search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • உண்ணாவிரத போராட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் போராடி 8 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டு, 5 தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி:

    சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நகராட்சி பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சொத்து வரி, பால் விலை உயர்வு, தேங்காய் விலை வீழ்ச்சி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    போராட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பேசியதாவது:-

    எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மேற்கு புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு, 50 சதவீத பணிகள் முடிந்திருந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று கோவைக்கு மாற்றுப்பாதையாக கோவில்பாளையம்-வெள்ளலூர் சாலை அகலப்படுத்தும் திட்டத்தையும் ரத்து செய்துள்ளனர்.

    பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் போராடி 8 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டு, 5 தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

    ஆனால் அதன் பிறகு மத்திய அரசு நிதி தருவதாக கூறியும் தி.மு.க. அரசு போதிய நோயாளிகள் இல்லை என்று கூறி கட்டிடம் கட்டாமல் இருக்கிறது. ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி கொடுக்கப்பட்டும் பணிகளை நிறுத்தி உள்ளனர். இதுபோன்று பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ண குமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல் முத்துகருப்பணன், திருஞானசம்பந்தம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
    • உண்மையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இந்த விடியா அரசின் ஏவல் துறை கட்டுப்படுத்த நினைக்கிறதா? அல்லது ஆளும் கட்சியினரின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்க நினைக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 19 மாத ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், புதுச்சேரிக்கு சென்று திருமண விழா ஒன்றில் பேசும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத் தானே சுய பெருமை பேசுகிறார்.

    இவர் திருவாய் மலர்ந்தருளிய பின், கடந்த ஓரிரு வாரங்களில் அரங்கேறிய, சில முக்கிய சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே தோலுரித்துக் காட்டுகிறேன்.

    ஒரு பிரபல நடிகர் நடத்தி வந்த யூடியூப் சேனலை, ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 8-ந்தேதி அந்த சேனலின் சர்வர் அறையில் விஜயவாடாவைச் சேர்ந்த பாலாஜி என்ற ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும், காவல்துறை இதனை மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 53 வயதான செம்புலிங்கம் என்பவர் உள்பட இருவரைப் பிடித்து கடுமையாக தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த செம்பு லிங்கம் 8-ந்தேதி இரவு மரணம் அடைந்துவிட்டார்.

    தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    அடுத்து, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள அல்லிகுளம் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் முனுசாமி என்ற வியாபாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    உண்மையில் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இந்த விடியா அரசின் ஏவல் துறை கட்டுப்படுத்த நினைக்கிறதா? அல்லது ஆளும் கட்சியினரின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்க நினைக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏற்கனவே, ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை அருகே கடந்த 27.11.2022 அன்று சர்வதேச மதிப்பில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த போதைப் பொருள் கலக்கப்பட்ட 20 லிட்டர் வாட்டர் கேன்கள், சாதிக் அலி என்பவரது நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதை கடற்படை போலீசார் தடுத்து, குற்றவாளிகளை கைது செய்தனர் என்றும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன.

    இதில் சம்பந்தப்பட்ட கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்ப்ராஸ் என்பவரும், கீழக்கரை திமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயினூதின் என்பவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று செய்திகள் தெரிவித்தன.

    இந்நிலையில், கடந்த 12.12.2022 அன்று மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், கிறிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக, இந்த போதைப் பொருட்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் தனசேகர் ஆகிய இரண்டு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரை உள்ள அத்தனை சோதனைச் சாவடிகளையும் கடந்து, எந்தவித தடையுமின்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் மண்டபம் வந்தது எப்படி? என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஆச்சரியப்படுகின்றனர்.

    காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டம் ஒழுங்கைக் காக்கும் வேலையைப் பார்க்காமல், மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து ஆர்பாட்டம்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் வாகனங்கள் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே இன்று செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு, ஒன்றிய கழகம் மற்றும் மாமல்லபுரம் அ.தி.மு.க வினர் சார்பில், தி.மு.க ஆட்சியில் சொத்துவரி, மின் கட்டணம், பால், விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என குற்றம் சாட்டி, அதை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பேரூர் கழக செயலாளர் தினேஷ்குமார், புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால், மாமல்லபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்ட அ.தி.மு.க வினர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒரு மணி நேரம் அரசு பஸ், கார், வேன் போன்ற வாகனங்களை நகருக்குள் விடாமல் பைபாஸ் வழியாக போலீசார் அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

    • அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதில் என்ன உங்களுக்கு சந்தேகம்.
    • இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாளான வருகிற 24-ந்தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை அவரது நினைவிடத்தில் அஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்புக்கு அனுமதி கோரி உள்ளோம்.

    அண்ணாவின் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். இதில் என்ன உங்களுக்கு சந்தேகம். இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். அதேபோல மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி. மாநிலத்தின் உரிமையை யார் மீட்டெடுத்தது. காவிரி நதி நீர் பிரச்சினையில் தி.மு.க. என்ன செய்தது. கச்சத்தீவு விஷயத்தில் என்ன செய்தார்கள். நாங்கள்தான் வழக்குத் தொடுத்துள்ளோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு சட்டமாக இருந்தாலும் யார் உரிமையும் பறிக்ககூடாது. உரிமையைப் பறித்தால் முதலில் குரல் கொடுக்கும் இயக்கம் அ.தி.மு.க.வாகத்தான் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
    • பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் பொய்யான வாக்குறுதிகளை அளித்த தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பூண்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நம்மை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. எம்.ஜி.ஆரின் 35-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

    தொடர்ந்து, தலைமைக் கழகச்செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர்.

    அதனையடுத்து, எம்.ஜி.ஆரின் நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும்

    கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    எம்.ஜி.ஆரின் நினைவு நாள் அன்று அவரது சிலைகளுக்கு மாலை அணிவித்தும், உருவப் படங்களை வைத்து மாலை அணிவித்தும், மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.
    • தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் தான் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிருபித்து வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை.

    புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    • ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    ஆத்தூர்:

    தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர். இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    ஜெயசங்கரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலையை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட , நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    • திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., வரவேற்று பேசுகிறார்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன் செய்துள்ளார்.

    குண்டடம்:

    திருப்பூர் மாவட்டம் குண்டடம் புரட்சி தலைவி அம்மா திடலில் இன்று மாலை 3 மணிக்கு மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் இணைப்பு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி., வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கின்றனர்.

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., வரவேற்று பேசுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கே.ஜி. முத்து வெங்கடேஸ்வரன் செய்துள்ளார். கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்திற்காக குண்டடம் பஸ்நிலையம் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு, அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று குண்டடம் பகுதியில் அ.தி.மு.க. கொடி தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள், கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர்.
    • கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

    அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்படும் வரை அல்லது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் பதில் மனு மற்றும் விளக்க மனு தாக்கல் செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பு பரஸ்பரம் குற்றம்சாட்டியிருந்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 6-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைரமுத்து தரப்பில் வழக்கை ஒத்திவைக்க கோரப்பட்டது.

    அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், கட்சி செயல்பாடுகளில் தொய்வு இல்லாமல் இருக்க இந்த வழக்கில் இடைக்கால நிவாரணம் வேண்டும் என கோரினர்.

    அந்த கோரிக்கையை ஏற்று, இடைக்கால நிவாரணம் குறித்து ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    அதன்படி இடைக்கால மனு தாக்கல் செய்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    எனவே அந்த சமயத்தில் கட்சி பணிகளில் இடையூறு விளைவிக்க கூடாது என்றும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் வந்தால், அச்சமயத்தில் அ.தி.மு.க கட்சி மற்றும் சின்னம், உள்ளிடவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி உள்ளார்

    மேலும், பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அதனை காரணம் காட்டி ஏற்கனவே கட்சி விதிகளில் கொண்டு வந்த மாற்றத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர்.

    இது கட்சி பணிகளில் தொய்வு ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் இடைக்கால மனுவில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

    அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் வரும் 12-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும்.
    • தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இடம் பெற்றுள்ளது. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா தயாராகி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பேசும்போது, "அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க..., ஓ.பன்னீர்செல்வம் வாழ்க..." என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை. அவசியமும் இல்லை. அவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி வைப்பதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள்.

    தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றது. அதே போன்று தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே அ.தி.மு.க.வை இணைக்க பா.ஜனதா தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்காத நிலையில் பா.ஜனதா யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தனித்து போட்டி என்ற அண்ணாமலையின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணிக்கு நாங்கள் தலைமை வகிக்கிறோம்.

    2024 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அந்த நேரத்தில்தான் முடிவாகும். தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதெல்லாம் அவர்கள் விருப்பம்.

    அவர்கள் கட்சி நிலைப்பாட்டை பேச அவர்களுக்கு முழு உரிமை உண்டு. நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சிக்காரர்களை குஷிப்படுத்தவும் பேசி இருக்கலாம்.

    எந்த கட்சி எங்களோடு இணைந்தாலும் சரி. எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்பதை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தி விட்டார்.

    எத்தனை கட்சிகளாக இருந்தாலும் சரி. எந்த கட்சியாக இருந்தாலும் சரி. எங்களோடு கூட்டணிக்கு வரும் போதுதான் அவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
    • சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் நாளை (9-ந் தேதி) அன்று பேரூராட்சிகளிலும், 13.12.2022 அன்று நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14.12.2022 அன்று ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புயல் உருவாக இருப்பதாகவும், அந்தப் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையை கடக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் 9.12.2022 அன்று பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 16.12.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கேற்ற வகையில், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×