செய்திகள் (Tamil News)

திண்டுக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

Published On 2018-08-24 09:51 GMT   |   Update On 2018-08-24 09:51 GMT
திண்டுக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் புகுந்த கொள்ளையர் அங்கு பணம், நகை கிடைக்காததால் ஏமாற்றத்தில் திரும்பினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அடுத்துள்ள கே.புதுக்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம் உள்ளது. இதன் செயலாளராக ஞானசேகரன் (வயது48) என்பவர் பணியாற்றி வருகிறார்.

கடந்த 21-ந் தேதி மாலை பணிகள் முடிந்ததும் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டார். மறுநாள் அரசு விடுமுறை என்பதால் நேற்று காலையில் வங்கிக்கு வந்தார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அலுவலக ஜன்னல் கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது.

இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஞானசேகரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற் கொண்டனர். கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலகம் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது. கீழ் தளத்தில் நகை மற்றும் பணம் வைக்கும் அறை உள்ளது. மாடிப்படி வழியாக மேலே ஏறி வந்த கொள்ளையர்கள் ஜன்னல் கம்பிகளை வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே புகுந்தனர்.

ஆனால் அந்த அறையில் நகை, பணம் எதுவும் இல்லை. கீழ் தளத்தில் உள்ள லாக்கரில்தான் பல கோடி மதிப்பிலான நகைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

கோடிக்கணக்கான நகை மற்றும் பணம் உள்ள இந்த அறையில் சி.சி.டி.வி. கேமிரா கிடையாது. காவலர்களும் இல்லை. இதனாலேயே இந்த கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டில் இதே கூட்டுறவு சங்கத்தில் கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News