செய்திகள்

தஞ்சையில் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2018-07-25 11:58 GMT   |   Update On 2018-07-25 11:58 GMT
சாலையை சீரமைக்க கோரி தஞ்சை பிருந்தாவனம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை சீனிவாசபுரம் சி.ஆர்.சி. டெப்போ அருகே உள்ள பிருந்தாவனம் பகுதியில் உள்ள பூதலூர் சாலை கடந்த சில மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மற்றும் மாணவ- மாணவிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் சாலைகளில் கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடப்பதால் நடந்து செல்பவர்களின் கால்களை ‘பதம்’ பார்த்து காயம் ஏற்பட்டு விடுகிறது.

இதனால் சாலையை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை. மேலும் அந்த பகுதியில் தெருவிளக்குகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் மக்கள் திண்டாடி வந்தனர்.

தொடர்ந்து பிருந்தாவனம் பகுதியில் சாலையை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வந்தனர். இதனால் ஆவேசமடைந்த இப்பகுதியை சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் இன்று காலை பிருந்தாவனம் பகுதியில் சாலை மறியல் செய்ய திரண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியநாராயணன் மற்றும் கள்ளபெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது அங்கு சாலை மறியலில் நின்ற பொது மக்களிடம் ‘‘இன்னும் ஒருசில நாட்களில் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியளித்தனர். இதை கேட்டு அப்பகுதி பெண்கள் ஆவேசம் அடைந்தனர். ஒவ்வொரு முறையும் இதே பதிலை தான் கூறுகிறீர்கள். சாலை சரிசெய்ய முடியுமா? முடியாதா’’? என்று வட்டார வளர்ச்சி அலுவலர் சூரிய நாராயணனை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பொது மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் சில நாட்களில் சாலை கண்டிப்பாக சீரமைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News