செய்திகள்

தி.மு.க.வை மீண்டும் சபைக்கு வரவழைக்க வேண்டும்: தினகரன்-விஜயதரணி கோரிக்கை

Published On 2018-05-31 07:38 GMT   |   Update On 2018-05-31 07:38 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்றி தி.மு.க.வை மீண்டும் சபைக்கு வரவழைக்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் மற்றும் விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளனர். #TNAssembly
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்விநேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி பேசியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக மூடப்படுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அந்த ஆலைக்கு மத்திய அரசு கொடுத்த லைசென்சை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை அனுமதி ரத்து செய்வது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

காமராஜர், எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது சட்டமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சியை அழைத்து மீண்டும் சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள். அதுபோல் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வை அழைத்து அனைவரும் இணைந்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

சபையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி நாங்கள் தான். எனவே தி.மு.க.வை அவைக்கு வரவழைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும் முதல்வருக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.

அபுபக்கர் (முஸ்லிம் லீக்):- எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருக்கும் போது தி.மு.க. ஒட்டுமொத்தமாக சபையை புறக்கணித்தது. உடனே கருணாநிதியை எம்.ஜி.ஆர் அழைத்து சட்டசபையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். எம்.ஜி.ஆர். வழியில் வந்த இந்த அரசு அதுபோன்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

தினகரன் (அ.ம.மு.க.):- நான் அரசுக்கு வைக்கும் கோரிக்கை அனைத்து கட்சிகளும் இந்த சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஒரு பிரதான எதிர்க்கட்சி. அதையும் அழைத்து சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக என்ன நடந்தது என்ற உண்மை மக்கள் அனைவருக்கும் தெரியும். சட்டமன்றம் என்பது மக்கள் கருத்துக்களை தெரிவித்து தீர்வுகாண வேண்டிய இடம். எனவே பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வையும் வரவழைக்க வேண்டும். அவர்கள் ஜனநாயக கடமையாற்ற சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீசெல்வம்:- கருத்துக்களை சொல்ல அனைவருக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை தி.மு.க. சபையில் வந்து சொல்லலாம். அதை விட்டுவிட்டு வெளியே கூட்டம் நடத்துகிறார்கள். ஜனநாயக கடமையாற்ற அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அவர்களை யாரும் வெளியேற்றவில்லை. எனவே அவர்களாகவே சபைக்கு வந்து பங்கேற்கலாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly
Tags:    

Similar News