செய்திகள்

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி- உறவினர்கள் மறியல்

Published On 2018-06-08 07:54 GMT   |   Update On 2018-06-08 07:54 GMT
வீட்டின் மாடியில் தேங்கி இருந்த மழைநீரை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி மெயின்ரோடு மேட்டிருப்பு பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் அமிர்த கணேசன் (வயது 18). இவர் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை அமிர்த கணேசன் அப்பகுதியில் உள்ள தனது தாத்தா சண்முகம் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு வீட்டின் மாடியில் மழை நீர் தேங்கி அடைத்திருப்பதை பார்த்தார்.

இதனால் தண்ணீரை வெளியேற்ற முயற்சி செய்தார். அப்போது அவர் செல்போன் பேசிய படியே தேங்கி கிடந்த தண்ணீரில் இறங்கினார்.

திடீரென அங்கு தாழ்வான சென்ற மின்கம்பி , அமிர்த கணேசன் உடல் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

நீண்டநேரமாக அமிர்த கணேசனை காணாததால் அவரது உறவினர்கள் தேடினர். அப்போது வீட்டின் மாடியில் அமிர்த கணேசன் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் மயிலாடுதுறை- தரங்கம் பாடி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தரங்கம்பாடி தாசில்தார் ஸ்ரீதர், வருவாய் ஆய்வாளர் பழனி, கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் மற்றும் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து வந்தனர்.

மறியல் செய்தவர்களுடன் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் , குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும். பலியான அமிர்த கணேசன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மயிலாடுதுறை சப்- கலெக்டர் தேன்மொழி விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் மறியல் செய்த உறவினர்களிடம் , இதுபற்றி அரசு கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

இதன்பின்னர் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News