search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பிரமுகர் கொலை"

    • தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க தனது நண்பர் ரங்காவுடன் பத்மநாபன் சென்றார்.
    • பாட்டு கச்சேரி நடந்தபோது பத்மநாபன் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    பாகூர்:

    கடலூர் திருப்பாதிரி புலியூர் நவனீதம் நகரை சேர்ந்தவர் பக்தா என்ற பத்மநாபன் (வயது 45) பெயிண்டர் வேலை செய்து வந்த இவர் அப்பகுதி 25-வது வார்டு அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    இவரது தந்தை தெருக்கூத்து கலைஞர் என்பதால் பத்மநாபனுக்கு தெருக்கூத்து மீது ஆர்வம் இருந்து வந்தது. அப்பகுதியில் எங்கு தெரு கூத்து நிகழ்ச்சி நடந்தாலும் பத்மநாபன் அங்கு சென்று நிகழ்ச்சியை பார்ப்பது வழக்கம்.

    நேற்று இரவு புதுவை மாநிலம் பாகூர் அருகே இருளன் சந்தையை அடுத்துள்ள தமிழக பகுதியான திருப்பனாம்பாக்கத்தில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்க்க தனது நண்பர் ரங்காவுடன் பத்மநாபன் சென்றார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் தெருகூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பத்மநாபனும் அவரது நண்பர் ரங்காவும் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இருளன் சந்தை பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கார் திடீரென பத்மநாபன் ஓட்டிச்சென்ற பைக் மீது மோதியது.

    இதனால் பத்மநாபனும் அவரது நண்பர் ரங்காவும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே காரில் இருந்து ஒரு கும்பல் கத்தியுடன் கீழே இறங்கியது. இதனை பார்த்ததும் பத்மநாபனின் நண்பர் ரங்கா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பின்னர் அந்த கும்பல் பத்மநாபனை சுற்றி வளைத்து வீச்சரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் பத்மநாபன் அதே இடத்தில் இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் காரில் தப்பிச்சென்று விட்டது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. கடந்த ஆண்டு திருப்பாபுலியூரில் பாட்டு கச்சேரி நடந்தபோது பத்மநாபன் தரப்பினருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த மோதலில் பாஸ்கரன் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பத்மநாபன் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 9 மாதத்திற்கு முன்பு ஜாமீனில் பத்மநாபன் வந்திருந்தார்.

    அடுத்த மாதம் பாஸ்கரனுக்கு நினைவு நாள் வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாஸ்கரன் கொலைக்கு பழிக்குபழி வாங்க அவரது கூட்டாளிகள் பத்மநாபனை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலை செய்யப்பட்ட பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார்.
    • கொலை சம்பந்தமாக சிலரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38). இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பிரபு அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வருகிறார்.

    திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் கவுன்சிலராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 2021ம் ஆண்டு திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். வாய்ப்பை இழந்த போதிலும் அதிமுகவிலும், வணிகர் சங்க பேரமைப்பிலும் தீவிரமாக பணியாற்றி வந்தார்.பிளக்ஸ் கடை நடத்தி வந்தார்.

    தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பழமார்நேரி சாலை பகுதியில் பாரதிராஜா என்பவர் மீது நடைபெற்ற தாக்குதல் வழக்கில் இவரும் சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வழக்கு நடந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் உட்கார்ந்து இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக பிரபுவை வெட்டினர். தலையில் மற்றும் கழுத்தில் வெட்டு காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றினார். தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொலை செய்யப்பட்ட பிரபுவின் மனைவி சரண்யா திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரில் பழமார்நேரி சாலையில் உள்ள பாரதிராஜாவுக்கும் தனது கணவருக்கும் இடம் குறித்து பிரச்சனை இருந்து வந்தது. இந்த பிரச்சனையில் தற்போதைய பேரூராட்சி கவுன்சிலர் பாஸ்கரன் பாரதிராஜாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். நேற்று இரவு பாரதிராஜா, மணிகண்டன், ரமேஷ் ,மஸ்தான் என்கிற நாகராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து கணவரை வெட்டி கொலை செய்து விட்டனர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.

    வணிகர் சங்க பேரமைப்பில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்ததால் பிரபுவின் உயிரிழப்புக்கு ஆதரவாக திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருக்காட்டுப்பள்ளி நகரில் பதட்டமான ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் போலீசார் குவிக்கபட்டுள்ளது.

    திருவையாறு துணைப்போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், மற்றும் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக சிலரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    • கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    • கொலையாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரத்தை சேர்ந்தவா் பிச்சை ராஜ் (வயது 52). அ.தி.மு.க. பிரமுகரான இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் ஆவார்.

    தற்போது ஜே.சி.பி. வைத்து தொழில் செய்து வந்த நிலையில், அப்பகுதியில் டாஸ்மாக் பாரும் நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று இரவு அவர் பாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    பேட்டை வீரபாகுநகர் ரெயில்வே சுரங்கப்பாதை பகுதியில் சென்ற போது, அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த கும்பல் திடீரென பிச்சைராஜ் மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் அவரது கழுத்து, முகம் மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.

    சம்பவ இடத்தை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதா, உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    சமீபத்தில் அவரது பாரில் வந்து சிலர் மது அருந்திவிட்டு தகராறு செய்துள்ளனர். அவர்களை பிச்சைராஜ் சத்தம் போட்டு அங்கிருந்து விரட்டி விட்டுள்ளார்.

    இதனால் அந்த கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தொழில் போட்டியில் இந்த கொலை நடந்திருக்கலாமா? அல்லது கோவில் திருவிழா தகராறு காரணமாக அவரது உறவினர்கள் யாரேனும் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறியும் பிச்சைராஜின் உறவினர்கள் இன்று பேட்டை போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கொலையாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • பஞ்சநாதனை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூரைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது57). அ.தி.மு.க.வில் 3-வது வார்டு கிளை செயலாளராக இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

    இவர் வீட்டு முன்பு புதிதாக 2 கடைகள் கட்டி உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பஞ்சநாதன் தனது கடை முன்பு தூங்கினார். இன்று அதிகாலை அப்பகுதி மக்கள் அவ்வழியே சென்றபோது கடையின் அருகில் ரத்த வெள்ளத்தில் பஞ்சநாதன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பஞ்சநாதனை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளங்கோவனுக்கு எதிரிகள் யார்- யார்? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • சஞ்சய் உள்பட 5 பேரையும் கொலை நடந்த 2 மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூர் பகுதி அ.தி.மு.க. செயலாளராக இருந்து வந்தவர் இளங்கோ.

    வியாசர்பாடி கக்கன்ஜி காலனி ராணி மெய்யம்மை தெருவில் வசித்து வந்தார். அ.தி.மு.க.வில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவரை வியாசை இளங்கோ என்று கட்சியினரும் அப்பகுதியை சேர்ந்தவர்களும் அழைத்து வந்தனர்.

    நேற்று இரவு 10.30 மணி அளவில் அங்குள்ள முத்து மாரியம்மன் கோவில் தெரு அருகே இளங்கோ நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. அவர்களது கையில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இளங்கோ அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அதற்குள் 5 பேர் கொண்ட கும்பல் இளங்கோவை நாலாபுறமும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

    இதில் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காயங்கள் விழுந்தன. இதை தொடர்ந்து அலறி துடித்த இளங்கோ ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதன் பிறகு கொலை கும்பல் அவரை மீண்டும் மீண்டும் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இளங்கோ துடிதுடித்து பலியானார். அவரை வெட்டிக்கொன்ற கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொலை நடந்த பகுதியில் திரண்டனர். அ.தி.மு.க. பிரமுகர்களும் விரைந்து வந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செம்பியம் போலீசார் உடனடியாக நேரில் சென்று விசாரணையை முடுக்கிவிட்டனர்.

    கொலையாளிகள் யார்? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் 5 பேர் ஒன்று சேர்ந்தே இளங்கோவை தீர்த்து கட்டியதும் அவர்கள் வயது 17 வயதில் இருந்து முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து இளங்கோவனுக்கு எதிரிகள் யார்- யார்? என்பது பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க.வினரும் திரண்டு கொலையாளிகளை உடனடியாக பிடிக்க போலீசிடம் வற்புறுத்தினார்கள்.

    போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு, இணை ஆணையர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோரது மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடுபாபு, இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபரான சஞ்சய் என்பவர் தலைமையில் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து இளங்கோவை திட்டம் போட்டு தீர்த்து கட்டியிருக்கும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    சஞ்சயுடன் சேர்ந்து வெங்கடேசன், அருண் குமார், கணேசன் மற்றும் ஒரு வாலிபர், 17 வயது சிறுவன் ஆகியோர் இளங்கோவை துடிக்க துடிக்க கொலை செய்திருப்பது அம்பலமானது.

    இவர்களில் 17 வயது சிறுவன் பிளஸ்-2 படித்து வருவதும், சஞ்சய்யின் நண்பரான இவன் 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதற்கிணங்க கொலையாளியாக மாறி இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    இதையடுத்து சஞ்சய் உள்பட 5 பேரையும் கொலை நடந்த 2 மணி நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் இளங்கோவை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சஞ்சய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளான். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் பாட்டு கச்சேரி நடந்தபோது நானும் எனது நண்பர்களும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தோம்.

    அப்போது இளங்கோ எங்களை தாக்கிவிட்டார். அவரிடம் அடிவாங்கியபோது நான் சிறுவனாக இருந்தேன். அதனால் என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. இதன் பின்னர் எங்கள் பகுதியை சேர்ந்த பலர் என்னை பார்த்து இளங்கோவிடம் அடிவாங்கியவன் என்று அடிக்கடி கூறி வந்தனர். இதனால் இளங்கோ மீது எனக்கு கடுமையான வெறுப்பு ஏற்பட்டது.

    இளங்கோவை ஏதாவது செய்ய வேண்டும் என்கிற வெறி எனக்குள் ஏற்பட்டது. இது தொடர்பாக எனது நண்பர்களிடம் தெரிவித்தேன். தாக்கியதற்கு பதிலடியாக நாமும் தாக்கினால் மீண்டும் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று எண்ணினோம்.

    எனவே அடித்ததற்காக பழி வாங்க திட்டமிட்டோம். இதற்காக திட்டம் போட்டு காத்து இருந்தோம். கடந்த சில நாட்களாகவே இளங்கோவின் நடவடிக்கைகளை கண்காணித்தோம். அவர் தனியாக செல்லும்போது போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான நேரம் பார்த்து காத்திருந்தோம். இதையடுத்து நேற்று முழுவதும் இளங்கோவை பின்தொடர்ந்து இரவில் அவர் தனியாக நடந்து சென்றபோது சுற்றி வளைத்து தீர்த்து கட்டினோம்.

    இவ்வாறு சஞ்சய் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இளங்கோவின் உடல் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். கொலை சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு வியாசர்பாடி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்த போது தனியார் நிதி நிறுவனத்தில் விஜயலட்சுமி மூலம் அதன் உரிமையாளர் எழிலரசனிடம் ரூ.15 லட்சம் பணத்தை கட்டிஉள்ளார்.
    • செந்தில் குமார் அவர்கள் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் நிதி நிறுவனம் குறித்து சமூகவலைதளத்தில் தகவல்களை பகிர்ந்தார்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (40). அ.தி.மு.க.வில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி பெருமாட்டுநல்லூர் கூட்டு ரோட்டில் மர்மகும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    விசாரணையில் நிதி நிறுவனத்தில் கட்டிய ரூ.15 லட்சத்தை கேட்ட தகராறில் செந்தில் குமார் கூலிப்படையை ஏவி வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த நிதிநிறுவன மேலாளர் விஜயலட்சுமி, அதன் உரிமையாளர் ஈரோடு பகுதியை சேர்ந்த எழிலரசன் மற்றும் கூலிப்படையில் உள்ள அயனாவரத்தை சேர்ந்த பிரவீன், இவரது தம்பி பிரசாந்த், கிரண்லால், சுஜைகாந்தி, விக்கி என்ற விக்னேஸ்வரன், ராகுல், கொடுங்கையூரை சேர்ந்த ஆகாஷ், பெரம்பூரை சேர்ந்த முருகேசன் என்ற முகேஷ், அம்பத்துரை சேர்ந்த சரத் என்ற சண்முகம் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட கூலிப்படையினரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் குடியிருந்த போது தனியார் நிதி நிறுவனத்தில் விஜயலட்சுமி மூலம் அதன் உரிமையாளர் எழிலரசனிடம் ரூ.15 லட்சம் பணத்தை கட்டிஉள்ளார். பின்னர் செந்தில் குமார் அவர்கள் இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். மேலும் நிதி நிறுவனம் குறித்து சமூகவலைதளத்தில் தகவல்களை பகிர்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த விஜயலட்சுமியும், எழிலரசனும் பணத்தை திருப்பி கேட்டால் தீர்த்து கட்டி விடுவோம் என்று செந்தில் குமாருக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர். இதில் பயந்து போன செந்தில்குமார் காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து கொண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூரில் வீடு கட்டி குடியேறி இருந்தார். இந்த நிலையில் விஜயலட்சுமியும், எழிலரசனும் கூலிப்படையை ஏவி செந்தில்குமாரை தீர்த்து கட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கொலையாளிகளிடம் இருந்து 5 மோட்டார்சைக்கிள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×