செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது

Published On 2019-01-01 07:54 GMT   |   Update On 2019-01-01 08:12 GMT
தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அமலுக்கு வந்தது. பொதுமக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை வீடு வீடாக சென்று சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Plasticban #TN
சென்னை:

தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி (இன்று) முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது.

பிளாஸ்டிக்குகளால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் குவளை, தண்ணீர் பாக்கெட், கைப்பை, கொடி, உறிஞ்சு குழல் உள்பட 14 வகையான பொருட்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு அதை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான ஓட்டல், கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக எளிதில் மக்கும் வகையிலான கைப்பைகளை வழங்க ஆரம்பித்தனர்.

மேலும் பல கடைகள், மால்களில் துணிப்பைகளை வழங்கினர். அதற்கு அளவு தரத்துக்கு ஏற்ப பொதுமக்களிடம் கட்டணமும் வசூலித்து வருகிறார்கள்.



பிளாஸ்டிக் தடை காரணமாக துணிப்பைகளை விலை கொடுத்து வாங்கி அதில் பொருட்களை வைத்து கொண்டு செல்கிறார்கள். சிலர் வீட்டில் இருந்து துணிப்பைகளை எடுத்து வந்து பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

பிளாஸ்டிக் கைப்பை, தட்டு, தேநீர், குவளை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்று வந்த கடை வியாபாரிகள் தற்போது அதற்கு பதில் எளிதில் மக்கக்கூடிய கைப்பைகள், துணிப்பைகள், சணல் பை, பாக்கு மட்டை தட்டுகள், பேப்பர் குவளை, மரக்கட்டையிலான கரண்டி ஆகியவற்றை விற்பனை செய்ய தொடங்கி விட்டனர்.

இறைச்சி கடை மற்றும் இட்லி, தோசை மாவு கடைகளுக்கு பாத்திரங்களுடன் செல்கிறார்கள். இப்படி பிளாஸ்டிக் பொருட்கள் தடை காரணமாக பெரும்பாலானவர்கள் மாறிவிட்டனர்.

தமிழக அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடை இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது. அதன்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பறிமுதல், அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் ‌ஷம்பு கல்லோலிகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள், பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் அபராதத்துக்கு உள்ளாவார்கள். பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருள் தடை திட்டத்தை அமல்படுத்த தீவிர கண்காணிப்பில் இன்று முதல் ஈடுபடுகிறார்கள்.

ஏற்கனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் வீடுகளில் வைத்துள்ளனர். அதனை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரும்போது அவர்கள் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளில் உள்ள பழைய பிளாஸ்டிக் கைப்பை போன்றவற்றை குப்பை சேகரிப்பவர்களிடம் வழங்கலாம். #Plasticban #TN

Tags:    

Similar News