உள்ளூர் செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2023-02-15 09:48 GMT   |   Update On 2023-02-15 09:48 GMT
  • பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர்.
  • மங்கையர்கரசி மற்றும் அலுவலக உதவியாளர் திம்மராயன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் தனியார் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை மஞ்சுளா என்பவரிடம் இருந்து ஓசூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த அரவிந்த் வாங்கி உள்ளார்.

இந்த பள்ளிக்கு ஏற்கனவே பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் இல்லாத நிலையில், பள்ளி நிர்வாகி அரவிந்த் புதிதாக தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொண்டார்.

இந்தநிலையில் வருவாய்த்துறையிடம் பள்ளிக்கு பொது கட்டிட அனுமதிக்கு அரவிந்த் விண்ணப்பித்தார். கடந்த 11-ந்தேதி ஓசூர் தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோர் அந்த மழலையர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சில குறைபாடுகளை அவர்கள் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என கூறினர்.

மேலும் பொது கட்டிட அனுமதிக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தாசில்தார் கவாஸ்கர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் ரூ.42 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத பள்ளி நிர்வாகி அரவிந்த், இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூ.42 ஆயிரத்தை பள்ளி நிர்வாகி அரவிந்திடம் கொடுத்து தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். போலீசாரின் ஆலோசனையின் பேரில் அரவிந்த் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோரை சந்தித்தார்.

அப்போது அவர்கள் அலுவலக உதவியாளா் திம்மராயனிடம் பணத்தை கொடுக்குமாறு கூறினர். இதையடுத்து அரவிந்த் பணத்தை அலுவலக உதவியாளரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் தாசில்தார் கவாஸ்கர், துணை தாசில்தார் மங்கையர்கரசி மற்றும் அலுவலக உதவியாளர் திம்மராயன் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார், 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து தாசில்தார், துணை தாசில்தார் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அலுவலக உதவியாளர் திம்மராயன் விடுவிக்கப்பட்டார். பின்னர் கைதான 2 பேரையும் கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News