செய்திகள்

பிரதமர் மோடியை பார்த்து எதிர்கட்சிகள் பயப்படுகின்றன - வானதி சீனிவாசன்

Published On 2018-10-01 12:00 GMT   |   Update On 2018-10-01 12:01 GMT
கோவையில் நடந்த பாரதிய ஜனதா செயற்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வானதி சீனிவாசன், பாரத பிரதமர் நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் பயப்படுவதாக பேசினார்.
கவுண்டம்பாளையம்:

பாரதிய ஜனதா கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வீரபாண்டி பிரிவு பகுதியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த 4 தலைமுறைகளாக இந்திய மக்களுக்கு ஒன்றும் செய்யாத காங்கிரஸ் கட்சி நாம் நாலாரை வருடத்தில் செய்ததை பார்த்து திகைத்து நிற்கிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியை கண்டு காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் பயப்படுகின்றன.

பா.ஜனதா அகில இந்திய தலைவர் அமித்ஷா தந்துள்ள 23 தேர்தல் பூத் பணிகளை தினமும் பார்த்து தவறாமல் செய்தாலே தமிழகத்தில் நாம் ஆட்சியை பிடித்து விடலாம். ஒவ்வொரு பகுதிக்கும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு கட்சி வளர்ச்சிப் பணி செய்தல் வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெற திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும்.

தொடர்ந்து கட்சியில் புதிதாக இணைந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு சால்வைகள் அனுவிக்கப்பட்டு உறுப்பினர் கார்டுகள் வழங்கப்பட்டன. புதிய வீரபாண்டி நகர தலைவராக ரூபேஷ் நியமிக்கப்பட்டார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

சிறுமுகை, வதம்பச்சேரி, வாகராயம்பாளையம் போன்ற கிராமங்களில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரவேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொள்வது,

சூலூர் விமானப்படை விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு சந்தை மதிப்பை உயர்த்தி கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
Tags:    

Similar News