உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மாணவர்கள் தர்ணா

Published On 2023-05-22 09:58 GMT   |   Update On 2023-05-22 09:58 GMT
  • கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.
  • தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் பெரியேரிபட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் சஞ்சய் (வயது 17), அவரது தம்பி ஜெயகாந்தன் (13) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரிடம் மாணவர்கள் கூறுகையில், எனது தந்தை கோபால் உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவியாக எனது தாயும் அங்கு இருந்து வருகிறார்.

இந்த நிலையில், எங்கள் வீட்டுக்கு செல்லும் வழித்தடத்தை அருகில் வசிக்கும் முருகன், கோவிந்தன் ஆகியோர் அடைத்து முட்களை போட்டுள்ளனர். இதனால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.

பால் விற்பனை செய்து தற்போது சாப்பிட்டு வருகிறோம். வீட்டுக்கு செல்ல முற்படும்போது அருகில் உள்ளவர்கள் எங்களை வரக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுகின்றனர்.

வழித்தட பிரச்சனைக்காக 3 முறை கலெக்டர் அலுவலகத்திற்கு தாய் தந்தை ஆகியோர் வந்து மனு அளித்துள்ளனர். போலீஸ் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே வீட்டின் முன்பு முட்களை போட்டு வழித்தடத்தை மறைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போது வீட்டுக்கு செல்ல முடியாமல் இருப்பதால் எங்களுக்கு பாதுகாப்பு தந்து காப்பகத்தில் இருக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News