search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97550"

    திருச்சி அருகே குடும்ப தகராறில் கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 45).அ.தி.மு.க. நிர்வாகியான இவர் விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி (43). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பரமசிவத்திற்கு குடி பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். குடிபழக்கத்தை கைவிடுமாறு மலர்விழி பலமுறை வற்புறுத்தியும் பரமசிவம் கை விடவில்லை.

    இந்தநிலையில் நேற்றிரவும் அவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை மலர்விழி தட்டிக்கேட்டதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த பரமசிவம் வீட்டில் இருந்த பிளாஸ்டிக் சேரை எடுத்து மலர்விழியை சரமாரி தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் தாயை தந்தை தாக்கியது தொடர்பாக பரமசிவத்தின் மகன் ராஜதுரை, அவரது தாத்தாவும், பரமசிவத்தின் தந்தையுமான நடேசனிடம் தெரிவித்தார். இதையடுத்து நடேசன் , ஆஸ்பத்திரியில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று அங்கிருந்த பரமசிவத்திடம் ஏன் மலர்விழியை தாக்கினாய் என்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த நடேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகன் என்றும் பாராமல் பரமசிவத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மலர்விழியும் இறந்தார்.

    குடும்ப தகராறில் கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்ட சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பரமசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மலர்விழியின் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடேசனை கைது செய்தனர்.

    சிவகாசியில் போலீஸ்காரரை மது போதையில் தாக்கியதாக 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ராமச்சந்திரன். இவர் நேற்று இரவு சிவானந்தா காலனி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக்கடை அருகில் போதையில் 3 பேர் நின்று தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    உடனே போலீஸ் காரர் ராமச்சந்திரன் 3 பேரையும் எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்டனர்.

    மேலும் மதுபோதையில் ராமச்சந்திரனை கம்பால் தாக்கிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் போலீஸ்காரர் ராமச் சந்திரனை தாக்கியது லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த சங்கர் (வயது27), அய்யம்பட்டி ராஜ்குமார் (27), பிரபு (29) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    மதுரையில் வியாபாரியை தாக்கி பணம்-செல்போன் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் 2-வது பால்பூத் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது46). இவர் மொத்தமாக செருப்புகளை கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடுத்து விட்டு மீதி இருந்த ரூ.61 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்தனர்.

    அவர்கள் பேசுவதற்கு செல்போன் தருமாறு கேட்டு உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மர்ம நபர்கள் குமாரை அடித்து கீழே தள்ளி விட்டு பையில் இருந்த ரூ.61 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே நிலத்தகராறில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரை பெரிய மேல்தெருவைச் சேர்ந்த முகமது சித்திக் மகன் அப்துல்ஜலீல், தி.மு.க. பிரமுகர். இவரது வயல் அருகில் பாரூக் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு அரங்ககுடியை சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது காசிம் என்பவர் வீட்டு மனைகளை உருவாக்கி உள்ளார். அவர் அப்துல் ஜலீலுக்கு சொந்தமான வயலுக்கு வழியில்லாத வகையில் வீட்டுமனை அமைத்ததால் அப்துல் ஜலீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது காசிம் மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் அப்துல் ஜலீல் தனது தரப்பில் வாதாட வக்கீலை சந்தித்து பேசி அவரிடம் வழக்குக்கு உரிய இடத்தை காட்ட நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த முகமது காசிம், அவரது மகன் அனீஸ் ஆகியோர் வாக்குவாதம் செய்து அவரை ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ஜலீல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே முகமது காசிம், அவரது மகன் அனீசும் தங்களை அப்துல் ஜலீல் தாக்கியதாக கூறி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் செம்பனார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    கோவையில் ஜோதிடரை தாக்கி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி உள்பட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தெக்குபாளையத்தை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி காயத்ரி. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் புளியூரை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பாலமுருகன் (33) என்பவரை பார்க்க சென்றனர்.

    பாலமுருகன் நீர்ஜோதிடம் பார்த்து வருகிறார். ஜோதிடர் தம்பதியின் நிலையை ஆராய்ந்த பின்னர் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். குறிப்பாக பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் அவதி மற்றும் அவமானப்பட்டு வருகிறீர்கள் என்று கூறினார்.

    ஆமாம் என்று ஒப்புக்கொண்ட தம்பதி இது எப்போது சரியாகும். பரிகாரம் உள்ளதா? என்று கேட்டனர். ரூ.3 ஆயிரம் கொடுத்தால் பரிகாரம் செய்து தருகிறேன். அதற்கு பின்னர் உங்கள் பணப்பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கூறினார். தற்போது அவ்வளவு பணம் இல்லை என்று கூறி விட்டு கோவை திரும்பினர்.

    சிறிது நாட்கள் கழிந்து ஜோதிடரை போனில் தொடர்பு கொண்ட தம்பதி பரிகாரம் செய்ய பணம் தயாராக உள்ளது வீட்டிற்கு வந்து பரிகாரம் செய்து தரவேண்டும் என்று கூறினர்.

    இதனையடுத்து கடந்த 14-ந்தேதி ஜோதிடர் பாலமுருகன் கோவை வந்தார். காந்திபுரத்தில் காத்திருந்த அவரை தம்பதி வந்த காரில் ஏற்றிக்கொண்டனர். பரிகாரம் செய்வது அக்கம் பக்கத்தினருக்கு தெரியக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதற்கும் ஜோதிடர் சம்மதித்தார்.

    காரில் இருந்து இறங்கிய பின்னர் வீட்டுக்குள் சென்றனர். வீட்டில் தம்பதி உறவினர்கள் போத்திராஜ், சதீஷ் உள்பட 4 பேர் இருந்தனர். கதவை சாத்திய பின்னர் குபேரன் ஜோதிடரை தாக்கினார். நாங்கள் பணகஷ்டத்தில் இருப்பது உனக்கு தெரியும். பரிகாரம் எல்லாம் வேண்டாம். நீயே ரூ.40 லட்சம் கொடு என்று மிரட்டினர்.

    பரிகாரம் செய்ய வந்த ஜோதிடர் அதிர்ச்சியடைந்தார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் ஜோதிடரை சரமாரியாக தாக்கியது. வலி தாங்கமுடியாத ஜோதிடர் ரூ.40 லட்சம் முடியாது. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்.

    ரூ.5 லட்சத்துக்கு ஒப்புக்கொண்ட கும்பல் உனது தந்தையை மதுரை மாட்டுத்தவணியில் காத்திருக்கும் எங்கள் நண்பர் பாண்டி என்பவரிடம் கொடுக்க சொல் என்று மிரட்டினர். அதன்படி ஜோதிடர் தனது தந்தையிடம் அவசர தேவை என்று கூறி ரூ.5 லட்சத்தை மதுரை மாட்டுத்தாவணியில் காத்திருக்கும் பாண்டி என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார்.

    ஜோதிடர் தந்தையும் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு மாட்டுத்தாவணியில் காத்திருந்த பாண்டி என்பவரிடம் கொடுத்தார். பணம் பெற்றுக்கொண்ட பாண்டி கோவை கும்பலுக்கு பணம் பெற்றுக்கொண்டாக தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து காரில் ஜோதிடரை ஏற்றி மெயின் ரோட்டில் இறக்கி விட்டனர். மேலும் இது பற்றி வெளியே கூறினால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜோதிடர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்த பின்னர் நரசிம்மநாயக்கன்பாளையம் போலீசில் இது குறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து தம்பதி உள்பட 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    வில்லியனூர் அருகே பணம் கடன் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    திண்டிவனம் அருகே பேரணை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது45). இவர் வில்லியனுர் அருகே கூனிமுடகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பக்கிரிபாளையத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான ஜெயராமன் (27), சீத்தாராமன் (25) ஆகியோர் ஏற்கனவே பணம் கடன் வாங்கி இருந்தனர்.

    அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காத நிலையில் நேற்று பெட்ரோல் பங்கில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் மீண்டும் ரூ.500 கடன் கேட்டனர். ஆனால் தமிழ்செல்வன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராமன்-சீத்தாராமன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்செல்வத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து தமிழ்செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயராமன்- சீத்தாராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
    புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான். #PulwamaAttack

    புல்வாம:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகளின் 3 முக்கிய முகாம்களை அழித்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம் ஏற்பட்டது.

    பாகிஸ்தானிடம் இந்திய வீரர் அபிநந்தன் சிக்க நேரிட்டதால் போர் ஏற்படாமல் சுமூக நிலை உருவானது. இதற்கிடையே புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினார்கள்.

    கடந்த 3 வாரங்களில் நடந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் காஷ்மீர் மாநிலம் டிரால் பகுதியைச் சேர்ந்த அகமது கான் (வயது23) என்று தெரிய வந்தது.

    அகமதுகான் கடந்த 2017-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான். எலக்ட்ரிசியனான இவனுக்கும் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஆதில் அகமதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவரும் நண்பர்கள்.

    கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் இருவரும் ஏதோ சதி வேலைகளில் ஈடுபட போகிறார்கள் என்பதை தேசிய புலனாய்வு குழு கண்டறிந்து இருந்தது. பிப்ரவரி 27-ந்தேதி அகமது கான் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    அன்று முதல் அகமதுகான் தலைமறைவாகி விட்டான். அவனை தேசிய புலனாய்வு குழு அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு இவன்தான் மூளையாக செயல்பட்டவன் என்பதால் அவனை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

    நேற்று புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிரால் பகுதியில் உள்ள பிங்கிலீஸ் என்ற இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

    இதனால் பயங்கரவாதிகள் தப்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்தது.

    இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த 3 பயங்கரவாதிகளும் யார் என்பது முதலில் தெரியாமல் இருந்தது. இதுகுறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவன் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அகமது கான் என்று தெரிய வந்துள்ளது. இவனுக்கு முகமதுபாய் என்ற பெயரும் உண்டு.

    கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளின் உடல்களும் துப்பாக்கி குண்டுகளால் சல்லடையாக துளைக்கப்பட்டுள்ளது. இதனால் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    முக்கிய பயங்கரவாதியான அகமதுகானை புல்வாமா மாவட்டத்தில் நிறைய பேருக்கு தெரியாது. எனவே செத்தது அவன்தானா? என்பது பற்றி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #PulwamaAttack

    பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது குறித்து ரஷியா மற்றும் சீனாவிடம் சுஷ்மாசுவராஜ் விளக்கம் அளித்தார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    பெய்ஜிங்:

    சீனாவின் பெய்ஜிங்கில் வெளியுறவுதுறை மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சென்றுள்ளார்.

    அங்கு, பாகிஸ்தானில் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியது குறித்து விளக்கம் அளித்தார். இந்தியா நடத்தியது ராணுவ தாக்குதல் அல்ல. ராணுவத்தளங்களை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்படவில்லை.

    ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளையும் அவர்களது புகலிடத்தையும் குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனெனில் அவர்கள் இந்தியாவில் புகுந்து மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    அவர்களிடம் இருந்து பொதுமக்களை காக்கவே பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றார்.



    இதற்கிடையே, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் உயர் அதிகாரி ஜெனரல் ஜோசப்டன்கோர்டு பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரி ஜெனரல் ஷூபேர் மக்மூதை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்திய பிறகு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த தகவலை பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் பாட்ரிக் எஸ்.ரைடர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #PulwamaAttack #Chinese #ForeignMinister
    இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தின. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம், புலவாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 14-ந் தேதி நடத்திய காட்டுமிராண்டித்தனமான கார்குண்டு தாக்குதல், இந்தியாவை உலுக்கியது.

    இந்த தாக்குதலில், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழகத்தின் சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்பட மொத்தம் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    அந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில், “புலவாமா தாக்குதலை நடத்தியது நாங்கள்தான்” என்று பாகிஸ்தானை சேர்ந்த மசூத் அசாரின் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. உடனே பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும் என்ற ஆவேசம், நாட்டு மக்கள் அத்தனைபேர் மத்தியிலும் எழுந்தது.

    இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமை, தனது இயக்க பயங்கரவாதிகளுடன் கடந்த 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதி தொலைபேசியில் கலந்துரையாடியதை உளவுத்துறையினர் இடைமறித்து பதிவு செய்தனர்.

    அதில், அவர்கள் புலவாமா தாக்குதலை விட பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது அம்பலத்துக்கு வந்தது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என இனியும் பொறுத்துப் பயனில்லை என்ற முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.

    அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைந்துள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் மீது குண்டு போட்டு ஒழித்துக்கட்டி பழி தீர்க்க இந்திய விமானப்படைக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற இந்திய விமானப்படையின் ‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் பவுண்ட் எடையுடையதுமான லேசர் வழிகாட்டும் குண்டுகளை சுமந்து கொண்டு பாகிஸ்தானுக்கு பறந்தன.

    அவை அங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் மிகத்துல்லியமாக குண்டுமழை பொழிந்தன. இதில், பயங்கரவாத முகாம்களும், தளமும் இருந்த இடம் தெரியாமல் நிர்மூலம் ஆகின.

    அதைத் தொடர்ந்து வெற்றிகரமாக இந்திய போர் விமானங்கள், புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தன.



    21 நிமிடம் நடந்த இந்த தாக்குதலின்போது, அந்த முகாம்களில் அதிகாலை நேரம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பயங்கரவாதிகள் சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசாரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

    இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கை, இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஏகோபித்த வரவேற்பை யும், நாட்டு மக்களின் பாராட்டுக்களையும் ஒருசேரப் பெற்றது. பரவலாக பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறினர். பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இந்தியாவின் அதிரடி தாக்குதலுக்கு மக்கள் பாராட்டு மழை பொழிந்து பதிவுகளை வெளியிட்டனர்.

    புலவாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த கர்நாடக மாநிலம், மண்டியாவை சேர்ந்த வீரர் குருவின் மனைவி கலாவதி நிருபர்களிடம் பேசினார்.

    அவர், “புலவாமா தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மா இப்போது அமைதி அடையும். இந்திய விமான படையினருக்கு நான் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நடவடிக்கை எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது” என ஆனந்த கண்ணீர் வழிய குறிப்பிட்டார்.



    புலவாமா தாக்குதல் நடந்து 12 நாளில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை இந்தியா பழி தீர்த்து இருக்கிறது.

    இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 14-ந் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அதில் வீரமிக்க 40 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் இந்த பயங்கரவாத அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. பஹவல்பூரை தலைமையிடமாக கொண்டு, இந்த அமைப்பினை மசூத் அசார் தலைமை தாங்கி நடத்தி வந்தார்.

    ஐ.நா. சபையால் தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புதான், 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி நடந்த இந்திய நாடாளுமன்ற தாக்குதல், 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நடந்த பதன்கோட் விமானப்படை தள தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு பொறுப்பு ஆகும்.

    பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இயங்கி வருகிற அந்த இயக்கத்தின் பயிற்சி முகாம்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும், பாகிஸ்தான் அதை மறுத்து வந்துள்ளது. ஆனால் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிற திறன் வாய்ந்த பயிற்சி முகாம்கள் அங்கு செயல்பட்டு வந்தன என்றால், அது பாகிஸ்தான் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்காது.

    பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதையும், பாகிஸ்தானுக்குள் ஆயுதங்கள் ஏந்திக்கொண்டு இருப்பதையும் தடுத்து நிறுத்தும் வகையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்றுவதற்கு உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில்தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர், நாட்டின் பல்வேறு இடங் களில் மற்றொரு தற்கொலைப்படை தாக்குதலை நடத்த முயற்சிப்பதாகவும், அதற்காக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் நம்பத்தகுந்த உளவுத்தகவல் கிடைத்தது.

    தவிர்க்க முடியாத ஆபத்தை சந்திக்கும் நிலை உருவானதால், அதைத் தடுக்கிற வகையில் அதிரடியாக தாக்குதல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

    இன்று (நேற்று) அதிகாலை உளவு தகவல்கள் அடிப்படையில், பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மிகப்பெரிய பயிற்சி முகாம் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள், குழுக்கள் கொல்லப்பட்டனர்.

    பாலகோட் பயிற்சி முகாம், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசாரின் மைத்துனர் மவுலானா யூசுப் அசார் தலைமையில் இயங்கி வந்தது ஆகும்.

    பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்த்து போரிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இந்திய அரசு உறுதி கொண்டுள்ளது. எனவேதான் ராணுவ நடவடிக்கை இல்லாமல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் உயிரிழப்பை தடுக்கிற வகையில், இந்த தாக்குதல் இலக்குகள் முடிவு செய்யப்பட்டன.

    2004-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தான் தனது மண்ணை அல்லது கட்டுப்பாட்டில்வரும் பிராந்தியத்தை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக உறுதி அளித்தது. தனது வாக்கினை பாகிஸ்தான் காத்து நடக்கும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மற்றும் பிற அமைப்புகளின் பயிற்சி முகாம் களை அகற்றவும், பயங்கரவாதிகளை பொறுப்பேற்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை அழிப்பதற்கு மிராஜ்-2000 விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    இந்தியாவில் தொடர்ந்து வாலாட்டிக்கொண்டிருந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம்களை நிர்மூலம் ஆக்குவதற்கு 12 ‘மிராஜ்-2000’ விமானங்கள பயன்படுத்தப்பட்டன.

    இதன் பின்னணி குறித்து தெரிய வந்துள்ளது.

    இந்த விமானங்கள் அதிநவீன வசதிகளைக் கொண்ட நான்காம் தலைமுறை விமானம்.

    ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்குகிற பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புதான், இந்த மிராஜ்-2000 விமானங்களும். இந்தியாவிடம் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் சுமார் 50 விமானங்கள் உள்ளன.

    இவை ஒற்றை என்ஜினை கொண்டவை. இந்த விமானங்கள் அதி நவீனமானவை.

    இவற்றில் இருந்து ஏவுகணைகளை ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் போட முடியும்.

    இவை, தாக்குதல் இலக்கை மிகத்துல்லியமாக சென்று நிர்மூலம் ஆக்கும் வல்லமை படைத்தவை ஆகும். ஏனென்றால், இந்த விமானங்களில் ‘தேல்ஸ் ஆர்.டி.ஒய். 2’ ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைதான் 100 சதவீதம் துல்லியமான தாக்குதலுக்கு வழிநடத்தக்கூடியவை. மேலும் நீண்ட தூர இலக்கை குறிவைப்பதிலும் இந்த ‘மிராஜ்-2000’ விமானங்கள் நிபுணத்துவம் பெற்றவை.

    எனவே தான் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்த விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. ரூ.20 ஆயிரம் கோடியில் தர மேம்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில்தான் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் பறந்து சென்று தாக்குதல் நடத்தின.

    இப்போது 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் எல்லை தாண்டிச்சென்று தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன என குறிப்பிட்டார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விமானப்படைக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து விவாதிக்க வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அனைத்து கட்சி கூட்டத்தை இன்ரு கூட்டினார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்,



    அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆதரவு எப்போதும் இருக்கும்; விமானப்படையின் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting
    இந்திய விமானப்படை எல்லையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குவதற்கு முன் உளவுத்துறையால் எடுக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. #IAFAttack #LoC
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கியது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின. 



    இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில், இந்திய விமானப்படை எல்லையில் வெடிகுண்டுகள் வீசி தாக்குவதற்கு முன் உளவுத்துறையால் எடுக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள், பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    மேலும், விமானப்படை தாக்குதலின்போது  குறிவைக்கப்பட்ட பயங்கரவாதி மவுலானா அமர் மற்றும் மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தல்ஹா சைஃப் ஆகியோரின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. #IAFAttack #LoC
    ×