செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்

Published On 2018-07-10 16:10 GMT   |   Update On 2018-07-10 16:10 GMT
உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியில்லாமல் மணல் ஏற்றி சென்ற 5 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் நேற்று இரவு உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது விருத்தாசலம் சாலையில் மணல் ஏற்றிய 2 லாரிகள் வேகமாக வந்தன. போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரிகளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருவெண்ணைநல்லூர் சாலையில் உள்ள சே‌ஷ நதியில் சிலர் மினி லாரிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அங்கு போலீசார் சென்ற போது மணல் அள்ளி கொண்டிருந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதையடுத்து அங்கிருந்த 2 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதுபோல் உளுந்தாண்டவர் கோவில் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு கும்பல் லாரியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தது.

இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

மணல் ஏற்றிய நிலையில் அங்கு நின்ற ஒரு லாரியையும், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News