செய்திகள்

பாரதமாதா கோவில், சர்வதேச யோகா மையம் அறிவிப்பு - தமிழக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

Published On 2018-07-01 02:52 GMT   |   Update On 2018-07-01 02:52 GMT
தமிழகத்தில் பாரத மாதா கோவில் மற்றும் சர்வதேச யோகா மையம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை:

ஆர்.எஸ்.எஸ். மாநில தலைவர் க.குமாரசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவாக இருந்தது.

இந்த தேசம் ஒன்றல்ல, வெவ்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட பல்வேறு நாடுகளின் தொகுப்பு என்ற இடதுசாரி சித்தாந்தம் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்க தொடங்கி உள்ள சூழலில், மொழியின் பெயராலும், இனத்தின் பெயராலும் பிராந்தியவாதம் தலைதூக்கி உள்ள சூழலில் தேசியத்தை வலியுறுத்தும் வரலாற்று சின்னம் தமிழகத்தில் அமைவதன் அவசியத்தை புரிந்து, பாரதமாதா கோவில் கட்ட தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதே போன்று, பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று சர்வதேச யோகா தினத்தை ஐ.நா.சபை அறிவித்து சிறப்பித்துள்ள நிலையில், சர்வதேச யோகா மையம் அமைக்க நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் முன் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவிலும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையமும் அமைக்க முன் வந்துள்ள தமிழக அரசுக்கு இந்த தேசத்தில் பிறந்த பாரதமாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News