search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97550"

    திருத்துறைப்பூண்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிய பா.ஜனதா பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு சாலைக்கடை பகுதியில் சில இளைஞர்கள், கடந்த 5-ந் தேதி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தாக்கி தகராறு செய்தனர்.

    அப்போது பா.ஜனதா முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் மகன் பிரகாஷ் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் வந்த வாகனத்தையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்ட தலைக்காடு பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (24) என்பவரை கைது செய்தனர். அவரை ஒரு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். உடன் மற்றொரு சப்- இன்ஸ்பெக்டர் சிவகுமார் சென்றார்.

    அப்போது அங்கு வந்த பா.ஜனதா முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசன், போலீசார் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து தடுத்து நிறுத்தினார். தன் மகனை தாக்கிய சுபாஷ் சந்திர போசை அரிவாளால் வெட்ட முயன்றார்.

    இதை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தடுக்க முயன்ற போது அவரது வலது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ஜனதா பிரமுகர் கணேசனை கைது செய்தனர்.
    மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம்கட்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் மத்திய மந்திரி பாபுல் சுப்ரியோவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. #BabulSupriyo #Asansolpolls
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு இன்று நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 8 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கி சேதப்படுத்தினர்.



    மேலும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே வாக்குவாதமும், மோதல்களும் நடந்தன. #BabulSupriyo #Asansolpolls
    வல்லம் அருகே பாட்டி மற்றும் பேரம் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    வல்லம்:

    வல்லம் அடுத்துள்ள குருங்குளத்தை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 68), இவரது பேரன் ஆகாஷ் (16). சம்பவத்தன் ஆகாஷ் தனது பாட்டி மலர்கொடியுடன் குருங்குளம் அருகே உள்ள கரும்பு கொல்லையில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது குருங்குளம் சாலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (39) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் நின்றுள்ளார். அப்போது எதிரே ஒரு லாரி வந்துள்ளது. இதனால் நிலைதடுமாறிய சிறுவன் ஆகாஷ் சிவக்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் ஆகாசை துரத்தி சென்று பிடித்து தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற மலர் கொடியையும் தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஆகாசும், மலர்கொடி இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.
    ஆட்டோவில் குடி போதையில் தகராறு செய்தவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவரது மனைவி மணிமுத்து (36). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தேவாரத்தில் இருந்து மாணிக்கபுரத்துக்கு ஆட்டோவில் சென்றனர். இதற்காக தேவாரத்தைச் சேர்ந்த கூத்தபெருமாள் என்பவரது ஆட்டோவில் ஏறினர். மணிகண்டன் குடிபோதையில் இருந்தார்.

    ஊருக்கு செல்வதற்கு ரூ.500 வாடகை பேசினார். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகு 500 ரூபாய் தர முடியாது என்று ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். தான் ஏறிய இடத்திலேயே தன்னை இறக்கி விடுமாறு மணிகண்டன் தகராறு செய்தார்.

    இதனால் கூத்தபெருமாள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து கூத்தபெருமாளை கைது செய்தனர்.
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 மாடுகள் உயிரிழந்தது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது. வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. நள்ளிரவு 12 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதே போல் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பியில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த காற்று, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது.

    இந்த மழை 4.45 மணி வரை நீடித்தது. அதன் பிறகு மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் அவர்களது வாகனங்களை முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் கனமழையாக பெய்தது. இந்த மழை 5.30 மணி வரை நீடித்தது. இந்த நிலையில் மேல்மலையனூர் அருகே உள்ள கீழ்செவளாம்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 56) என்பவர் தனக்கு சொந்தமான பசு மாட்டை அந்த பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அந்த மாடு செத்தது.

    இதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவர் தனது வயலில் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் ஒரு பசு மாடு செத்தது. மேலும் ஒரு மாடு காயமடைந்தது.

    சங்கராபுரம்,கச்சிராயப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 10 வரை மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 5.15 மணி முதல் 6 மணி வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோல் திருநாவலூர், மயிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

    கடலூர் மாவட்டத்திலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை லேசாக குளிர்ந்த காற்றுவீசியது. அதன் பின்னர் சிறிது நேரம் மழை தூறி கொண்டு இருந்தது.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆவினங்குடி, பட்டூர், கோழியூர் ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி அளவில் பலத்த சூறை காற்று வீசியது. இதில் பட்டூர்- கோழியூர் சாலை பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆலமரத்தின் கிளை ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள், பொதுமக்கள் யாரும் அதிர்ஷ்டவசமாக வராததால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் சாலையின் குறுக்கே மரக்கிளை விழுந்ததால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளையை எந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றினர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. அதன்பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணிநேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது.

    இதேபோல் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு லேசாக மழை தூறியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    பாகூர் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.

    பாகூர்:

    பாகூர் அருகே குருவிநத்தம் புறாக்குளம் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த தீபாவளி பண்டிகையின் போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் சங்கரை வெட்டினார்.

    இதுதொடர்பாக பாகூர் போலீசார் விசாரணை நடத்தி ஆறுமுகம் மீது வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வழக்கில் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வரக்கூடாது என சங்கரை மிரட்ட ஆறுமுகம் எண்ணினார்.

    அதன்படி நேற்று சங்கரிடம் ஆறுமுகம் மீண்டும் தகராறு செய்துள்ளார். மேலும் தடியால் தாக்கி கோர்ட்டில் சாட்சி சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் சங்கரை ஆறுமுகம் மிரட்டினார்.

    இதுகுறித்து சங்கர் பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சபரி வழக்குபதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.

    போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #DMK
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே நேற்று மதியம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய அ.தி. மு.க.வினர் அனுமதி பெற்று இருந்தனர்.

    இதேபோல காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி ஆஞ்சநேயர் கோவில் அருகே நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய தி.மு.க.வினர் அனுமதி வாங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் பிரச்சாரத்திற்காக காஞ்சீபுரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தி.மு.க.வினரிடம் உதயநிதி இன்னும் பிரசாரத்துக்கு வரவில்லை. அதனால் துணை முதலமைச்சர் கோவிலுக்கு வந்து செல்லும் வரை சிறிது நேரம் பிரசாரத்தினை நிறுத்தி வையுங்கள்’ என்று கூறினர்.

    இதனை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சின்ன காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    அவர்களிடமும் எழிலரசன் எம்.எல்.ஏ. கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று தி.மு.க.வினர் அனைவரும் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட எழிலரசன் எம்.எல்.ஏ. மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கூட்டாக சேர்ந்து மிரட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DMK
    திப்புராயப்பேட்டையில் பெயிண்டரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை திப்புராயப்பேட்டை லசார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது28). பெயிண்டர். இவர் மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையில் நடுவில் டீப்ளான் (22) மற்றொரு வாலிபர் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அருள்ராஜ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடாததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்ராஜ் வாலிபர் டீப்ளானை தாக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து டீப்ளான் தனது நண்பர்களான இளங்கோ நகரை சேர்ந்த ஆனந்த், உழவர்கரையை சேர்ந்த விக்னேஷ் (19), திப்புராயப்பேட்டையை சேர்ந்த ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோருடன் அருள்ராஜியின் வீட்டுக்கு சென்றார். பின்பு அவர்கள் அங்கு இருந்த அருள்ராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த அருள்ராஜ் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அருள் செல்வன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, பெரியசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து ஆனந்த், விக்னேஷ், ரோமார்க் சைமன்ஜெயின் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட டீப்ளானை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருத்தணி அருகே கொள்ளை முயற்சியில் தாய்- மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பள்ளிப்பட்டு:

    திருத்தணி அருகே உள்ள பி.டி.புதூரை சேர்ந்தவர் வனப்பெருமாள். இவர் தனியார் டயர் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி வீர லட்சுமி (வயது 40). மாற்றுத்திறனாளி. இவர்களது மகன் போச்சிராஜ் (10) அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று இரவு வனப்பெருமாள் பணிக்காக வேலைக்கு சென்றார். அவரது மனைவி வீரலட்சுமி, மகன் போச்சிராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் வனப்பெருமாள் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்குள்ள அறையில் மனைவி வீரலட்சுமியும், மகன் போச்சிராஜிம் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வீரலட்சுமியின் தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது. இதேபோல் அவரது மகன் போச்சிராஜ் ‘அயர்ன் பாக்ஸ்’ வயரால் கழுத்து இறுக்கப்பட்டு கிடந்தார். மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 21 பவுன் நகை கொள்ளை போய் இருந்தன.

    இது குறித்து திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    திருவள்ளூரில் இருந்து மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அது கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

    கொலையுண்ட தாய்- மகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியை தடுத்ததால் இருவரும் கொலை செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    கொலை நடந்த வீடு திருத்தணி-அரக்கோணம் சாலை ஓரத்தில் உள்ளது. வீட்டில் வனப்பெருமாள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர்.

    கொள்ளையை தடுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீர லட்சுமியும், அவரது மகன் போச்சிராஜையும் கொள்ளையர்கள் கொடூரமாக வெட்டியும் கழுத்தை நெரித்தும் கொலை செய்து இருக்கிறார்கள். வீடு முழுவதும் ரத்தக்கறை சிதறிக் கிடந்தது.

    இந்த வீட்டின் அருகே நெருக்கமாக மற்ற வீடுகளும் உள்ளன. ஆனால் கொலை நடந்த நேரம் நள்ளிரவு என்பதால் அவர்களது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்க வில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

    கொலை-கொள்ளை நடந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மெயின் ரோடு பகுதியில் நள்ளிரவில் வந்த வாகனங்கள் பற்றி விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் வனப்பெருமாளிடம் விசாரணை நடக்கிறது.

    சிங்கப்பூரில் தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், காதலியை தாக்கிய இந்தியருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர்வாழ் இந்தியர் முகமது முஸ்தபா அலி (வயது 24). இவருக்கும், சாகிக்கா நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல். ஆனால் நதியா, முன்பு இன்னொருவரை காதலித்து உள்ளார்.

    இந்த நிலையில் நதியாவின் முதல் காதல் தொடர்பாக அவருக்கும், முகமது முஸ்தபா அலிக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த முகமது முஸ்தபா அலி, கர்ப்பமாக இருந்த தனது காதலியை முதுகிலும், தொடையிலும் சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தினார்.

    இது தொடர்பான புகாரின்பேரில் முகமது முஸ்தபா அலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    அந்த வழக்கை சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி மேத்யூ ஜோசப் விசாரித்தார். விசாரணை முடிவில், முகமது முஸ்தபா அலி குற்றவாளி என கண்டார். தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், அவரை முகமது முஸ்தபா அலி தாக்கியது மிக மோசமான செயல் என விமர்சித்த நீதிபதி அவருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 
    திருப்பத்தூர் அருகே இடப்பிரச்சினை தகராறில் கட்டிட ஒப்பந்ததாரரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த வி‌ஷமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கட்டிட ஒப்பந்ததாரர். இவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டுவதற்காக ஊர் பொதுமக்கள் இடம் கேட்டனர். அதற்கு பெருமாள் சம்மதம் தெரிவித்து 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்தார். கோவிலுக்கு மேலும் இடம் தேவை என்று ஊர்பொதுமக்கள் கேட்டதின் பேரில் மீண்டும் 2 சென்ட் இடத்தை தானமாக கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் தானமாக கொடுத்த 4 சென்ட் இடத்தை விட கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெருமாள் தட்டி கேட்டார் அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த சரவணன், பாலசுப் பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேர் பெருமாளை சரமாறியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து பெருமாளின் மகன் அண்ணாமலை அமெரிக்காவில் இருந்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து சரவணன், பாலசுப்பிரமணியன், சண்முகம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்ற தொழிலாளியை வாலிபர் வெட்டி சாய்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 50), தீர்த்திகிரி (52) கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தனர். அரசு கழிவறைகள் கட்டும் பணியில் ஒன்றாக ஈடுபட்டு வந்தனர்.

    நேற்று முருகன் கட்டிட வேலைக்கு செல்லாமல் வெள்ளக்குட்டையில் கட்சி கொடிகம்பம் நடும் பணியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட தீர்த்தகிரி அவரை தட்டிக் கேட்டார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் படுகாயமடைந்த இருவரும் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆண்கள் வார்டில் தனிதனியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை தீர்த்தகிரியை பார்க்க அவரது மகன் மோகன் (24) வந்தார்.

    தந்தையை பார்த்து விட்டு ஆத்திரமடைந்த அவர் ஆண்கள் வார்டில் புகுந்து படுக்கையில் படுத்திருந்த முருகனை கத்தியால் வெட்டினார். அவரது தலை, கை, கால்களில் வெட்டு விழுந்தது. இதனைக் கண்ட நோயாளிகள் கூச்சலிட்டனர். இதனால் மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயமடைந்த முருகனுக்கு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் புகுந்து தொழிலாளி வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று காலை முருகனின் உறவினர்கள் வெள்ளக்குட்டை பஸ் நிறுத்தத்தில் திரண்டு சாலை மறியல் செய்தனர். தப்பி ஓடிய மோகனை கைது செய்ய கோரி கோ‌ஷமிட்டனர்.

    இதனால் ஆலங்காயம்- வாணியம்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.

    ×