கிரிக்கெட் (Cricket)

வீட்டு வேலை செய்யும் கோவை பெண் தங்கம் வென்று சாதனை- மகளும் வெண்கலப்பதக்கம் வென்றார்

Published On 2022-08-27 04:59 GMT   |   Update On 2022-08-27 04:59 GMT
  • மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார்.
  • அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார்.

கோவை:

கோவை குனியமுத்தூர் ராமானுஜம் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது40). கணவர் ரமேஷ் தொழிலாளி. சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் கோவைப்புதூர் பகுதியில் 2 வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். குறைந்த வருமானம் ஈட்டிவரும் இவருக்கு பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

இதற்காக வேலை முடிந்து, அந்த பகுதியில் பயிற்சி மையம் நடத்தி வரும் சிவக்குமாரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம் திருச்சியில் நடந்த தமிழ்நாடு பளுதூக்கும் மாநில அளவிலான போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார். மேலும் அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். தாரணி அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

அடுத்த மாதம் 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சென்னையில் தமிழ்நாடு பளுதூக்கும் சங்கம் நடத்தும் நடத்தும் தென்னிந்தியப் போட்டியில் தாயும், மகளும் தங்களது கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

பளுதூக்கும் சாதனை குறித்து வீராங்கனை மாசிலாமணி கூறியதாவது:-

"ஆரம்பத்தில், எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர். இப்போது அவர்கள் என்னை பாராட்டுகிறார்கள். நான் முன்பு உடல் பருமனாக இருந்தேன். பயிற்சியாளர் சிவகுமார் எனக்கு பளுதூக்கும் பயிற்சி அளித்தார். இதி்ல் ஆர்வம் கொண்ட எனது மகள் தாரணியையும் என்னுடன் பயிற்சி பெற வைத்தேன்.

போட்டியில் வென்ற போதும், எனது குடும்ப சூழ்நிலை காரணமாக இப்போதும் வீட்டு வேலைக்குத்தான் சென்று வருகிறேன். இதனால் சத்தான உணவு வகைகள் இல்லாமல், சாதாரண உணவையே சாப்பிட்டு வருகிறேன். ஏழ்மை நிலை இருந்தாலும், எளிய வாழ்க்கை வாழ்ந்தாலும், மகளும், நானும் தென் இந்திய போட்டியில் பதக்கம் வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சியாளர் சிவக்குமார் கூறும்போது, "ஒவ்வொரு பளுதூக்கும் வீராங்கனைக்கும் புரத உணவுக்கு குறைந்தபட்சம் மாதம் 2,500 ரூபாய் தேவைப்படும். நான் இலவசமாகபயிற்சி அளித்து வருகிறேன்.அடுத்ததாக சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் சிறப்பாகச் பளுதூக்கி சாதனை படைப்பதன் மூலம் இவர்களுடைய வாழ்க்கை மேலும் ஒளிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

வீட்டு வேலை செய்துகொண்டே பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாசிலாமணியும், வெண்கலம் வென்ற அவருடைய மகள் தாரணியும் கோவைக்கு பெருமையை தேடி வருவது பாராட்டுக்குரியது.

Tags:    

Similar News