செய்திகள் (Tamil News)

கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றாலும் திமுக-காங். கூட்டணியில் பாதிப்பில்லை- திருநாவுக்கரசர்

Published On 2018-08-25 06:27 GMT   |   Update On 2018-08-25 06:27 GMT
மறைந்த தலைவர் கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #DMK #Congress #Amitshah #Thirunavukkarasar
சென்னை:

கேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தால் அம்மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி, நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் 4 லாரிகளில் அரிசி, உணவு பொருட்கள் போன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி இந்தியா முழுவதும் இருந்து காங்கிரஸ் சார்பில் அனுப்பப்படுகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. காங். எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளமாக ரூ.10 லட்சம், முன்னாள் எம்.பி., எம்.எல். ஏ.க்கள் சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சென்னையில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோல் கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்து இருக்கின்றன. 150 ஆண்டுகள் பழமையான இந்த அணை முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்துள்ளது. இவை தவிர தமிழ்நாட்டில் உள்ள மற்ற அணைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே நிபுணர் குழுக்களை அமைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வளவு வெள்ளம் வந்தும் டெல்டா மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. கால்வாய்களை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.


மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இரங்கல் கூட்டத்துக்கு தி.மு.க. சார்பில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் இந்த கூட்டத்துக்கு வருவதால் தி.மு.க.-காங்கிரஸ் உறவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

கேரளா வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிரஞ்சீவி, திரவியம், பி.வி. தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி. ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #Congress #Amitshah #Thirunavukkarasar
Tags:    

Similar News