செய்திகள்

திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சதி- திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2019-02-11 06:38 GMT   |   Update On 2019-02-11 07:51 GMT
தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் திட்டமிட்டு சதி முயற்சியில் ஈடுபடுவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். #VCK #Thirumavalavan #DMK #PMK
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலைமலருக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க கூட்டணியில் குழப்பம் நிலவுவதாக சொல்லப்படுகிறதே?

பதில்:-தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க.வை பலவீனப்படுத்த சிலர் திட்டமிட்டு இவ்வாறான சதி முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

பா.ம.க.வுக்கும், விடுதலை சிறுத்தைக்கும் உள்ள முரண்பாட்டை பயன்படுத்தி தி.மு.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பா.ம.க.வை பொறுத்த வரையில் அரசியலில் தமக்கான முதல் எதிரியாக தி.மு.க.வைத்தான் குறி வைத்து செயல்பட்டு வருகிறது. இது ஊரறிந்த உண்மை. விடுதலை சிறுத்தைகளை முதல் எதிரிகளாக அவர்கள் பார்க்கவில்லை. எங்களை ஒரு கருவியாக பயன்படுத்த விரும்புகின்றனர்.

தி.மு.க.வுக்கு எதிராக உள்ள மேலும் சில கட்சிகளும் அதே யுக்தியை கையாள்கின்றன. அதாவது அவர்களுக்கு தி.மு.க.வை வீழ்த்துவதுதான் இலக்கு. விடுதலைசிறுத்தைகளை அல்ல.

தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகள் இடையேயும் பேசி கொண்டு இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் தங்களின் பேரத்தை உயர்த்தி கொள்ள முடியும் என்பதே அவர்களின் தந்திரம்.

அத்துடன் விடுதலை சிறுத்தைகளையும் சீண்டி அதன் மூலம் தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைக்கும் இடையில் ஏதேனும் ஒரு முரண்பாட்டை உருவாக்கலாமா? என்றும் பகல் கனவு காண்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகளை பற்றியும் பா.ம.க.வை பற்றியும் தி.மு.க. தலைமைக்கு நன்கு தெரியும். எனவே தி.மு.க. கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் கனவு ஒரு போதும் பலிக்காது.

கேள்வி:- தி.மு.க. தரப்பில் இருந்து பா.ம.க.வுடன் கூட்டணி பற்றி பேசுவதாக கூறப்படுகிறதே?

பதில்:- அது உண்மையாக கூட இருக்கலாம். பா.ம.க.வுக்கு இது வாடிக்கைதான். அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக கொஞ்சம்கூட கூச்சப்படாமல் எதையும் செய்வார்கள்.

ஆனால் உண்மையில் பா.ம.க.வின் நோக்கம் தி.மு.க.வை வீழ்த்துவதுதான். அதிலும் குறிப்பாக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குள் தி.மு.க.வை பலவீனப்படுத்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படக்கூடியவர்கள். இது கலைஞர் காலத்தில் இருந்து தொடர்கிறது.

தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சியை பிடிப்பதற்கு தி.மு.க.தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று ராமதாஸ் நினைக்கிறார். எனவே தி.மு.க.வுடன் பா.ம.க. உறவு வைத்து கொள்ள விரும்புவது உண்மை என்றாலும் அது நஞ்சு கலந்த நயவஞ்சக உறவாகத்தான் இருக்கும்.

கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றால் உங்கள் நிலை என்ன?

பதில்:- தமிழகத்தை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டணியை சிதற விடாமல் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில்தான் இடம் பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.



கேள்வி:- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேராது என்று சொல்கிறீர்களா?

பதில்:- ஆமாம், தி.மு.க.- பா.ம.க. கூட்டணி உருவாக வாய்ப்பு இல்லை. பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் பா.ம.க.வோடு பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் எதிர்பார்த்த அளவில் அ.தி.மு.க.வுடன் பேரம் படியாததால் அவர்களே திட்டமிட்டு இந்த நாடக அரசியலை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் அ.தி.மு.க.வை அவர்கள் இழுத்த இழுப்புக்கு பணிய வைப்பதற்கு தான் இந்த நாடக அரசியல்.

கேள்வி:- ஒருவேளை தி.மு.க., பா.ம.க.வையும், விடுதலை சிறுத்தையையும் ஒரே அணியில் வைத்து கொள்ள முயற்சி செய்தால் உடன்படுவீர்களா?

பதில்:- இதுகுறித்து ஏற்கனவே பலமுறை தெளிவு படுத்தி இருக்கிறோம். பா.ம.க. ஒரு சனாதன கட்சி. அதற்கும், பா.ஜனதாவுக்கும் வேறுபாடு இல்லை. சாதி கலவரங்களையோ, மத கலவரங்களையோ தூண்டி விட்டு ஈவு இரக்கமின்றி அப்பாவி மக்களை பலி கொடுத்து அரசியல் ஆதாயம் தேடுவதில் குறியாக இருப்பவர்கள்.

எனவே சனாதன சக்திகளுடன் தேர்தல் யுக்தி என்ற அடிப்படையிலும் ஒரு போதும் சமரசம் ஆக மாட்டோம். அதாவது பா.ம.க., பா.ஜனதா இருக்கும் அணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது. இந்த அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

கேள்வி:- பிரதமர் மோடி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளாரே?

பதில்:- அந்த அளவிற்கு எதிர்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு மோடி நடுக்கம் அடைந்து இருக்கிறார். தனி நபர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள்கிறது என்பதை விட மோடியை இயக்கும் சனாதன பயங்கரவாத அரசியலை வீழ்த்த வேண்டும் என்பதற்காகதான் ஒன்று சேர்கின்றனர்.

கேள்வி:- பா.ம.க.வை சேர்த்தால் தி.மு.க. கூட்டணி மேலும் வலுப்பெறத்தானே செய்யும்?

பதில்:- ஒருவேளை கூட்டணி வலு பெறலாம். ஆனால் தி.மு.க. பலவீனமாகும். ஏனென்றால் தற்போது உள்ள கூட்டணி பலத்தை வைத்தே தி.மு.க. வெற்றி பெறக்கூடிய பல தொகுதிகளை பா.ம.க.வுக்கு விட்டு கொடுக்க நேரிடும். அதனால் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தி.மு.க.தான் பலவீனம் அடையும்.

தி.மு.க.வால் பா.ம.க.வுக்கு பயன் கிடைக்குமே தவிர பா.ம.க.வால் தி.மு.க.வுக்கு எந்த பயனும் கிடைக்காது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார். #VCK #Thirumavalavan #DMK #PMK
Tags:    

Similar News