- தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சீர்காழி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் மாலை வரை மேகமூட்டமாக இருந்து வந்தது.
தொடர்ந்து இரவு 8 மணி முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேல் பலத்த மழை பெய்த நிலையில் அதன் பிறகும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் பணியை முடித்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே மழையினால் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்த மழையால் சீர்காழி நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் சாலையை கடந்து சென்றனர்.சீர்காழி பழைய பேருந்து நிலையம், தேர் வடக்கு வீதி உள்ளிட்ட சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இந்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.