செய்திகள்

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-08-03 22:02 GMT   |   Update On 2018-08-03 22:02 GMT
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TamilNadu #Rain #WeatherResearchCenter
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தொடங்கி முதல் 2 மாதம் முடிந்துள்ளது. பருவமழை தொடங்கிய ஜூன் 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி (நேற்று) வரை தமிழகம், புதுச்சேரியில் 11.2 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பைவிட 7 சதவீதம் குறைவு என்றாலும், இயல்பை ஒட்டியே மழை பெய்து இருக்கிறது.

அதே நேரத்தில் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கோவை, தேனி, நெல்லை ஆகிய பகுதிகளில் இயல்பைவிட 50 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று முன்தினம்) வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்து இருக்கிறது.

தென் இந்திய பகுதி வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. செப்டம்பர் மாத இறுதிவரை இதுபோல் வெப்பசலனம் கார ணமாக மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் அவ்வப்போது மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், மதுரை விமானநிலையம் 6 செ.மீ., திருபுவனம், காட்டுமன்னார்கோவில், அணைக்காரன் சத்திரம், செங்கல்பட்டு தலா 5 செ.மீ., மாமல்லபுரம், திருமயம் தலா 4 செ.மீ., ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் தலா 3 செ.மீ. உள்பட மேலும் சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. #TamilNadu #Rain #WeatherResearchCenter
Tags:    

Similar News