தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ்தான்: திருநாவுக்கரசர் பேச்சு
ஈரோடு:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.
அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
தற்போது தமிழகத்தில் 60 கட்சிகள் உள்ளன. ரஜினி கட்சி தொடங்க இருக்கிறார். விஜய் போன்றோர் கட்சி தொடங்க போவதாக தகவல் உள்ளது. ஏற்கனவே கமல் கட்சி தொடங்கி விட்டார். எனவே தேர்தலுக்கு முன்பு இன்னும் 10 கட்சிகள் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அ.தி.மு.க. பல அணிகளாக இருக்கிறது. எனவே தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாததால் மக்கள் நலத்திட்டப்பணிகள் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழலாம்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலையில் சென்றால் 30 நிமிடம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அது 10 ஆயிரம் கோடி திட்டம் என்றும் கூறுகிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கிற கிராம சாலைகள், நகர சாலைகள், ஒன்றிய சாலைகள், 4 வழி மற்றும் தேசிய சாலைகளை செப்பனிட்டு சரி செய்தாலே அவர்கள் குறிப்பிடும் அளவு நேரத்தை மிச்சப்படுத்த முடியும். எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது. மக்களை மிரட்டி சிறையில் அடைப்பதை அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #dmk #congressparty