செய்திகள்

தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு- ஜிகே வாசன்

Published On 2018-12-22 09:11 GMT   |   Update On 2018-12-22 09:11 GMT
தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்றும் அது நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும் என்றும் ஜி.கே.வாசன் கூறினார். #TamilMaanilacongress #GKVasan
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கி வைத்து ஜி.கே.வாசன் பேசியதாவது:-

தா.மா.கா. தமிழக அரசியல் கட்சிகளில் வித்தியாசமான கட்சி. அரசியலில் நேர்மையும் தூய்மையும் நிலைக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில் முன்னணி கட்சியாக திகழ்கிறது.

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. என்பதை வெளிப்படுத்தும் வகையில் மக்களின் ஆதரவு பெருகி உள்ளது. தேர்தல் வருவதால் தொண்டர்கள் மேலும் உற்சாகமாக செயல்பட வேண்டும். நமக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

த.மா.கா.வின் அடையாள சின்னமான சைக்கிள் சின்னம் மீண்டும் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு கோர்ட்டு தீர்ப்பின் மூலம் பிரகாசமாகி உள்ளது. அதை பெற தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

கூட்டணி அமைப்பதற்கான முடிவை தலைவர் என்ற முறையில் என்னிடம் வழங்கி உள்ளீர்கள். உங்கள் கருத்தையும் அறிந்து மக்கள் ஏற்கும் கூட்டணியில் த.மா.கா. இடம்பெறும்.

தேர்தல் வரும்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். அது நிச்சயம் நல்ல முடிவாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

* கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாய கடன், கல்விக்கடன் அனைத்தையும் முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

*ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு உறுதியாக மேற்கொள்ள வேண்டும்.

* வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் முடிவை கட்சி தலைவரான ஜி.கே. வாசன் இடம் ஒப்படைப்பது.

* ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை தடுக்க தேர்தல் கமி‌ஷன் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைத் தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், என்.எஸ்.வி. சித்தன், தலைமை நிலையச் செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேசன், டி.எம்.பிரபாகர், டி.என்.அசோகன், சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜு.சாக்கோ, சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார் அருண்குமார், விக்டரி மோகன், தாம்பரம் மணி, சிவகுமார், டி.ஆர்.செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #TamilMaanilacongress #GKVasan
Tags:    

Similar News