search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல் 2024"

    • ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றன
    • எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை என்றார் அர்ஜுன் மோத்வாடியா

    வரும் ஏப்ரல்-மே மாத காலகட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.

    2014லிருந்து 2 முறை மத்தியில் ஆட்சியமைத்த பா.ஜ.க., 3-ஆம் முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

    பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் கட்சி, நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சியினருடன் கூட்டணி அமைத்து, வெல்வதற்கு வியூகம் அமைத்து வருகிறது.

    இந்நிலையில், இன்று, குஜராத் மாநில போர்பந்தர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அர்ஜுன் மோத்வாடியா (Arjun Modhwadia), குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சிஆர் பாட்டில் (CR Paatil) முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.


    தனது முடிவு குறித்து அர்ஜுன் மோத்வாடியா தெரிவித்ததாவது:

    காந்திஜி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற நல்ல தலைவர்கள் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வடிவில் நாட்டிற்கு கிடைத்துள்ளனர்.

    வளர்ச்சியை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல பிரதமர் மோடியின் கனவை நனவாக்க பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன்.

    எனக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தரவில்லை.

    மக்களுடன் காங்கிரசிற்கு இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து விட்டது. உ.பி. மாநில அயோத்யாவில் நடைபெற்ற பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை புறக்கணித்ததன் மூலம், காங்கிரஸ், மக்களின் உணர்வை புரிந்து கொள்ள தவறி விட்டது.

    இவ்வாறு மோத்வாடியா தெரிவித்தார்.

    முன்னதாக, "கனத்த இதயத்துடன்" காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும், தான் விலகுவதாக அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கு கடிதம் எழுதினார்.

    40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் அர்ஜுன் மோத்வாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2014, 2019 தேர்தல்களில் எளிதாக மோடி வென்று பிரதமர் ஆனார்
    • கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையின்மை பா.ஜ.க.விற்குத்தான் பயன்படும்

    பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. சில தினங்களில் அதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிடுவார்.

    2014ல் பாரதிய ஜனதா கட்சியை தலைமையாக கொண்டு அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை எதிர்த்து களமிறங்கியது. அதுவரை குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்டு, தேர்தலில் வென்று பிரதமரானார்.

    2019 தேர்தலில் மீண்டும் என்.டி.ஏ போட்டியிட்டு வென்று, பா.ஜ.க.வின் மோடி இரண்டாம் முறையாக பிரதமரானார்.

    2024 தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த கடந்த 2023ல் பல மாநிலங்களில் உள்ள பா.ஜ.க.வை எதிர்க்கும் சுமார் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கின.

    ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட தங்கள் மாநிலங்களில் அதிக வெற்றி வாய்ப்புகளை உடைய கட்சிகளின் தலைவர்கள் இதை உருவாக்கினர்.

    இவர்கள் ஒருங்கிணைந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து மோடிக்கு எதிராக முன்னிறுத்துவார்கள் என்று அரசியல் விமர்சகர்களாலும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களாலும் பெரிதும் நம்பப்பட்டு வந்தது.

    ஆனால், அண்மையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் தனித்து போட்டியிட போவதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே கூட்டணி ஆட்சி குறித்து பேச முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "திரிணாமுல் காங்கிரஸ் இல்லையென்றால் இந்தியா கூட்டணி இல்லை" என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.


    இதே போல், ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து விட்டது.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பா.ஜ.க.வுடன் இணைய திட்டமிட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன. காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி சம்பந்தமாக சரிவர பேசுவதில்லை என சில மாதங்களுக்கு முன் நிதிஷ் விமர்சித்திருந்தார்.

    தொடக்கம் முதலே கூட்டணிக்கு தலைமை பொறுப்பை காங்கிரஸ் விரும்பியது தெளிவாக தெரிந்தது. பிரதமர் வேட்பாளராக ராகுலை பிற கட்சிகள் ஆதரிக்க வேண்டும் என அதன் தலைமை விரும்புகிறது.

    கடந்த நவம்பரில் காங்கிரஸ் கட்சி, வட இந்தியாவில் ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியடைந்தது.


    இப்பின்னணியில், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை காங்கிரசுடன் ஒத்து போகவில்லை.

    மேலும், கேரளாவில் பா.ஜ.க. இன்னும் செல்வாக்கு பெற்ற கட்சியாக வளரவில்லை. அங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்று என காங்கிரஸ் உள்ள நிலையில், அவர்களாலும் மாநிலத்தில் எதிர்த்து மத்தியில் ஆதரிக்க முடியுமா என்பது சந்தேகமே.

    தமிழ்நாட்டில் "நாற்பதும் நமதே" என களமிறங்கியுள்ள தி.மு.க. தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை கொடுக்க சம்மதிப்பதும் கேள்விக்குறிதான்.


    தமிழகத்தை பொறுத்த வரை நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம், கேட்கும் இடங்களை தி.மு.க. தராவிட்டால் அக்கட்சி 40 இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் வதந்திகள் உலா வருகிறது.

    நாம் தமிழர் கட்சி 40 இடங்களிலும் வழக்கம் போல் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளில் எத்தனை பேர் அ.தி.மு.க. அணிக்கு தாவி செல்வார்கள் என்பதும் உறுதியாகவில்லை.

    இப்பின்னணியில், வெல்வதில் தீவிரம் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ள தி.மு.க., காங்கிரசுடன் சமரசம் செய்து கொள்வது கடினம்.

    தே.ஜ.கூ. அணியில், தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த பிரதமர், அந்த வெற்றியை அரசியல் பிரசாரத்தில் பயன்படுத்தலாம். இது மக்களவை தேர்தலில் முக்கிய மாநிலமான உ.பி.யில் உள்ள இடங்களை வெல்ல பா.ஜ.க.விற்கு பயன்படும்.

    காங்கிரசின் முதன்மை பதவிக்கான ஆசை, பிரதான கூட்டணி தலைவர்களின் மாநிலத்தில் மட்டுமே உள்ள செல்வாக்கு, தற்போது நிலவும் ஒற்றுமையின்மை, ஒரு சில தலைவர்களின் "மதில் மேல் பூனை" நிலைமை ஆகியவை "வெல்ல முடியாதவர்" என்கிற பிம்பம் கொண்ட பிரதமர் மோடிக்கு வலு சேர்க்கவே பயன்படும் என்பதை இந்தியா கூட்டணி உணர்ந்தாக வேண்டும்.


    "ஊர் ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்" எனும் பழமொழியை "இந்தியா கூட்டணி" தலைவர்கள் நினைவில் வைத்து கொள்வது நல்லது. அவர்களது ஒற்றுமையின்மையால் மோடி "ஹாட்ரிக்" அடிக்க வாய்ப்புண்டு.

    • பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

    பாராளுமன்ற தேர்தல் 2024 விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் நிர்வாகிகள் சந்திப்புக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இதில் கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட "நிர்வாகிகள் சந்திப்பு" கீழ்க்கண்ட அட்டவணைப்படி சென்னை, அண்ணா சாலை, "அண்ணா அறிவாலயத்தில்" நடைபெறும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 543ல், தமிழகத்தின் 39 பாராளுமன்ற இடங்களும் அடங்கும்
    • இந்திய தேர்தல் ஆணைய கூட்டம் 2 நாட்கள் நடைபெற உள்ளது

    2024 ஜூன் மாதம், 17-வது பாராளுமன்றத்தின் காலம் நிறைவடைகிறது.

    மொத்தம் உள்ள 543 இடங்களுக்கான தேர்தல் இவ்வருடம் மே இறுதிக்குள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் 39 பாராளுமன்ற தொகுதிகளும், புதுச்சேரியின் 1 தொகுதியும் அடங்கும்.

    இது குறித்து ஆலோசிக்க அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த போகிறது. இதற்காக தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் இறுதி பட்டியல் குறித்தும் விவாதித்து முடிவு எடுக்க நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம், 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும், பாராளுமன்றத்திற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதற்கு ஆணையம் தயாராக உள்ளதாக சில தினங்களுக்கு முன் சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இம்ரான் கானின் வேட்பு மனு, தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
    • நேர்மையற்றவர் எனும் தீர்ப்பால் போட்டியிடும் தார்மீக உரிமையை இழக்கிறார் என்றது ஆணையம்

    பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட பாகிஸ்தான் பிடிஐ (PTI) எனப்படும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (Tehreek-e-Insaf) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரான அவரது மனு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருடன் அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    முறையற்ற காரணங்களை கூறி இம்ரானின் மனு தள்ளுபடி ஆனதாக அவர் கட்சி, தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தது.

    இம்ரான் கானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் சுமார் 8 பக்கம் கொண்ட அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

    ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேர்மையற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்தகைய ஒருவர் தேர்தலில் போட்டியிட தார்மீக உரிமை இழந்தவராகிறார். இம்ரானின் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் அவர்கள் கூறிய தொகுதிகளில் வசிக்கவில்லை; அதுவும் ஒரு காரணம். அரசு கஜானாவிற்கு சேர்க்க வேண்டிய பொருளை முறைகேடாக பயன்படுத்தி லாபம் ஈட்டிய வழக்கில் நேர்மையற்றவராக கருதி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தகுதியின்மை அவருக்கு தொடர்கிறது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் தார்மீக உரிமையை இம்ரான் இழக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிடிஐ கட்சியின் 90 சதவீத தலைவர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • போர் 635 நாட்களை கடந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ரஷியா ஆக்ரமித்தது.

    அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. அமைதிக்கான முயற்சிகளை பல உலக நாடுகள் முன்னெடுத்தாலும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அவற்றை ஏற்கவில்லை.

    இரு தரப்பிலும் பலத்த கட்டிட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டாலும், போர் 635 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    போரினால் ரஷியாவில் உயிரிழப்பு மட்டுமல்லாது உள்நாட்டு பொருளாதாரமும் நலிவடைந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    போருக்கு காரணமான புதினுக்கு எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகிறது.

    போருக்கு பிறகு ரஷியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக அடுத்த வருடம் மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

    போருக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களில் "யெகேத்ரினா டன்ட்ஸோவா" (Yekaterina Duntsova) எனும் பெண் சுயேட்சை அரசியல்வாதியும் ஒருவர். இவர் முன்னாள் தொலைக்காட்சி ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் புதினுக்கு எதிராக போட்டியிட யெகேத்ரினா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், ரஷிய தேர்தல் ஆணையம் அவரது மனுவில் நூற்றுக்கும் மேற்பட்ட தவறுகள் உள்ளதாக காரணம் காட்டி மனுவை நிராகரித்தது. அந்நாட்டு தேர்தல் சட்டப்படி, ஆதரவாளர்களின் கையெழுத்தை பெற வேண்டிய அடுத்த கட்டத்திற்கு யெகேத்ரினா செல்வதை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மூலம் முடக்கியுள்ளது.

    இந்த முடிவை எதிர்த்து ரஷிய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார்.

    தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புதினின் செயல்களுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
    • கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு

    அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.

    இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.

    நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.

    இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.

    பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.

    இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:

    பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.

    கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.

    ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.

    இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.

    இவ்வாறு பின்டு கூறினார்.

    • பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்த மத்திய அரசு, அரசாணை வெளியிடவில்லை
    • கட்டாயம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலும் நடைபெறாது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஆளுநர் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தொகுதி வரையறை முடிவடைந்த பின்னர் தேர்தல் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், அதற்கான வேலைகள் நடந்த பாடில்லை.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை என தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உமர் அப்துல்லா கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில், பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. கார்கில் மாவட்டத்தை நிர்வகிக்கும் தன்னாட்சி அமைப்பான லடாக்- கார்கில் மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 22 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 26 இடங்களில் தேசிய மாநாட்டு கட்சி 12, காங்கிரஸ் 10, பா.ஜனதா, சுயேட்சை தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த வெற்றி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் பிரதிபலிக்கும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நாங்கள் தற்போது ஐந்து ஆண்டுகளாக கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறோம். 2019-ம் ஆண்டிற்குப் பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது. ஏன் தேர்தலை தள்ளிப்போட வேண்டும்.

    சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் கட்டாயம் இல்லை என்றால், அதையும் நடத்த பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு தைரியம் இல்லை.

    மக்களின் உணர்வை அவர்கள் நன்றாக புரிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை நடுத்துவது அவர்களது கட்டாயம். அது கட்டாயம் இல்லை என்றால், பாராளுமன்ற தேர்தலை நடத்தமாட்டார்கள். அவர்கள் மக்களை எதிர்கொள்ள வெட்கப்படுகிறார்கள். பாராளுமன்ற தேர்லுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து உள்ளிட்ட எந்த தேர்தலும் இருக்காது.

    LAHDC-Kargil தேர்தல் முடிவு அவர்களுடைய அச்சத்தை நிரூபித்து விட்டது. தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி 26 இடங்களில் 22 இடங்களை பிடித்தது. வெற்றி பெற்ற இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் கூட எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இவ்வாறு உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

    ×