செய்திகள் (Tamil News)
நாகை புதிய பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.

நாகை கடலில் இறங்கி போராட முயன்ற விவசாயிகள் கைது

Published On 2018-05-15 07:39 GMT   |   Update On 2018-05-15 07:39 GMT
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரி நாகை கடலில் இறங்கி போராட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். #Cauveryissue #TNFarmers #Protest
கீழ்வேளூர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரி நாகை கடலில் இறங்கி விவசாயிகள் இன்று தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்தினர்.

இன்று காலை 10 மணியளவில் நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் தனபாலன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக நாகை புதிய பஸ் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

அப்போது விவசாயிகள் "வேண்டும்.. வேண்டும்.. காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்..." என்று கோ‌ஷமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை அங்கு நின்ற போலீசார், தடுத்து நிறுத்தினர். ஊர்வலத்துக்கு அனுமதியில்லை என்று போலீசார் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஊர்வலமாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அங்கு கலெக்டர் சுரேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கும் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. எனவே உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். 2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் பாக்கி தொகை ரூ.160 கோடியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதேபோல் 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால், குளங்கள் தூர்வார வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே நாகை புதிய கடற்கரைக்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது கடலில் இறங்கிய விவசாயிகள் ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. மத்திய- மாநில அரசுகளே விவசாயிகளை வஞ்சிக்காதே...’ என்று கோ‌ஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #Cauveryissue #TNFarmers #Protest
Tags:    

Similar News