செய்திகள் (Tamil News)
ஒகேனக்கல் ஐவர் பாணியில் பொங்கி பாயும் புது வெள்ளம்.

ஒகேனக்கல்லுக்கு 10 நாட்கள் சுற்றுலா வர வேண்டாம்- சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

Published On 2018-07-18 04:42 GMT   |   Update On 2018-07-18 04:42 GMT
சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு 10 நாட்களுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. #Hogenakkal
தருமபுரி:

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. 11.30 மணிக்கு பிறகு நீர்வரத்து 1 லட்சத்து 20 அயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 7 மணி முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை தருமபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒகேனக்கல் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்.

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் இன்னும் ஒரு வாரத்திற்கு 1,20,000 கனஅடி நீர்வரத்து வரும் நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் சுற்றுலா வருவதை இன்னும் 10 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.

மேலும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு செல்ல அனுமதிக்காமல், வரும் வாகனங்கள் அனைத்தும் வனத்துறை சோதனை சாவடி அருகே தடுத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வெள்ளப்பெருக்கால் ஒகேனக்கலில் வாழ்வாதாரம் பாதிக்கும் தொழிலாளர்களுக்கு, ‘‘பிளாஸ்டிக் இல்லா ஒகேனக்கல்’’ உருவாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும்.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்.

மேலும் காவேரி ஆற்று பகுதியில் 25 இடங்கள் வெள்ள பெருக்கினால் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி ஆற்று பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறை, வருவாய்த் துறை தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Hogenakkal
Tags:    

Similar News