செய்திகள் (Tamil News)

8 வழிச்சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள், சர்வாதிகாரியை போல நடந்து கொள்கிறார்கள்: கனிமொழி

Published On 2018-06-27 12:49 GMT   |   Update On 2018-06-27 12:49 GMT
சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள், சர்வாதிகாரியை போல நடந்து கொள்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad

கோவை:

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி:- முரண்பாடுகளின் மொத்த உருவம் தி.மு.க. என அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறாரே?

பதில்:- முரண்பாடுகளுடன் வாழ்றது தான் வாழ்க்கை. அதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முரண்பாடுகளே ஒரு கட்சியாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருப்பவர்கள் தான் அவர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டவர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள்.

மேடையில் ஏறி ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை பற்றி ஒரு அமைச்சர் பேசக்கூடிய அளவுக்கு முரண்பாடுகள் இருக்கக் கூடிய கட்சி எது என்று அவர்களுக்கே தெரியும்.

கேள்வி:- சேலம் 8 வழி பசுமை சாலைக்கு எதிராக போராடும் மக்கள் தூத்துக்குடி சம்பவம் போல நடந்து விடும் என அச்சப்படுகிறார்களே?

பதில்:- தூத்துக்குடி சம்பவமே, போராட்டங்கள் நடக்கக் கூடாது என மக்களை அச்சுறுத்த வேண்டும், போராளிகளை அச்சுறுத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட ஒரு நாடகம் தான். அதில் 13 பேர் கொலை செய்யப்பட்டது முன் கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை.

இன்றைக்கு யார் வாயை திறந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். ஒரு ஆரம்ப சாத்தியக்கூறுகள் கூட செய்யாத ஆட்சி இன்று நடந்து கொண்டிருக்கிறது. 8 வழிச்சாலை அமைக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரிவித்து விட்டு மக்களுடன் கலந்து பேசி, பிறகு அதை அமைப்பதில் யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்கப் போவதில்லை. அதை எல்லாம் செய்யாமல் ஒரு சர்வாதிகாரியை போல இன்று இருக்கக் கூடிய ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.

கேள்வி:-தமிழகத்தில் தீவிரவாத அமைப்புகள் இருப்பதாக தமிழிசை சவுந்தர் ராஜன் கூறி உள்ளாரே?


பதில்:- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா இரண்டும் போய் விட்டால் இருக்கக் கூடிய தீவிரவாத அமைப்புகள் எல்லாம் போய் விடும்.

இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #tamilisai #chennaisalem8wayroad 

Tags:    

Similar News