.100வரை, பன்னீர் ரோஸ்-ரூ.70, சாக்லேட் ரோஸ்-ரூ.120, அரளி- ரூ.200, மல்லி-ரூ.300, முல்லை-ரூ.180, ஜாதி-ரூ.240, சம்பங்கி-ரூ.150, கனகாம்பரம் -ரூ.400.

    இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூ விற்பனை விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிகாலை முதலே மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பூ கடைக்காரர்களின் வரத்து குறைந்து இருந்தது. பூ விற்பனை மந்தமாகவே நடந்து வருகிறது என்றனர்.

    ×