search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் டாக்டர் கொலை"

    • பெண் டாக்டர் கொலையாளிகளை தண்டிக்கக் கோரி பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆர்.ஜி.கர். மருத்துவமனை முன்னாள் முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பெண் டாக்டர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சி.பி.ஐ. விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

    ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய மருத்துவ சங்கம் உத்தரவிட்டது.

    • பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
    • கொல்கத்தா நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந்தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி கொல்கத்தாவில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மாணவ அமைப்பினர் அறிவித்தனர்.

    அதன்படி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா நகரம் நேற்று போர்க்களம் போல் காட்சியளித்தது.


    இந்த நிலையில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டதை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்புக்கு மாநில பாஜக அழைப்பு விடுத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. அங்கு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அரசு பஸ் டிப்போ, மெட்ரோ நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இதேபோல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பாஜகவின் முழு அடைப்பு போராட்டத்தை தோல்வி அடைய செய்ய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.


    முழு அடைப்பின் போது பஸ்கள் மீது கற்கள் வீசப்படும் என்ற சூழல் நிலவியதால் டிரைவர்கள், நடத்துனர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டத்தை பாஜக.வினர் தொடங்கினர்.

    அதே வேளையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டிரைவர்கள், நடத்துனர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பஸ்களை இயக்கினர்.

    அதே போல் மற்ற வாகனங்கள் இடையூன்றி செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் மேற்கு வங்காளம் முழுவதும் காலை முதல் பஸ் சேவை பாதிக்கப்பட்டன. கொல்கத்தாவில் குறைந்த அளவில் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கப்பட்டன. இன்று அதிகாலை ஹூக்ளி ரெயில் நிலையத்தில் பாஜகவினர் மறியல் செய்தனர்.

    பராக்பூரில், பாஜகவினர் ரெயில்களை மறித்தனர். இதனால் உள்ளூர் ரெயில்கள் பல்வேறு வழித் தடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. கொல்கத்தாவில் சில கடைகள், மார்க்கெட்டுகள் வழக்கம் போல் திறந்திருந்தது.

    ஆனால் முழு அடைப்பு காரணமாக மோதல் சம்பவங்கள் நடைபெறும் என்பதால் கொல்கத்தாவில் மக்கள் வெளியே வர வில்லை. மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தனியார் வாகனங்கள் ஓடவில்லை. இதனால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

    சிலிகுரி, பிதான்நகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது.


    முழு அடைப்பு அறிவிப்பையடுத்து பாஜகவினர் இன்று காலை முதலே சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாஜகவினர் பொது மக்களை தடுத்து நிறுத்தி வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க முழு அடைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்.

    அவர்கள் சாலைகளில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.

    மேலும் போராட்டம் நடத்த வந்த பாஜக கட்சியினரை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    கூச் பெஹார் பகுதியில் போராட்டம் நடத்த சென்ற 2 பாஜக எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கொல்கத்தாவின் பாட்டா சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் லாக்கெட் சட்டர்ஜியை போலீசார் கைது செய்தனர். அப்போது எத்தனை பேரை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அதிகமானோர் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று சாட்டர்ஜி கூறினார்.

    இதேபோன்று மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் மாணவர் தலைவர் சயான் லஹிரியும் கைது செய்யப்பட்டார்.

    பாஜகவின் முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பந்த் அனுசரிக்க வேண்டாம் என்று வியாபாரிகளை கேட்டுக் கொண்டனர்.

    இதற்கிடையே பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வடக்கு 24 பர்கானாஸ், அலிபுர்து வார் உள்ளிட்ட இடங்களில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது. இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடிக்கும் சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

    மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினரையும் போலீசார் விரட்டியடித்தனர். சிலரை பிடித்து சென்றனர். இதே போல மாநிலம் முழுவதும் இரு கட்சி தொண்டர்கள் இடையே மோதல் சம்பவங்கள் அதிகளவில் ஏற்பட்டது. இதை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் பாஜக தலைவர் பிரியங்கு பாண்டே கூறும்போது, வடக்கு 24 பர்கானாசின் பட்பாராவில் இன்று அதிகாலை எனது கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டினார்.

    மேலும் பாஜக நிர்வாகிகள் நேதா அர்ஜுன் சிங், பிரியங்கு பாண்டே ஆகியோர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கூறும்போது, உயர்நிலைப் பள்ளிகளை பாஜகவினர் வலுக்கட்டாயமாக மூடுகின்றனர். மேற்கு வங்காளம் உங்களை ஏன் புறக்கணிக்கிறது என்பதை வலுப்படுத்தியதற்காக பாஜகவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

    பாஜகவின் இந்த 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தால் மேற்கு வங்காளத்தில் இயல்பு வாழ்க்கை சிறிய அளவில் பாதிக்கப்பட்டது.

    • பெண் டாக்டர் கொலை விவகாரத்தை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
    • மாணவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர், கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.

    கொல்கத்தா:

    பெண் டாக்டர் கொலை விவகாரம் தொடர்பாக சில மாணவ அமைப்புகள் நீதி கேட்டு தடையை மீறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

    கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் புறப்பட்டு வந்தனர். தலைமைச் செயலகம் நோக்கிய பேரணியில் பங்கேற்ற அவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்துகொண்டனர்.

    ஹவுரா பாலம் மற்றும் சந்திரகாச்சி ரெயில் நிலையம் அருகில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து போலீசார் அவர்கள்மீது தடியடி நடத்தியதால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளித்தது.

    இதற்கிடையே, கொல்கத்தாவில் போலீசார் நடந்து கொண்ட விதம் பற்றிய புகைப்படங்கள், ஜனநாயக கொள்கைகளை மதிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மாநில அரசின் இந்த செயலைக் கண்டித்து நாளை மாநிலம் முழுவதும் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.

    • பெண் டாக்டர் கொலை விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
    • இன்று பேரணி நடத்திய மாணவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    கொல்கத்தா:

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இச்சம்பவத்தால் நாடுமுழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சுப்ரீம் கோர்ட்டின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர்.

    இதற்கிடையே, பெண் டாக்டர் கொலைக்கு நீதி வேண்டியும், உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரியும், முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக கோரியும் இன்று அம்மாநில தலைமைச் செயலகத்துக்கு பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக மாணவர் அமைப்பான பாஸ்கிம் பங்கா சத்ர சமாஜ் (மேற்குவங்க மாணவர் சமூகம்) அறிவித்தது. இது பதிவு செய்யப்படாத அமைப்பு ஆகும். அதேபோல், மாநில அரசு ஊழியர்களின் அமைப்பான சங்க்ராமி ஜெவுதா மஞ்சாவும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.

    இந்நிலையில், தலைநகர் கொல்கத்தாவில் இரு பகுதிகளில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு பேரணியாகப் புறப்பட்டு தலைமைச் செயலகத்தை மாணவர்கள் முற்றுகையிட திட்டமிட்டனர். இந்தப் போராட்டத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனாலும் இன்று காலை மாணவர்கள் அதிகளவில் திரண்டனர். நேரம் செல்ல செல்ல மாணவர்களின் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் தங்களது கைகளில் பதாகைளை வைத்திருந்தனர்.

    'பெண் டாக்டர்கள் கொலைக்கு நீதி வேண்டும். முதல்வர் மம்தா பானர்ஜி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பேரணியாக செல்ல மாணவர்கள் குவிந்ததால் கொல்கத்தாவில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் பகுதியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சுமார் 6,000 போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தலைமைச் செயலகத்தை சுற்றி உள்ள சாலைகளில் மட்டும் 2,100 போலீசார் குவிக்கப்பட்டனர்.

    சில சாலைகள் மூடப்பட்டன. ஹவுரா மேம்பாலமும் மூடப்பட்டது. அங்கும் போலீசார் குவிக்கப்பட்டனர். மேம்பாலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க அங்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று இணைத்து வெல்டிங் செய்யப்பட்டுள்ளது.

    சாலைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஓட்டல்களில் தங்கி உள்ளவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

    பேரணியை டிரோன்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள். தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளது. தலைமைச் செயலகத்துக்கு செல்லும் பாதைகளில் 19 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் எண்ணையை போலீசார் தடவி உள்ளனர்.

    நிலைமையைக் கண்காணிக்க 26 கலெக்டர்களை அரசு நியமித்துள்ளது. மேலும், கொலை சம்பவம் நடந்த ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்கத்தாவில் இன்று காலை முதலே பதற்றம் நிலவி வருகிறது. போராட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட வாய்ப்பு உள்ளதால், பல கல்வி நிறுவனங்கள் இன்று விடுமுறை அறிவித்தன. சில நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

    மதியம் சுமார் 12.30 மணியளவில் தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி தொடங்கியது. அப்போது சிலர் தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின்மீது கற்கள் வீசப்பட்டன.

    ஹவுரா மேம்பாலத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயற்சித்தனர். அங்கிருந்த தடுப்புகளை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தடுப்புகள்மீது ஏறி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். கலைந்து செல்லாததால் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர், கண்ணீர் புகைகுண்டுகளும் வீசப்பட்டன. இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தாவில் வன்முறை வெடித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவியது.

    • தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடத்தை நோக்கி பேரணிக்கு அழைப்பு.
    • பயிற்சி பெண் டாக்டர் கொலைக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட இருப்பதாக அறிவிப்பு.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த கொடூர கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள ரிஜிஸ்டர் செய்யாத மாணவர்கள் அமைப்பு நபன்னோ நோக்கி இன்று பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

    நபன்னோ மேற்கு வங்காள மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம். முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல முக்கிய மந்திரிகள் அலுவலகம் இங்கு உள்ளது.

    இந்த நிலையில் பேரணி வன்முறையாக வெடித்துவிடக் கூடாது என்பதால் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நல்ல எண்ணம் கொண்ட குடிமக்களின் கோபத்தைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் பிரச்சனையையும் அராஜகத்தையும் உருவாக்குவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்த ஒருவர், நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சி தலைவர் ஒருவரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுவார்கள். தடுப்பு அமைக்கும் 19 இடங்களை கண்டறிந்துள்ளோம். 26 டிசிபி தலைமையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    நபன்னோ பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

    • சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்டதாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவத்தில் நடந்த குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளி வந்த வண்ணம் உள்ளன. பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சிபிஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

    சஞ்சய் ராய் மீது நிதி முறைகேடுகள் தொடர்பாகவழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் விசாரணையைத் தொடங்கினர்.அதன்படி, மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் துணை முதல்வரான சஞ்சய் வசிஸ்ட் ஆகியோர் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் நேற்றைய தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    மேலும் சந்தீப் கோசின் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள் சுமார் 90 நிமிடங்களாக வெளியில் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றை மணி நேரம் கழித்தே சஞ்சய் ராய் வீட்டின் கதவைத் திறந்தார் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் 11 மணிநேரமாக சோதனை நடத்திய அதிகாரிகள் அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

     

    அதேபோல் ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கேட்பாரற்ற சடலங்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது, பயோமெடிக்கல் கழிவுகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சந்தீப் கோஷ் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • சந்தீப் கோஷ் பல்வேறு நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
    • சந்தீப் கோஷிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த 9-ந்தேதி அங்குள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கில் இந்த சம்பவம் நடைபெற்றது. கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

    பயிற்சி டாக்டரின் கொலையை தற்கொலையாக மாற்ற முயன்றதாக ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் சி.பி.ஐ. கடந்த 16-ந்தேதி முதல் விசாரணை மேற் கொண்டு வருகிறது. நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 100 மணி நேரம் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

    சந்தீப் கோஷ் பல்வேறு நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு தேவையான உபகரணங்கள் வாங்கியது உள்ளிட்ட பல வகைகளில் அவர் முறைகேடு செய்தது தெரிய வந்தது.

    இந்த நிதி முறைகேடு தொடர்பாக சந்தீப் கோஷ் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சி.பி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 பேர் காலை 8 மணி முதல் சோதனையை தொடங்கினார்கள். பெலியா கட்டாவில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மத்திய பாதுகாப்பு படையினருடன் சி.பி.ஐ. குழுவினர் காலை 6 மணிக்கே அவரது வீட்டிற்கு சென்று விட்டனர். ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த பிறகு அவர்கள் உள்ளே சென்று சோதனை நடத்தினார்கள்.

    மொத்தம் 14 இடங்களில் அதிரடி சோதனை மேற் கொள்ளப்பட்டது. மருத்துவ மனையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

    அதோடு கல்வி வளாகத்தில் உள்ள உணவகத்துக்கு சென்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருக்கு நெருக்கமானவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது .

    சந்தீப் கோஷிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கூறும்போது, பெண் பயிற்சி டாக்டர் கொலையை மறைக்க சந்தீப் கோஷ் தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இதனால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடமும் உண்மை கண்டறியும் சோதனையை சி.பி.ஐ. மேற் கொண்டது. அப்போது அவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

    பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? அவரை கொலை செய்தது யார்? கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷை முன்கூட்டியே தெரியுமா? எத்தனை பேர் மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் இருந்தீர்கள் என்பது உட்பட 20 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு சஞ்சய் ராய் அளித்த பதில்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டன.

    4 டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

    • அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
    • ஜிப்மர் டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    புதுச்சேரி:

    கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுவை ஜிப்மரில் பணிபுரியும் டாக்டர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 13-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். டாக்டர்களின் இந்த தொடர் போராட்டத்தால் வெளிபுற சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் நோயாளிகள் பெரும் அவதியடைந்தனர்.

    இந்த நிலையில் போராட்டத்தை விலக்கிக்கொள்ளும்படி சுப்ரீம்கோர்ட்டு டாக்டர்களுக்கு அறிவுறுத்தியது. இதனால் ஜிப்மர் டாக்டர்கள் நேற்று மாலை போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதையடுத்து ஜிப்மரில் உள்ள அனைத்து புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் சி.டி., எம்.ஆர்., ஸ்கேன் சேவைகள் அனைத்து சேவை பிரிவுகளும் முழுமையாக இயங்கும் என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவித்தார்.

    இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். ஜிப்மரில் அனைத்து மருத்துவ சேவைகளும் வழக்கம் போல இயங்கின.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிபிஐ திறப்பு விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
    • இதனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எரிச்சலடைந்தார்

    கொல்கத்தா R.G கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் வாதாடுகின்றனர்.

    இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், 'கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாகக் காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்' என்று விளக்கிக்கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.

    இதனால் எரிச்சலடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில் சிபிலை நோக்கி, 'ஒரு பெண் குரூரமான முறையிலும் கண்ணியக்குறைவான வகையிலும் உயிரிழந்துள்ளாள். அதற்காக குறைந்தபட்சம் சிரிக்காமலாவது இருங்கள்' என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
    • பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. உச்சநீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும் பல வழக்குகளில் பாலியல் வன்கொடுமைகள் கொடூர கொலையில் முடிகின்றன."

    "இது தொடர்பாக கிடைத்த தரவுகளின்படி, நாட்டில் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என்ற தகவல் அச்சமடைய செய்கிறது. இது சமூகம், தேசத்தின் நம்பிக்கை, மனசாட்சியை உலுக்குகிறது."

    "பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமையாகும். இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்."

    "இத்தகைய வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை.
    • சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய்.

    இந்நிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

    இந்த மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    • பெண் டாக்டர் கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான குளறுபடிகள் நடந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-இடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்தது. இன்றைய விசாறணையின் போது வழக்கு தொடர்பாக கொல்கட்டா காவல் துறை மற்றும் சிபிஐ சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையை துவங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினர்.

    இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "உச்சநீதிமன்றம் அமைத்துள்ள 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழு மருத்துவர்களின் கோரிக்கைகளைக் கண்டிப்பாகக் கேட்டறியும் என்றும் அவர் உறுதியளித்தார். நீங்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் பணியாற்றிய பிறகு யாராவது உங்களை கேலி செய்தால் அவர்களுக்கு பதில் அளிக்க உடல் அளவிலும், மன ரீதியிலும் நீங்கள் இருப்பதில்லை. நான் மிகமுக்கிய குற்றங்களை கூட குறிப்பிடவில்லை."

    "பொதுவான வேலை நிலைகளை பற்றியே நாங்கள் குறிப்பிடுகிறோம். நாங்கள் பொது மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறோம். என் குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல்நிலை நலிவுற்று இருந்த போது, நான் அரசு மருத்துவமனையின் தரையில் படுத்து உறங்கியிருக்கிறேன். மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்," என்று தெரிவித்தார்.

    ×