கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை வென்று 145 ஆண்டுகால வரலாற்று சாதனையை படைக்குமா இந்தியா?

Published On 2023-03-03 03:37 GMT   |   Update On 2023-03-03 03:37 GMT
  • ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
  • 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 85 ரன்களை இலக்காக நிர்ணயித்து.

இந்தூர்:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 47 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 11 ரன்கள் இடைவெளியில், எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 197 ரன்களில் ஆல் அவுட் ஆனதுடன் 88 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணி, 2-வது இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து மொத்தம் 75 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 76 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

சிறிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா 3-வது நாளான இன்று விளையாட உள்ளது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியை 76 ரன்னுக்குள் இந்திய அணி மடக்கினால், 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சரித்திரத்தை இந்தியா படைக்கும்.

இதற்கு முன்பு 1882-ம் ஆண்டு லண்டன் ஓவலில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு 85 ரன்களை இலக்காக நிர்ணயித்து. அதில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்த வகையில் சாதனையாக இருக்கிறது.

Tags:    

Similar News