கிரிக்கெட் (Cricket)

இந்தியா- இங்கிலாந்து முதல் டெஸ்ட்: ஐதராபாத்தில் நாளை தொடக்கம்

Published On 2024-01-24 07:01 GMT   |   Update On 2024-01-24 07:01 GMT
  • விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை.
  • ஹாரி புரூக் விலகியது இங்கிலாந்து அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஐதராபாத்:

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் டெஸ்டில் விளையாடியது. டிசம்பர் 26 முதல் ஜனவரி 4 வரை நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் முடிவடைந்தது.

இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஜூன்-ஜூலை மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு எதிராக அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை. இது பேட்டிங்கில் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். அவருக்கு பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்ற மாட்டார். எஸ். பரத் அல்லது புதுமுக வீரரான துருவ் ஜுரல் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார்கள். ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக ஆடுவார். சுப்மன் கில் 3-வது வரிசையில் களம் இறங்குவார்.

சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடஜா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். வேகப்பந்து வீரர்களில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. ஜோரூட் 11,416 ரன் எடுத்துள்ளார். 30 சதமும், 60 அரை சதமும் இதில் அடங்கும். கேப்டன் பென் ஸ்க்ஸ்டோஸ், பேர்ஸ்டோவ், கிரவுலி, பெண் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். ஹாரி புரூக் விலகியது அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News