search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் 9 பேர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவித்திடக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    அக்கடிதத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிக அதிகபட்ச எண்ணிக்கை இது என கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள 87 மீனவர்கள், 175 படகுகளை விரைவாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி.
    • புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.

    டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ராணிப்பேட்டையில் அமைகிறது. இதற்கான திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த ஆலையில், ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை முதல் முறை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்.

    தற்போது வரை ஜாகுவார் நிறுவனம் தனது ஆடம்பர கார் மாடல்களை பிரிட்டன் ஆலையில் உற்பத்தி செய்து, அதன் பாகங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து பூனே ஆலையில் வைத்து அசெம்பில் செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ்-இன் ஜாகுவார் லேண்ட் ரோவர் ராணிப்பேட்டையில் அமைய இருக்கும் புதிய ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.

    இதுதவிர ஏராளமான இதர கார் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் உற்பத்தி செய்ய இருக்கிறது. இதில் ஹைப்ரிட் மாடல்களும் அடங்கும்.

    டாடா மோட்டார்ஸ்-இன் புதிய ஆலை 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைய இருக்கிறது. இதற்காக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்.

    • பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
    • 6 ஆண்டுகளும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

    நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

    திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

    பிரதமர் மோடி அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?

    மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?

    தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக முதலமைச்சர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று கூறியது ஏற்புடையதல்ல.
    • நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், தமிழக முதலமைச்சர், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று கூறியது ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

    மேலும் தமிழக முதலமைச்சர், புது டெல்லியில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது.

    முதலமைச்சர் என்ற முறையில் ஏற்கனவே அறிவித்தபடி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை கேட்பது அவரது கடமை என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
    • கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    சென்னை:

    தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சதுர அடிக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சதுர அடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் தரநிலைக்கு ஏற்ப இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வளர்ச்சி கட்டணம், கட்டிட லைசென்சு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி, சாலை சேதம் சீரமைப்பு கட்டணம் என அனைத்து அடங்கிவிடும்.

    சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். சிறப்பு நிலை ஏ மாநகராட்சிகளான மதுரை, கோவை, திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.88 ம், சிறப்பு நிலை பி மாநகராட்சிகளான தாம்பரம், சேலம், திருச்சியில் சதுர அடிக்கு ரூ.84-ம், தேர்வு நிலை மாநகராட்சிகளான ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோட்டில் சதுர அடிக்கு ரூ.79ம், தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரத்திற்கு சதுர அடிக்கு ரூ.74-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    நகராட்சிகளை பொறுத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 ம், நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70-ம், 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் உள்ள நகர் கிராம ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27-ம், இதர பகுதிகளில் நகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25-ம், சி.எம்.டி.ஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22-ம், இதர 11 ஆயிரத்து 791 கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

    • நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
    • ஜூலை 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

    இத்தனை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், "தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பாரபட்சமானது, மிகவும் ஆபத்தானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

    அதன்படி கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டி, இமலாசப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறார்கள்.

    மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

    • நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார்.
    • மோடியால் ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களை பார்க்க முடியவில்லை.

    மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடகாவின் அத்தியாவசியத் தேவைகளைப் பற்றி விவாதிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் நான் தீவிரமாக முயற்சித்த போதிலும், மத்திய பட்ஜெட் நமது மாநிலத்தின் கோரிக்கைகளை புறக்கணித்துள்ளது.

    நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மக்களின் பிரச்சனைகளை புறக்கணித்துள்ளார். எனவே நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    மேகதாது, மகதாயிக்கு அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நமது விவசாயிகளின் கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி இன்னும் நமக்கு கனவாகவே உள்ளது.

    நரேந்திர மோடியின் பார்வை பிரதமர் பதவியில் இருப்பதால் ஆந்திரா, பீகார் தவிர மற்ற மாநிலங்களை அவரால் பார்க்க முடியவில்லை. நீதிக்கான எங்கள் போராட்டத்தில் எங்கள் மாநில மக்கள் எங்களுடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதலமைச்சர்களான, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுகு மற்றும் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

    • மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.
    • நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

    மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தின் தேவைகளை முன்பே மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தோம். மெட்ரோ ரெயில் தமிழகத்திற்கான ரெயில்கள் குறித்து கேட்டிருந்தோம். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கேட்டிருந்தோம்.

    மைனாரிட்டி பாஜக அரசை மெஜாரிட்டி பாஜக அரசாக மாற்றி மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் குறித்த 2 மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்து சென்றனர். அதன் பின்னரும் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்பட வில்லை. மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.

    நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்க போகிறேன்.

    தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை.
    • பட்ஜெட் மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள பாஜக அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது.

    ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.

    அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ளது.

    நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது.

    சமீபத்தில் சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த ஒன்றிய வரவு-செலவுத் திட்டத்திலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், ஒன்றிய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியதுதான்.

    ஆனால், இன்று உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மூன்றாண்டுகளுக்கும் முன்பாக ஒன்றிய அரசு அறிவித்த நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்காக எந்தவொரு நிதியும் இதுவரை வழங்கவில்லை. இது, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் செயல்பாட்டினைப் பெரிதும் பாதித்து, சென்னை மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ இரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

    ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென எந்தவொரு புதிய ரெயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

    பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு வீட்டிற்கான மதிப்பீட்டினை உயர்த்துவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது, நகர்ப்புரப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளில், ஒன்றிய அரசின் பங்கு 1.5 இலட்சம் ரூபாயாகவும், இதில் மாநில அரசால் சுமார் 12-14 இலட்சம் ரூபாய் ஒரு வீட்டிற்கு செலவிடப்படுகிறது.

    எனவே, ஒன்றிய அரசின் பங்கினை உயர்த்தாமல், வீடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவே அமையும். திட்டத்திற்கு பிரதமரின் பெயரை வைத்துக்கொண்டால் மட்டும் போதுமானதல்ல. அதற்கேற்றால்போல நிதியும் வழங்கப்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.

    ஒன்றிய அரசு அறிவித்த முக்கியத் திட்டங்களைப் பார்க்கையில், நமது மாநில அரசின் வரவு-செலவுத் திட்டத்தின் நகல்போலத் தோன்றுகிறது. எடுத்துக்காட்டாக– ஆயிரம் தொழிற்பயிற்சி மையங்கள் மேம்பாட்டுத் திட்டம், பணிபுரியும் மகளிருக்கான (தோழி) விடுதிகள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள், நீரேற்று புனல் மின் உற்பத்திக் கொள்கைகள் போன்றவை தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் ஏற்கெனவே இடம்பெற்றவை.

    குறிப்பாக, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒன்றிய அரசு, நாடு முழுவதும் 20 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஒரு ஆண்டிற்கு 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்றிய நிதியமைச்சர் தன்னுடைய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களை நகல் எடுத்துப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், இரவல் வாங்கிப் பயன்படுத்தியவர், நன்றிக்கடனாக தமிழ்நாட்டிற்குப் பெரும் திட்டம் ஒன்றுகூட அறிவிக்காமல் விட்டது ஏன்?

    ஒன்றிய அரசு, மாநிலப் பட்டியலில் உள்ள முத்திரைத்தாளின் கட்டணத்தைக் குறைக்குமாறு அறிவித்துள்ளது. எனினும் இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு எந்தவொரு அறிவிப்பும் இல்லை. எனவே, ஒன்றிய அரசானது, முத்திரைத்தாள் கட்டணக் குறைப்பினை ஈடுசெய்வதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கெனவே, சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் தமிழ்நாட்டிற்கு ஆண்டிற்கு ஏற்பட்டுள்ள 20,000 கோடி ரூபாய் இழப்பிற்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையானது, நடுத்தர மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாமல், வெறும் பெயரளவிற்கு வருமானவரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளாக வரிக்குறைப்பின்றி இருந்துவந்த நிலையில் வெறும் 17,500 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதும், இக்குறைப்புகூட புதிய வரிமுறையில் மட்டுமே செய்யப்பட்டு, பழைய முறையில் எவ்வித குறைப்பும் அளிக்கப்படாததும் மத்தியதரக் குடும்பங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசு கோரியுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாநிலத்திற்கு வழங்கிட வேண்டுமென்று மீண்டும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக இன்று மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து உள்ளார்.

    இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு என்ற பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் பீகாரை தவிர்த்து வேறு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதனிடையே, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக அசாம், இமாச்சல பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கிய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படாதது கண்டித்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

    இதனிடையே, சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    முன்னதாக, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள்.
    • தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

    மாதவரம்:

    புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும். மக்களும் தி.மு.க. அரசுக்கு துணை நிற்பார்கள் என்பதை பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40க்கு வெற்றி பெற செய்து நிரூபித்து உள்ளீர்கள். இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை அவசியம். இதனை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. இதன் அவசியம் அறிந்து 1970-ல் கலைஞர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் தொடங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக தரம் உயர்த்தி முதலமைச்சர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,முத்துச்சாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.
    • வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட வணிகர் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    * வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக திமுக அரசு உயர்த்தியது.

    * 40,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர்.

    * பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.

    * வணிகர்களுக்காக பல முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.

    * வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.

    * தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் முன் வரவேண்டும்.

    * நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை வைக்கவும், 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10,000 வழங்கப்படுகிறது.

    * வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

    ×