செய்திகள்

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு- தினகரன்-வைகோ கண்டனம்

Published On 2019-01-09 08:05 GMT   |   Update On 2019-01-09 10:03 GMT
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளதற்கு தினகரன், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #vaiko #dinakaran #10percentreservation

சென்னை:

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளதற்கு தினகரன், வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு.

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள எந்த சமூகத்தவரும் உதவி செய்யப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க நமது அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. இந்த உண்மை நன்றாகத் தெரிந்திருந்தும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் இப்படி ஒரு சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து அரசியல் சித்து விளையாட்டைச் செய்ய முனைகிறது.

நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேறினாலும் கூட, மாநில அரசின் ஒப்புதலுக்காக இம்மசோதா தமிழக சட்டமன்றத்திற்கு வரும்போது, துணிச்சலோடு இம்மசோதாவை நிராகரித்து, இந்த வி‌ஷயத்திலாவது அம்மாவின் கொள்கையை நிலைநிறுத்த தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:-


பா.ஜ.க. அரசு உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு என்று சட்ட முன்வடிவு கொண்டு வந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, இடஒதுக்கீட்டு கோட்பாட்டையே சீர்குலைக்கும் சதி வலைப்பின்னல் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பா.ஜ.க. அரசின் இத்தகைய சதித்திட்டத்திற்கு சமூகநீதி கோட்பாட்டில் உறுதிகொண்ட சில கட்சிகளும் துணை போவது என்பது மிகுந்த வேதனை தருகிறது.

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் சனாதன கூட்டத்தின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டு மோடி அரசின் 124-வது அரசியல் சட்டத்திருத்த முன்வடிவை அனைத்துக் கட்சிகளும் மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்து பா.ஜ.க. அரசின் சமூக அநீதிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #vaiko #dinakaran #10percentreservation 

Tags:    

Similar News