என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 98174"
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போது எல்லை தாண்டி வருவதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியைச் சோந்த 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்களில் ஒரு தரப்பினர் கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இங்கு மீன்பிடிக்கக்கூடாது எனக் கூறி மீனவர்களை எச்சரித்தனர்.
தொடர்ந்து மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் அறுத்து எறிந்து சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அள்ளி கடலில் வீசினர்
மேலும் சில மீனவர்களை தாக்கி அங்கிருந்து செல்லுமாறு விரட்டி அடித்ததாக தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்த மற்ற மீனவர்கள் பாதியிலேயே மீன்பிடிப்பதை கைவிட்டு விட்டு கரை திரும்பினர்.
இது குறித்து மீனவர்கள் கூறுகையில், ஏற்கனவே டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி டீசல் போட்டுக் கொண்டு கடலுக்கு சென்றாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு நீடித்து வருவதால் எங்களால் மீன்பிடி தொழிலை செய்ய முடியவில்லை.
இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் எங்களை தாக்கி விரட்டியடித்ததோடு பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் தெரிவித்தனர். #Fishermen #SriLankaNavy
புதுச்சேரி:
புதுவை தேங்காய்த் திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து புதுவையை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் அடிக்கடி அடைப்பு ஏற்படும். இதனால் படகுகளில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்படும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பாகீரப்பாளையம் முகத்துவாரம் மணல் மேடிட்டு அடைத்தது. இதனால் கடந்த 10-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அதோடு துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக தூர்வார வேண்டும். கடல்பகுதியின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி ஆழப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
சில நாட்களுக்கு முன்பு விசைப்படகு, கன்னா படகு, எப்.ஆர்.பி. ஆகியவற்றில் கறுப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் முன்பு மீனவர்கள் ஒன்று கூடினர். அங்கு வாசலில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். செயலாளர் கவி, பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் துறைமுகத்தில் உள்ள மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மீனவர்கள் போலீசார் தடையை மீறி உள்ளே புகுந்து மீன்வளத்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போராட்டம், 18 மீனவ கிராமங்களை இணைத்து பந்த் போரட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள புயல் சின்னமானது இன்று காலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.
தற்போது ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கு தென்கிழக்கில் 360 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயல் சின்னமானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கலிங்கபட்டினத்துக்கும், கோபால் பூருக்கும் இடையே பாரதீப் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆந்திரா-ஒடிசாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும். மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். நாளை 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.
மேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக சென்னை, நாகை, கடலூர், புதுச்சேரி, தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
நேற்று கடலூர் தேவனாம்பட்டினத்தில் கடல் திடீர் என்று உள்வாங்கியது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரமக்குடியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 4 செ.மீ. மழையும், இளையாங்குடி, கோவி லாங்குளம், வாணியம்பாடி, திருமங்கலம், மதுரை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழையும், திருச்சுழி, திருப்புவனம், அரிமலம், கடலாடி, முதுகுளத்தூர், வால்பாறையில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது. #Storm #Fisherman
ராமேசுவரம்:
ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 2 பேர் கடந்த ஜூலை மாதம் 16-ந்தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்.
இதேபோல கடந்த மாதம் 22-ந்தேதி புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்களை சிறை பிடித்துச் சென்றது.
கைதான தமிழக மீனவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள மல்லாக்கம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 14-ந்தேதி வரை (இன்று) காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பேரில் 8 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து 8 பேரும் இன்று மல்லாக்கம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்படாததால் 8 பேரின் காவலையும் வருகிற 26-ந்தேதி வரை நீடித்து நீதிபதி ஆனந்தராஜா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். #Fishermen #SriLankaNavy
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மீனவர் நலவாரியத்தில் 6024 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் உறுப்பினர்களின் முழு விபரங்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உறுப்பினராக உள்ள பயனாளிகளின் விபரங்களை 38 கலங்கள் அடங்கிய படிவத்தில் ஒவ்வொருவரும் பூர்த்தி செய்து கண்டிப்பாக அளிக்க வேண்டும். படிவம் அளிப்பவர்களின் விபரங்கள் மட்டுமே கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதுவரை 2228 படிவங்கள் மட்டுமே பயனாளிகளிடமிருந்து பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 3796 உறுப்பினர்களிடமிருந்து 38 படிவம் பெறப்பட வேண்டும். ஆகையால், மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் தங்கள் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்திட வருகிற 20-ந்தேதிக்குள் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு புதிய படிவத்தினை பூர்த்தி செய்து அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உரிய தேதிக்குள் புதிய படிவம் அளிக்காதவர்களின் விவரங்கள் மீனவர் நல வாரியத்திலிருந்து தானாகவே ரத்தாகிவிடும் அவர்கள் வரும் காலங்களில் புதிய உறுப்பினர்களாகவே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என கலெக்டர் நிர்மல் ராஜ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும், மீனவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்திலும் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பஸ்கள் இன்று வழக்கம் போல் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயங்கவில்லை. தஞ்சையில் ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பாபநாசம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் தஞ்சை மாவட்டத்தில் சுமார் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. லாரி, ஆட்டோக்கள் மட்டும் ஓடவில்லை. மேலும் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், பேரளம், நன்னிலம், வலங்கைமான், கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, பேரளம், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு , மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் இயங்கின. மேலும் ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் ஓடவில்லை.
நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில், வேதாரண்யம், தலைஞாயிறு, தரங்கம்பாடி, பொறையாறு, குத்தாலம் ஆகிய இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, கோடியக்கரை பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. #PetrolDieselPriceHike
பெட்ரோல், டீசல் விலை உயர்வு பலதரப்பினரை பாதித்துள்ளது. கடந்த மாதம் 75 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 83 ரூபாயை எட்டியுள்ளது.
முன்பெல்லாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும் குறைந்தது 10 ரூபாய் வித்தியாசம் இருக்கும். ஆனால் தற்போது பெட்ரோல் விலைக்கு நிகராக டீசல் விலையும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு மீனவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் நேற்று வாபஸ் பெற்றனர். வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தும் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
ராமேசுவரத்தில் 750-க்கும் மேற்பட்ட டீசல் விசைப்படகுகள் உள்ளன. ஒருமுறை கடலுக்கு செல்ல சிறிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.16 ஆயிரமும், பெரிய அளவிலான விசைப் படகுக்கு ரூ.40 ஆயிரம் வரை டீசல் செலவாகும்.
ஆனால் தற்போது விலை ஏற்றம் காரணமாக மீனவர்களால் அதனை சமாளிக்க முடியவில்லை. இதனால் பலர் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்கின்றனர்.
இன்று காலை கடலுக்கு செல்ல 450 விசைப் படகுகளுக்கு மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.
அதில் 100 முதல் 150 பெரிய அளவிலான விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்றது. அனுமதி டோக்கன் பெற்ற மற்றவர்கள் கடலுக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். டீசல் போட்டு சென்றாலும் அதற்கேற்ற மீன்வரத்து கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். இதனால் தற்போது நாட்டு படகிலேயே மீன்பிடிக்க செல்கிறோம்.
பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இஷ்டத்துக்கு உயர்த்தி வருகிறது. இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தியாவில் தினமும் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், நிர்ணயிக்கப்படும் விலைகள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர, விலை குறைக்கப்பட்டதாக வரலாறு கொஞ்சமே. இந்த சூழலில், தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 82 ரூபாய் 24 காசுகளாகவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 75 ரூபாய் 19 காசுகளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத இந்த விலை உயர்வை பலரும் எதிர்த்துவரும் நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் மத்திய அரசை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டீசல் விலை உயர்வால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என கூறும் அவர்கள், விலை குறைக்கப்படும் வரையில், போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகிறது. #PetrolDieselHike
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 400 நாட்டுப்படகுகள் உள்ளன. கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது.
விசைப்படகுகளால் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்தன. இந்த நிலையில் விசைப்படகுகளை கண்டித்து நாட்டுப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்த படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டுப்படகு மீனவர்கள் அனைவரும் இன்று புன்னக்காயல் கடலில் கூடினார்கள். கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் படகுகளில் கறுப்பு கொடிகள் கட்டியிருந்தனர். #tamilnews
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.
இந்த போராட்டத்தில், கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை ஓய்ந்துள்ள நிலையில், தற்போது வெள்ளச் சேதங்களை சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், ஆலப்புழா மாவட்டத்துக்கு வந்த ராகுல்காந்தி, கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.
அங்கு திரளாக கூடியிருந்த மீனவ மக்களிடையே பேசிய ராகுல் காந்தி, வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், விவசாயிகளுக்கு உள்ளதுபோல் மீனவர்களின் நலனுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார்.
போலி வாக்குறுதியாக இதை கூறவில்லை. எவ்வித பாதுகாப்பும் அளிக்கப்படாத மீனவ மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் இதை நான் தெரிவித்து கொள்கிறேன் என்றும் ராகுல் குறிப்பிட்டார்.
எண்ணிக்கையில் குறைவான சுமார் 3 ஆயிரம் மீனவ மக்கள் மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதை பெருமையாக குறிப்பிட்ட அவர், ஒக்கி புயல் பாதிப்பின்போது அனைத்தையும் இழந்துநின்ற மீனவ மக்களுக்கு போதுமான உதவிகளை அரசு செய்து தராதது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். #KeralaFloods #RahulGandhi
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.
இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.
இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறையில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளிலும், 65 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாள்தோறும் அதிகாலையில் பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் மதியம் கரை திரும்புகின்றனர். விசைப்படகில் செல்லும் மீனவர்கள் ஓரிரு நாட்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். நாள்தோறும் மீனவர்கள் வலைகளில் ஷீலா, காலா, வாவல், கூரல், நண்டு, இறால் மீன்கள் கிடைக்கின்றன.
தற்போது ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் சீலா மீன்கள் அதிக அளவு சிக்குகின்றன. இதில் ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை எடையுள்ள சீலா மீன்கள் கிடைக்கின்றன.
3 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.750-க்கும், 2 கிலோ எடையுள்ள சீலா மீன்கள் கிலோ ரூ.500-க்கும், ஒரு கிலோ எடையுள்ள மீன்கள் கிலோ ரூ.350-க்கும் வியாபாரிகள் மீனவர்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். காலா மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரையும், வாவல் மீன்கள் ரூ.500 முதல் ரூ.900 வரையிலும், கூரல் மீன்கள் கிலோ ரூ.400-க்கும் நீலக்கால் நண்டு ரூ.400-க்கும், புள்ளிநண்டு ரூ.250-க்கும் இறால் ரூ.200 முதல் ரூ.500 வரையிலும், மட்லீஸ் கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகின்றன.
மீன்கள் அதிகளவில் கிடைப்பதால் மீனவர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் மீன்பிடிக்க செல்கின்றனர். நாளை(ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி வருகிறது. அதற்கு பிறகு வெளிச்சமாக நேரத்தில் அதிகளவில் கூரல் மீன் சிக்கும் என்பதால் மீனவர்கள் அதிக அளவில் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அதிகளவில் ஷீலா மீன்கள் கிடைப்பதாலும், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்