செய்திகள் (Tamil News)

சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.28 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்

Published On 2018-08-22 10:01 GMT   |   Update On 2018-08-22 10:01 GMT
சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு செம்மர கட்டைகளை அனுப்ப முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். #ChennaiAirport
ஆலந்தூர்:

சரக்கு விமானங்கள் மூலம் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு பார்சல்கள் அனுப்பப்படுகின்றன.

நேற்று சென்னையில் இருந்து ஹாங்காங்கிற்கு அனுப்புவதற்காக சில பார்சல்கள் விமானநிலைய சரக்கு பெட்டகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அதில் கைவினைப் பொருட்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பார்சலில் இருப்பது கைவினைப் பொருட்கள் தானா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சிறப்பு நுண்ணறிவு பிரிவு புலன் விசாரணை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அந்த பார்சல்கள் பிரித்து பார்க்கப்பட்டன.

அப்போது, அதில் கைவினைப் பொருட்களுக்கு பதிலாக செம்மரகட்டைகள் சிறு சிறு துண்டுகளாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த பார்சல்களில் மொத்தம் 413 கிலோ செம்மரக்கட்டைகள் இருந்தன.

இவற்றின் மதிப்பு ரூ.28 லட்சம். இந்த பார்சல்களை அனுப்ப ஏற்பாடு செய்தது யார் என்பது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த சென்னை முகவரி போலி முகவரி என்று தெரியவந்தது. பார்சலில் போய் சேர வேண்டிய ஹாங்காங் முகவரியும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு செம்மர கட்டைகளை அனுப்ப முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. #ChennaiAirport
Tags:    

Similar News