செய்திகள்

காரிமங்கலம் அகரம் பிரிவு சாலையில் மினிபஸ் கவிழ்ந்ததில் 7 பேர் படுகாயம்

Published On 2019-02-07 15:18 GMT   |   Update On 2019-02-07 15:18 GMT
காரிமங்கலம் அகரம் பிரிவு சாலையில் மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரிமங்கலம்:

கரூரில் உள்ள திருமண நிகழ்ச்சிக்குசென்று விட்டு உறவினர்கள் பலருடன் காவேரிப்பட்டணத்தை நோக்கி மினிபஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த மினி பஸ்சை  கரூர் வெண்ணாம் பட்டியை சேர்ந்த பெரியசாமி (25) என்பவர் ஓட்டி வந்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பைபாஸ் ரோட்டில் கார் மற்றும் இந்த மினிபஸ் போட்டி போட்டுக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் அகரம் பிரிவு சாலை அருகே சென்றபோது காரும் வெகுவேகமாக மினிபஸ்சை முந்திசெல்ல முயன்றுள்ளது.

அப்போது கார் மீது மினிபஸ் மோதாமல் இருக்க மினிபஸ்சை வலது புறமாக டிரைவர் பெரியசாமி திருப்பியபோது, வண்டி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மனிபஸ் சாலையில் உருண்டு கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கரூர் பகுதியை சேர்ந்த திருப்பதிராஜா, சாந்தி, ரவி, செல்வம் ஆனந்தி என்பவர் உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கு கார் ஓட்டுநர் முக்கிய காரணமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் கார் ஓட்டுநரிடம் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடுரோட்டில் மினிபஸ் கவிழ்ந்ததால் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News