search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமமுக"

    பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

    தமிழகத்தில் பெய்து வரும் பருவமழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கட்சி தொண்டர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

    தற்போது பல மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால் பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை கழகத்தினர் உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து பேரணியாக சென்று, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித் தலைவி அம்மாவை போற்றி வணங்கும் வகையில், அவரது நினைவு நாளான வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலையில் இருந்து பேரணியாக சென்று, மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், பொருளாளர் மனோகரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலையில் ஆலோசனை மேற்கொண்டார்.

    இன்று மதியம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கழக செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதில் கட்சி நிர்வாகிகள் போட்டியிடுவது சம்பந்தமாக டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனை கூட்டம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதில் மத்திய மண்டலம், தென் மண்டல கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமின்றி சசிகலா சுற்றுப்பயணம் செய்யும் மாவட்டங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துகிறார்.


    இதையும் படியுங்கள்... 13,14,15 ஆகிய தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து

    பல்வேறு தொகுதிகளில் எங்கள் முகவர்களின் வாக்குகள் ஒன்றுகூட பதிவாகவில்லையே ஏன் என அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் அடையாறில் உள்ள வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம்.

    சுமார் 300 வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.விற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில்கூற வேண்டும். அ.ம.மு.க. முகவர்களின் வாக்குகள் கூட பதிவாகவில்லையே, அவர்களின் வாக்குகள் எங்கே போனது..?

    பல வாக்குச்சாவடிகளில் அ.ம.மு.க.வுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? 10 பேர் அ.ம.மு.க.வை விட்டுச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும். எனவே பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை, எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பெற்ற ஓட்டுகள் பாதித்ததா? என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க. கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அ.ம.மு.க. கட்சியை டி.டி.வி.தினகரன் தொடங்கினார். அந்த கட்சிக்கு அ.தி.மு.க.வினர் பலர் ஆதரவு தெரிவிப்பதாகவும், எனவே அந்த ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்றும் பரவலாக நம்பப்பட்டது.

    ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பெரிய பாதிப்பை அ.ம.மு.க.வினால் எல்லா தொகுதிகளிலும் தர முடியவில்லை. இது அ.ம.மு.க.வுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று நிம்மதியையும் கொடுத்துள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் தர்மபுரி, சிதம்பரம், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அ.ம.மு.க. கட்சியால் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாதகத்தை ஏற்படுத்த முடிந்தது.

    தர்மபுரியில் தி.மு.க. வேட்பாளர் 5 லட்சத்து 74 ஆயிரத்து 988 ஓட்டுகளை பெற்றார். அங்கு அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 5 லட்சத்து 4 ஆயிரத்து 235 ஓட்டுக்களை வாங்கியுள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர் 53 ஆயிரத்து 655 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள், பா.ம.க.வுக்கு கிடைத்திருந்தால் தி.மு.க.வுக்கு கூடுதல் நெருக்கடியை அளித்திருக்க முடியும்.

    சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 லட்சத்து 229 ஓட்டுகளை பெற்றது. அ.தி.மு.க.வுக்கு 4 லட்சத்து 97 ஆயிரத்து 10 வாக்குகள் கிடைத்தன. அ.ம.மு.க.வுக்கு 62 ஆயிரத்து 308 ஓட்டுகள் கிடைத்தன. இந்த ஓட்டுகள் கிடைத்திருந்தால் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

    ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 4 லட்சத்து 69 ஆயிரத்து 943 ஓட்டுகள் கிடைத்தன. அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 லட்சத்து 42 ஆயிரத்து 821 ஓட்டுகள் வந்தன. அங்கு அ.ம.மு.க.வுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 ஓட்டுகள் கிடைத்தன. அ.ம.மு.க.வின் ஓட்டுகள் கிடைத்திருந்தால் பா.ஜ.க. வெற்றி அடைந்திருக்க முடியும். ஆனால் வேறு தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை பாதிக்கும் அளவுக்கு அ.ம.மு.க.வுக்கு ஓட்டுகள் கிடைக்கவில்லை.

    அதுபோல 22 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றியை அ.ம.மு.க. பாதித்துள்ளது.

    வடசென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் தலா ஒரு லட்சத்துக்கும் மேலாக ஓட்டுகளை வாங்கி மக்கள் நீதி மய்யம் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சில இடங்களில் அ.ம.மு.க.வை விட அதிக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்று 3-ம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
    பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் தமிழக முதல்வராக்க பதவி ஏற்பார் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
    தேனி:

    தேனியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேனி பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மக்கள் பணத்துக்கு மயங்கி விட்டனர். நாங்களும் பணம் கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும். காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தால் கூட எனக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

    இனி வரும் தேர்தல்களில் பணம் கொடுத்தால் மட்டுமே மக்களை வாக்களிக்க வைக்க முடியும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. இத ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. தமிழகம் முழுவதும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற போது தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது எப்படி? இது தேர்தல் ஆணையத்தின் ஆசியால்தான் நடந்துள்ளது. இந்தியாவில் தேர்தல் ஆணையம் உள்ளதா? என்பதே சந்தேகமாக உள்ளது.


    இந்த வெற்றியின் மூலம் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் தனக்குள்ள செல்வாக்கை பிரதமர் மோடியிடம் தெரிவிப்பார். அதன் மூலம் பா.ஜனதா ஆதரவுடன் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.

    எங்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் கொடுத்தது தேர்தல் தோல்விக்கு மற்றொரு காரணமாக அமைந்து விட்டது. இந்த சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. தேர்தலில் எனக்கும் எங்களது கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தோல்வியால் சோர்ந்து போகவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட அமேதியில் தோற்றுப் போயுள்ளார். இதே போல் தமிழகத்தில் தமிழிசை, எச்.ராஜா, அன்புமணி ராமதாஸ் போன்றோரும் தோற்றுப் போயுள்ளனர். தோல்வியில் இருந்து துவண்டு விடாமல் மீண்டும் எங்களது பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
    தேனி:

    ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவில் அருகே வைக்கப்பட்டுள்ள நன்கொடையாளர்கள் கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே பாராளுமன்ற உறுப்பினர் என்று பெயர் போட்டுக் கொள்ளும் அளவுக்கு தைரியத்தை ஓ.பன்னீர்செல்வம்தான் கொடுத்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்வெட்டு.

    தேர்தல் ஆணையத்தில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல்குறித்து எந்த புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது நடந்துள்ள விதி மீறல் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது இதன் பிறகாவது அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கிறார்கள்? என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் மறு வாக்குப்பதிவு நியாயமாக நடக்கும் என்று நம்புகிறோம். அதே போல் அன்றைய தினம் நடைபெறும் 4 சட்டமன்ற தேர்தலும் ஜனநாயக முறைப்படி நடக்க தேர்தல் ஆணையம் உறுதியளிக்க வேண்டும்.

    23-ந்தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தமிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    அ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்பதே முக்கியம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட் பாளர் சுந்தரராஜை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி ஹவுசிங் போர்டு, மாப்பிள்ளையூரணி, டேவிஸ்புரம், தாளமுத்துநகர், தருவைகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி படுதோல்வி அடையும் என்பதால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபா நாயகர் மூலம் நோட்டீஸ் கொடுத்தார். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதித்து விட்டது. இந்த ஆட்சி வருகிற 23-ந் தேதியுடன் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுத்தனர். ஆனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த 18 பேருக்கு தகுதிநீக்கத்தை எடப்பாடி பழனிசாமி வழங்கி உள்ளார். இந்த ஆட்சி மக்களால் அகற்றப்படும் நிலை உருவாகி விட்டது. அதனால்தான் செல்லும் இடமெல்லாம் என்னை வாய்க்கு வந்தபடி பேசு கிறார்.

    நான் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து இருப்பதாக கூறுகிறார். தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக நாங்கள் வேட்பாளரை நிறுத்தி இருப்பதாக கூறுகிறார். ஆர்.கே.நகரில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தவர்கள் நாங்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம் இருந்த வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் துரோக கறை படிந்து இருப்பதால், ஆர்.கே.நகர் மக்கள் துரோகத்துக்கு வாக்களிக்க மாட்டோம் என்று இரட்டை இலையை தோற்கடித்தனர். நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை என்பது மக்களுக்கு தெரியும். கடந்த முறை சுந்தரராஜ் 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள். 2-வது இடத் துக்குதான் மற்றவர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது போராடிய மக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்தது எடப்பாடி பழனிசாமி அரசு. அதற்கு மே 23-ந் தேதிக்கு பிறகு அவர் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. அந்த 13 பேரை போலீசார் சுடுவதற்கு யார் காரணமாக இருந்தார்கள்?, யார் அவர்களுக்கு ஆணையிட்டார்கள்? என்பதை வெளிக் கொண்டு வரும் நேரம் வந்து விட்டது. நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம்.

    தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க விடமாட்டோம் என்ற உறுதியோடு செயல்பட்டு வரும் கட்சி அ.ம.மு.க., ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை விட, தமிழகத்தில் உள்ள துரோகிகளை ஒழித்து கட்ட வேண்டும். ஏற்கனவே 5 முறை ஆட்சி செய்த தி.மு.க. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு பயன் இல்லை என்பது எடுத்துக்கூறி உண்மையான மக்கள் ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க நீங்கள் வாக்க ளிக்க வேண்டிய சின்னம் பரிசுபெட்டகம் என்பதை எடுத்துக்கூற வந்து உள்ளேன். மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால் நீங்கள் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    நெல்லை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பழனிசாமி-பன்னீர்செல்வத்தின் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சியை அமைப்பதற்கு என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது மக்களிடம் கேட்டேன்.

    அதேதான் தற்போது நடைபெறுகின்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களிலெல்லாம் கேட்கிறேன்.

    இன்னொரு ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது.

    தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் என்றைக்கும் ஆதரவு கொடுக்க மாட்டோம். ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்குதான் இதனை கூறுகிறேன்.



    பழனிசாமி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சித்தால் கண்டிப்பாக அதில் நாங்களும் சேர்ந்து ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.

    ஏப்.18-ந் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் பரிசுப் பெட்டகம் சின்னம் மக்களவை பொதுத் தேர்தலிலும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெறப்போகிறது என்பதை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்டதால் என்னை தாக்கி பேச வேண்டிய அவசியம் துரோகிகளுக்கு ஏற்பட்டுள்ளதால்தான் என்னை தாக்கி தற்போது பேசுகிறார்கள்.

    வாக்குக்கு பணம் கொடுப்பதாலேயே மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற சரித்திரம் இதுவரை கிடையாது. இனிமேலும் வாக்களிக்க மாட்டார்கள்.

    எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தீவிரவாதம் என்பது கூடாது. அது ஓர் அழிவுச் சக்தி. அதிலெல்லாம் போய் மதத்தின் பெயரையெல்லாம் சேர்த்து யார் பேசினாலும் அது தவறு. எந்த மதத்தை சேர்ந்தவர்களையும் புண்படுத்துவதுப்போல யார் பேசினாலும் அது தவறு.

    தனிப்பட்ட ஒருவரோ, ஒரு குழுவோ தீவிரவாதிகளாக ஆவதால் அவர்கள் சார்ந்த மதத்திற்கும், தீவிரவாதத்திற்கும் என்ன சம்பந்தம். எல்லா மதங்களும் அன்பைதான் கற்பிக்கின்றன. எந்த மதமும் நீங்கள் தீவிரவாதி ஆகுங்கள், வேறு மதத்தை சேர்ந்தவர்களை அழியுங்கள் என்று சொல்வதில்லை.

    இன்னொரு மதத்தை தாழ்த்தி பேச வேண்டிய அவசியமும் கிடையாது. தேவையில்லாமல் மதத்தை சம்பந்தப்படுத்தி பேசுவதை எல்லோரும் தவிர்ப்பது நாட்டுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    எனது அறையில் நடந்த சோதனை பாரபட்சமானது. அமைச்சர்களின் அறைகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்திற்காக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மதுரையில் தங்கி இருந்து பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தங்கி இருந்த விடுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து தங்க தமிழ்ச்செல்வன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    நான் இல்லாத நேரத்தில் எனது அறையில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது மிகவும் பாரபட்சமானது. திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் லாட்ஜூகளில் தங்கி உள்ளனர். அவர்களின் அறைகளில் ஏன் சோதனை நடத்தவில்லை.

    காவல்துறை வாகனங்களிலும் பணம் கடத்தப்படுகிறது. எனவே அந்த வாகனங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார் என சூலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TNAssemblyByElection #EdappadiPalanisamy #TTVDinakaran
    சூலூர்:

    சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று 2-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் கள்ளப்பாளையம், சின்னக்குயிலி, இடையர்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, செஞ்சேரிமலை, ஜல்லிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பேசினார். அப்போது டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற துரோக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய கடமை வாக்காளர்களாகிய உங்களுக்கு உள்ளது. அதற்கு காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த ஆட்சியை தொடர்ந்து நடத்திட வேண்டி சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் ஆக்கினார். ஆனால் இந்த கட்சி எக்கேடு கெட்டு போனால் என்ன என்று சசிகலா நினைத்திருந்தால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை ஒரு சகோதரராக நினைத்து சசிகலா ஆட்சியை விட்டு சென்றார். ஆனால் அவர் துரோகம் செய்து விட்டார். அவர் செய்தது சரியா என்பதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் தான் இந்த தேர்தல் மூலம் பதில் அளிக்க வேண்டும்.

    மோடியின் ஏஜெண்டாக செயல்படும் இவர்கள் ஜெயலலிதா எந்தெந்த திட்டங்களையெல்லாம் எதிர்த்தாரோ அதையெல்லாம் ஆதரிக்கிறார்கள். நீட் தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா போராடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஆதரிக்கிறார். மோடிக்கு பயந்து கொண்டு விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை கொண்டு வருகிறார்கள். வியாபாரிகளை பாதிக்கும் ஜி.எஸ்.டி.யை ஜெயலலிதா வரவிடவில்லை. ஆனால் எடப்பாடி அதை ஆதரித்தார். இது ஜெயலலிதா ஆட்சி என்று கூறி எடப்பாடி பழனிசாமி மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் இரட்டை இலையை காட்டி ஏமாற்றுகிறார். இதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளுக்குத் தான் வாக்களிப்போம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்.

    ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவருடைய உருவப்படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது என்று கூறிய விஜயகாந்த் கட்சியுடன் இவர்கள் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்ற பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டு வைத்துள்ளனர். துரோகம் செய்தவர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள்.



    எங்களை வெற்றி பெற செய்தால் சூலூர் தொகுதியில் வேளாண் உதவி மையம் அமைக்கப்படும். விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பரம்பிக்குளம்-ஆழியாறு மூலம் இந்த பகுதிக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். 60 வயதான விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பலன் அளிக்கும் வகையில் சிறப்பான மக்களாட்சியை அமைத்து தர நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் பரிசு பெட்டகம். உங்களது வெற்றி வேட்பாளர் சுகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

    முன்னதாக கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி-புவனேஸ்வரி தம்பதியின் பெண் குழந்தைக்கு அகல்யா என்று டி.டி.வி. தினகரன் பெயர் சூட்டினார். #EdappadiPalanisamy #TTVDinakaran
    தி.மு.க.-அ.ம.மு.க. இணைந்து செயல்படுவது தங்க தமிழ்செல்வன் மூலம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami #DMK #AMMK
    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி விமானநிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் இணைந்து செயல்பட்டு வருவதாக, ஏற்கனவே நான் பல்வேறு கூட்டங்களில் தெரிவித்து வந்தேன். தற்போது தங்கதமிழ்செல்வன் மூலமாக அது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

    2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாமல் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது தி.மு.க. தான்.

    அ.தி.மு.க. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தியது, நடத்தியும் வருகிறது, இனிமேலும் நடத்தும்.

    22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. நிச்சயமாக வெற்றி பெற்று முழு பெரும்பான்மையுடன் எங்களுடைய ஆட்சி தொடரும். எதிர் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர் கனவு என்றுமே பலிக்காது என்பது மக்களுக்கு தெரியும். அது ஒரு அர்ப்ப ஆசை. வருகிற 23-ந்தேதிக்கு பிறகு அவர் கனவு கூட காண முடியாது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் திறமையான மாணவர்கள். கல்வியிலேயே தமிழகம் முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக 2019-ம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 304 நிறுவனங்கள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் எல்லாம் நிறைவேறும் போது படித்த இளைஞர்களுக்கு நேரடியாக 5 லட்சம் பேருக்கும், மறைமுகமாக 5.50 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 10 தொழில் நிறுவனங்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்ததன் பேரில் வருகிற ஜூன் மாதம் அந்த 10 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

    உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 10.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சி.

    தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. அதில் யாரும் குறுக்கிட முடியாது. பாரபட்சமின்றி அனைவர் மீதும் வழக்குப் போடுகிறார்கள். வேண்டும் என்றே தோல்வி பயத்தின் காரணமாக எதிர்கட்சிகள் தவறான கருத்தினை மக்களிடத்திலே பரப்பி வருகிறார்கள்.

    தோற்றால் இந்த காரணத்தை அவர்கள் சொல்லுவார்கள். வெற்றி பெறுகின்ற கட்சி இது போன்ற கருத்துகளை தெரிவிக்கமாட்டார்கள். தோல்வி பெறுகின்ற கட்சி தோல்வி பயத்தின் காரணமாக இப்படிப்பட்ட அப்பட்டமான குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்கள்.

    இந்த தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி, மக்களைச் சந்தித்து வாக்குகளைப்பெற பணியாற்றியுள்ளோம். கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami  #DMK #AMMK
    ×