உள்ளூர் செய்திகள்

அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

பரமத்திவேலூர் பகுதி சிவன் கோவில்களில் காலபைரவருக்கு அஷ்டமி வழிபாடு

Published On 2022-06-08 11:27 GMT   |   Update On 2022-06-08 11:27 GMT

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் பரமேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காலபைரவர், பரமேஸ்வரர், அரசாயிஅம்மன், மாசாணி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், பாண்டமங்கலம் பழைய காசி விஸ்வநாதர் ஆலயம், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் வடபழனி ஆண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில், வடகரையாத்தூர் சிவன் கோவில், ஜேடர்பாளையம் சிவன் கோவில் மற்றும் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News