search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி"

    • இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது.
    • சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோவில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடைபெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.

    மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புரட்டாசி: பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.

    சனீஸ்வரன் சிறந்த சிவபக்தன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர். அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன. இராவணனின் மகன் இந்திரஜித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்து விட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர். சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கருப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பிடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்த்து நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சன்னிதானாமடைந்து சனிதோஷம் நீங்கப் பிரார்த்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.

    சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்.

    அகண்ட தீபம்: சில வீடுகளில் மாவிளக்குடன் கூட புத்துருக்கு நெய்யை பெரிய உருளியில் இட்டு, பருத்திக் கொட்டையுடன் கூடிய பஞ்சிலிருந்து கொட்டையைப் பிரித்து, அதை ஒரு புதிய துணியில் வைத்து திரி போல் செய்து உருளியில் உள்ள நெய்க்கு நடுவே வைத்து அதை தீபமாக ஏற்றி மலையப்பனாக ஆவாஹனம் செய்வர். இந்த தீபத்திற்கு வெங்கடேச சஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்வர். துளசி, சாமந்தி மலர்கள் விசேஷம். இந்த தீபம் மாலை வரை எரியும். பின் மாவிளக்கும் ஏற்றி, மலையேறும் நேரம், சர்க்கரைப் பொங்கல், வடை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்வது வழக்கம். பூஜைக்கு வந்துதவிய அந்தணர்களுக்கும் விருந்தளிப்பது (சமாராதனை) சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அந்த குறையன்றுமில்லாத கோவிந்தன் நிறைந்த நல்வாழ்வை அளிப்பான். வேண்டியதைத் தந்திடும் வேங்கடேசனைப் போற்றுவோம்!

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க ஒரு கதை சொல்வார்கள். பெருமாள் கோவில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.

    சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.

    மாவிளக்கு மகிமை: திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப்படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு. அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைப்பது மரபு. எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை திருப்பதி வெங்கடேசப்பெருமாளை நினைத்து வழிபடும் விழாவானதால், அன்று வீட்டிலுள்ள பிள்ளைகளின் நெற்றியில் நாமம் இடுவர். அவர்கள் கையில் நாமமிட்ட பாத்திரம் ஒன்றை அளித்து, நாலைந்து வீடுகளுக்குச் சென்று பிக்ஷை எடுத்து வரச் சொல்லுவர். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    புரட்டாசி சனிக்கிழமை வழிபடுவதால் என்ன நன்மை!

    கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கன்யா (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.

    ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி. அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.

    புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான இன்று காலை 1008 சங்காபிஷேகம் நடந்தது.இதையொட்டி காலை கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் தொடர்ந்து சங்குபூஜை நடந்தது. அப்போது சிவபெருமானின் பஞ்சலோக முக கவசம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதன் முன்னால் நெல் மற்றும் மலர்கள் பரப்பி அதன் மேலே 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவில் வடிவமைத்து இருந்தது. அந்த சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை நடத்தப்பட்டது.

    கோவில் தலைமை அர்ச்சகர் ராஜாமணி அய்யர் மற்றும் சிவாச்சாரியர்கள் இந்த சங்கு பூஜையை நடத்தினர். பின்னர் குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து மதியம் அலங்கார தீபாராதனையும், வாகன பவனியும் நடந்தது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜபெருமானும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    • கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
    • குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடிஉயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று.

    குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடிஉயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது. அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான நாளை (ஞாயிற்றுக்கிழமை) 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7.30 மணிக்கு தீபாரதனையும் நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு சங்கு பூஜையும், 10.30 மணிக்கு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் 12.30 மணிக்கு வாகன பவனியும் நடக்கிறது.

    பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி3முறை மேள தாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு 1 மணிக்கு பக்தர்களுக்குஅருட்பிரசாதம்வழங்குதல் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • தொண்டியில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு நடந்தது.
    • சுவாமிக்கு பால் அபிசேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத உந்தி பூத்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேகங்கள் நடந்தன. புரட்டாசி முழுவதும் விரதம் இருக்கும் பக்தர்கள் அதிகாலை முதலே பெருமாள் கோவிலில் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. கருணாகரன் பட்டர் பூஜை ஏற்பாடுகளை செய்தார். அதே போல தொண்டி அருகே உள்ள முகிழ்தகம் கிராமத்தில் உள்ள சொர்ணம் வருஷம் பெய்த பெருமாள் கோவிலிலும் சுவாமிக்கு பால் அபிசேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. சேகர் பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தார்.

    • 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
    • இன்று ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி சர்வ மகாளய முழு அமாவாசை ஆகும்.

    சேலம்:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி சர்வ மகாளய முழு அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1086 விவசாயிகள், பல்வேறு 648 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 277.079 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 62, 057 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.97,65,895 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    • ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்

    கன்னியாகுமரி:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பர். மேலும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை தரிசிப்பது சிறப்பானது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.

    நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூ டங்கள் வேலை நாளாக இருந்தபோதும் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் அலயம், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேசப்பெருமாள் ஆலயம் ஆகியவற்றில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவி லில் காலை சிறப்பு பூஜை களைத்தொடர்ந்து மதியம் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்ன தானம், மாலையில் சூரி யனின் ஒளிக்கதிர்கள் ஆதி கேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு ஆகியன நடந்தது.

    நேற்று மாலையில் சூரியக் கதிர்கள் விழும் நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இன்றும் சூரியக்கதிர் பெருமாளின் திருமேனியில் விழும் நிகழ்வு நடைபெறும்.

    புரட்டாசி சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர் கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து ஆதி கேசவ சேவா சங்க டிரஸ்ட் சார்பில் பக்தர்களுக்கு பிர சாதம் வழங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கும், வைணவ கோவில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலாத் துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், கடந்த ஆடி மாதம் பிரசித்த பெற்ற அம்மன் கோவில்களுக்கு சுற்றுலாத் துறையுடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பெருமளவில் பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்புகள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    அதன்படி, சென்னையில் புரட்டாசி மாத திருமால் தரிசன சிறப்பு ஆன்மிகச் சுற்றுலாவிற்கு பதிவு செய்துள்ள பக்தர்கள் பங்கேற்கும் ஆன்மிகச் சுற்றுலாவினை இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இப்பயணத்தின் முதல் திட்டத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், பெசன்ட் நகர் அஷ்டலெட்சுமி கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

    இரண்டாவது திட்டத்தில் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோவில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த இரண்டு திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, கோவில் பிரசாதம், கோவில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில் மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.
    • ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பூர் :

    புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் அதிகாலையில், ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமேத வீரராகவப்பெருமாளுக்கு மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. அடுத்தாக, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கோவில் கொடிமரம் அருகே கருட வாகனத்துடன் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காங்கேயம் அருகே உள்ள பெருமாள் மலையில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்போர் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பிரசன்ன வெங்கட பெருமாளுக்கு மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது. சிறப்பு பூஜையில் திருப்பூர், காங்கேயம், சிவன்மலை, ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் அருகே அவிநாசிபாளையத்தில் ராமசாமி கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ராமசாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக அவிநாசிபாளையம் - பொங்கலுார் ரோட்டில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலை 5மணி முதல் இரவு 7 மணி வரை திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையம், திருப்பூர் பழைய பஸ் நிலையம், காங்கயம், பல்லடம், தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    திருப்பூர் மற்றும் அவிநாசியில் இருந்து தாளக்கரை லட்சுமிநரசிம்மர் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கும் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில்,உடுமலை பெரிய கடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில், ஊத்துக்குளி ரோடு தென்திருப்பதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    • மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.
    • புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும்.

    உடுமலை :

    தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இம்மாதத்தில் இறைவனை வேண்டி விரதமிருக்கும் பலர் அசைவத்தை தவிர்ப்பர்.

    இந்நிலையில் உடுமலையில் வஞ்சிரம் கிலோ 450 ரூபாய், விளாமீன் 350, பாறை 300, அயிலை 120, சங்கரா 250, முறால் 300, கட்லா 150, ரோகு 130, ஜிலேபி 80 ரூபாய்க்கு விற்கிறது. முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.ஆனால் நேரம் செல்லசெல்ல கூட்டம் குறைவதால் மீன் விற்பனை குறைகிறது. புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும். தற்போது வரத்து இயல்பாக இருப்பதால் வஞ்சிரம் உட்பட அனைத்து மீன்களின் விலையும் குறைத்தே விற்கப்படுகிறது என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
    • கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    கோவை:

    கோவை மாநகரில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், டி.கே.மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நீலகிரியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

    டி.கே.மார்க்கெட்டில் சாதாரண நாட்களில் கேரட் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாது. தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ கேரட் ரூ.90க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை டி.கே.மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.90, பீன்ஸ்-80, மிளகாய்-ரூ.50, பீட்ரூட்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, குடைமிளகாய்-ரூ.50, பாகற்காய்-ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அவரை-ரூ.60, கத்தரிக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, மொச்சை-ரூ.55, புடலங்காய்-ரூ.45, கோவக்காய்-ரூ.45, சுரைக்காய்-ரூ.50, இஞ்சி-ரூ.40, சேப்பக்கிழங்கு-ரூ.50, சேனை கிழங்கு-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.50, தக்காளி-ரூ.40, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.30, எலுமிச்சை-ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது.

    மார்க்கெட்டுகளை தவிர்த்து அங்காடிகளில் இதை விட காய்கறிகள் விலை அதிகமாக இருந்தது. காரட் ரூ.110, பீன்ஸ் 95, பீட்ரூட் ரூ.75-க்கு விற்பனை ஆனது.

    மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 10 மூட்டை காய்கறிகள் வர வேண்டிய இடத்தில் பாதிக்கு பாதியாக 5 மூட்டை காய்கறிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 3 மாத காலமாகவே காய்கறிகளின் விலை சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.

    தற்போது தான் மழை குறைந்து, மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் காய்கறி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது காய்கறியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் கோவை உக்கடம் மொத்த மீன் சந்தை, சில்லறை மீன் சந்தைகளில் நேற்று விற்பனை மந்தமாக காணப்பட்டது. விற்பனை குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்து விட்டது.

    கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், செல்வபுராம், சரவணம்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நுகர்வு குறைவால் இறைச்சி விலையும் குறைந்தது.

    கடந்த வாரங்களில் ரூ.270க்கு விற்ற 1 கிலோ கோழி இறைச்சி ரூ.70 குறைந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டிறைச்சி 1 கிலோ ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.

    புரட்டாசி மாதம் முடியும் வரை இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்றும் இதனால் விலை 50 சதவீதம் அளவுக்கு குறையும் எனவும் இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
    • புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது.

    ஜோதிடத்தில் 6-வது ராசி கன்னி. கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

    புரட்டாசி மாதம் வடக்கில் இருக்கும் சூரியன், தெற்கு நோக்கி பயணிக்கிறது. இதனால் சூரிய கதிர்வீச்சால் தட்பவெட்பம் மாறுபடுகிறது. இந்த திடீர் மாறுபாடால் நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும். ஆதலால் அசைவ உணவை தவிர்த்து, உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்க சொன்னார்கள்.

    - ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
    • உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர்.

    சேலம்:

    புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, விரதம் இருந்து கோயிலுக்கு செல்வார்கள். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல், விரதம் இருக்கும் பழக்கத்தை இந்துக்கள் வழக்கமாக வைத்துள்ளனர். உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறினர். அதோடு, இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என முன்னோர்கள் ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.

    புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். பெரும்பாலான இந்துக்கள், இந்த மாதத்தில் விரதம் இருப்பார்கள். அதனால், வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். இன்று புரட்டாசி பிறந்ததால் சிக்கன், மட்டன், மீன் வாங்க கடைகளுக்கு செல்வதில்லை.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் சூரமங்கலம் மீன் மார்க்கெட், செல்வாய்பேட்டை, அம்மாபேட்டை அஸ்தம்பட்டி, அன்னதானப்பட்டி, ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிக்கன்,மட்டன் கூட்டம் இல்லாம் வெறிச்சோடி கணப்பட்டது. புரட்டாசி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று சிக்கன், மட்டன் விற்பனை கூட்டம் இல்லாமல் விற்பனை மந்தமாகவே காணப்பட்டது. தற்போது சிக்கன், மட்டன் விலை குறைந்தாலும் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

    ×