search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman road blockage"

    திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    திருவண்ணாமலை, 

    திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகர் பகுதி 5–வது மற்றும் 6–வது தெருவில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் கிடைக்காததால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்து உள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று காலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தின் அருகில் திருவண்ணாமலை –போளூர் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் உமாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    சத்தியமங்கலத்தில் இன்று சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக வெளியே சென்று கொண்டிருக்கிறது.

    பல்வேறு இடங்களில் சீராக குடிநீர் வினியோகிக்க படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் சத்திய மங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை, திப்பு சுல்தான் ரோடு, புளியம் கோம்பை ரோடு, கட்டபொம்மன் நகர் உட்பட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் விநியோகிக்க படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தினமும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே குடிக்க வருவதாக குற்றம் சாட்டினார்.

    எனவே இதனை கண்டித்தும் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் இன்று காலை 9.20 மணி அளவில் அப்பகுதி பெண்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அத்தாணி ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வந்தவாசியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வந்தவாசி:

    வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு குடிசை மாற்றும் வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது, இதில் 144 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் 3 பொது குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பொது குழாய்களில் வரும் குடிநீர் சிறிது நேரத்திலேயே நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த குடியிருப்பை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்தவாசி 5கண் பாலம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடியிருப்பு பகுதிக்கு தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    துடியலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வரவில்லை.

    இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் இன்று காலை கோவை- ஆனைகட்டி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 1 வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலை நாகமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சு நாதன், ஊராட்சி செயலாளர் சையத் பாஷா ஆகியோர் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பின்னர் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டகப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நகராட்சி சார்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. சில நேரங்களில் பஞ்சாயத்து சார்பில் நிலத்தடி நீர் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த ஒரு மாதமாக சரிவர தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர் கள் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பட்டகப்பட்டிக்கு திரண்டு வந்து இன்று காலை சாலை  மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி செயலர் திருவருட்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த கெண்டைய அள்ளி ஊராட்சிக்குப்பட்ட காவக்காடு கிராமத்தில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளனர். இந்த பகுதியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1 மாதமாக இந்த பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து அவதிப்பட்டு வந்தனர். மேலும் தேவைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்ககோரி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தனர். ஆனால் இது வரைக்கும் குடிநீர் கிடைக்க எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை 9 மணிக்கு ஒன்று திரண்டு பென்னாகரம்-மேச்சேரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசாரும், பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கிராமநிர்வாக அலுவலர் சுகுமார், ஆர்.ஐ. மாலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது  அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கோபி அருகே இன்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படாததை கண்டித்து ரோட்டில் காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோபி:

    சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி இண்டியம்பாளையம். இங்கு கடந்த சில நாட்களாகவே ஆற்று குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லையாம்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இந்த நிலையில் இண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள்- பெண்கள் அப்பகுதியில் உள்ள சத்தி- ஈரோடு மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் திரண்டனர்.

    திடீரென அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்திமதி ஆகியோர் விரைந்து சென்றனர். பி.டி.ஓ.வும் சென்றார். அவர்கள் சாலைமறியல் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தான் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

    விரைவில் அது சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதை தொடர்ந்து சாலைமறியல் நடத்திய பொதுமக்கள் சமாதானமாகி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சங்கராபுரம் நகரில் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வராததால் இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ரிஷிவந்தியம்:

    சங்கராபுரம் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. 10 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யபடுகிறது. சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவில் 10 நாட்களுக்கு மேலாகியும் தண்ணீர் வரவில்லை. இதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சங்கராபுரம் பேரூராட்சி முன்பு சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவலறிந்த சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் வைத்திலிங்கம், போலீஸ்லைன் தெருவிற்கு உடனடியாக தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதைத் தொடர்ந்து சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
    வேதாரண்யம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 1 வாரமாக கோடியக்கரை பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள கிணற்றில் குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பெண்கள் கூறியுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கோடியக்கரை பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் கோடிக்கரை மெயின்ரோட்டில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×