டிஎன்பிஎல்- திண்டுக்கல் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கோவை கிங்ஸ்
- கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
- 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடந்துவருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் (12 புள்ளி), திண்டுக்கல் டிராகன்ஸ் (12 புள்ளி), நெல்லை ராயல் கிங்ஸ் (10 புள்ளி), மதுரை பாந்தர்ஸ் (8 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறின.
4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி), சேலம் ஸ்பார்டன்ஸ் (4 புள்ளி), பால்சி திருச்சி (0) அணிகள் வெளியேறின.
இந்நிலையில், சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள எஸ்.சி.எப். மைதானத்தில் இன்று அரங்கேறும் முதல் தகுதிச்சுற்றில் லைகா கோவை கிங்சும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின.
டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது.
அந்த அணியின் சச்சின் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். முகிலேஷ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சச்சின் 46 பந்தில் 70 ரன்னும், முகிலேஷ் 27 பந்தில் 44 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.
3-வது விக்கெட்டுக்கு சச்சின், முகிலேஷ் ஜோடி 82 ரன்கள் சேர்த்தது. சுரேஷ்குமார் 26 ரன்னும், சுஜய் 12 ரன்னும் எடுத்தனர். திண்டுக்கல் அணியின் சுபோத் பதி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
இதில் அதிகபட்சமாக சரத் குமார் அரை சதம் அடித்து 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, பூபதி குமார் 25 ரன்களிலும், பாபா இந்திரஜித் 21 ரன்களிலும், சுபோத் பாதி 14 ரன்களிலும், சிவம் சிங் 10 ரன்களிலும், மதிவாணன் 9 ரன்களிலும், ஆதித்யா கணேஷ் 5 ரன்களிலும், வருண் சக்ரவர்த்தி 4 ரன்களிலும் சரவண குமார் மற்றுமு் கிஷோர் தலா 2 ரன்களிலும், விமல் குமார் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
இதனால், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்ட முடியாமல் திண்டுக்கல் அணி தோல்வியடைந்தது.
இதனால், லைகா கோவை கிங்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றின் மூலம் நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் லைகா கோவை கிங்ஸ் நுழைந்தது.
https://www.dailythanthi.com/Sports/Cricket/lyca-kovai-kings-won-by-30-runs-against-dindigul-dragons-1002903