செய்திகள் (Tamil News)

அன்னூரில் பெண்ணை கொன்று கொள்ளையடித்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது

Published On 2018-02-02 11:04 GMT   |   Update On 2018-02-02 11:04 GMT
அன்னூரில் பெண்ணை கொன்று கொள்ளையடித்த வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணுவாய்கரை தோட்டத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 55). விவசாயி. இவரது மனைவி ராஜாமணி (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

கணவன்-மனைவி இருவரும் தனியாக வசித்து வந்தனர். மயில்சாமி தனது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு டைல்ஸ் ஒட்டும் பணிக்காக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சாம்ராட் (25), அஜய் (18), பிந்து (25) ஆகியோர் ஈடுபட்டனர்.

சம்பவத்தன்று இரவு இவர்கள் 3 பேரும் குடிக்க தண்ணீர் கேட்பது போல மயில்சாமியின் வீட்டு கதவை தட்டினர். மயில்சாமி கதவை திறந்த போது அவர் மீது மின்சாரத்தை பாய்ச்சினர். இதில் நிலைகுலைந்த மயில்சாமி மயங்கினார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி ராஜாமணியை 3 பேரும் சேர்ந்து கட்டையால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர் அவர் அணிந்து இருந்த 6 பவுன் தங்க நகை, பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளின் உருவ படங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை வைத்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் 3 பேரும் மேற்கு வங்க மாநிலம் ஜல்வாய்பூரியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து தனிப்படை போலீசார் மேற்கு வங்க மாநிலத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அம்மாநில போலீசாரின் உதவியுடன் ஜல்வாய்பூரிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் நாளை மாலை கோவைக்கு அழைத்து வருகின்றனர்.

Similar News