செய்திகள்

புதுவையில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

Published On 2018-05-30 11:31 GMT   |   Update On 2018-05-30 11:31 GMT
புதுவையில் வங்கி ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு 1.11.2017 முதல் நிலுவையில் உள்ளது. ஊதிய உயர்வு தொடர்பாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சுமூக முடிவு எட்டவில்லை. 2 சதவீத உயர்வுதான் அளிக்க முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை கண்டித்து இன்றும், நாளையும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கத்தினர் சார்பில் அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

இதன்படி இன்று வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால் புதுவையில் உள்ள 256 வங்கி கிளைகள் மூடப்பட்டு கிடந்தது. இதில் பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தம் செய்த ஊழியர்கள் யூகோ வங்கி முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க பொறுப்பாளர்கள் முனுசாமி, கருணாகரன், பிரேம்ராஜ், சுந்தரவரதன், பாலகிருஷ்ணன், திருமாறன், ரவி, கதிர்வேல், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலைநிறுத்தம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியதாவது:-

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு சமயத்தில் வங்கி ஊழியர்கள் இரவு- பகல் பாராமல் பணி செய்து அரசின் பாராட்டுகளை பெற்றோம்.

ஆனால், எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. வேலை நிறுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வேலை நிறுத்தத்தால் புதுவையில் ரூ.600 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறினர்.

Tags:    

Similar News