செய்திகள்

அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ஜனதா மீண்டும் முயற்சி

Published On 2019-02-25 06:07 GMT   |   Update On 2019-02-25 08:22 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்க்க பா.ஜனதா மீண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. #ADMK #Vijayakanth #BJP

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த அணியில் இடம் பெறும் என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு முதன் முதலில் அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்தனர்.

அ.தி.மு.க- பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற சம்மதித்த விஜயகாந்த் முதலில் டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 இடங்களும், பாரதிய ஜனதாவுக்கு 5 இடங்களும், என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டன. இதன் காரணமாக தே.மு.தி.க.வுக்கு அதிக இடங்களை ஒதுக்க இயலாத நிலைக்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது.

இதன் காரணமாக அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி உருவானது.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் அடுத்தடுத்து விஜயகாந்தை சந்தித்து பேசினார்கள். இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு சுமார் 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே தே.மு.தி.க.வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க. கூட்டணியிலும் சுமூக நிலை உருவாகவில்லை.

அ.தி.மு.க.-தி.மு.க. இரு கூட்டணியிலும் தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகள் கிடைக்குமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 23 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதியை வைத்துக் கொண்டு 3 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

 


அதுபோல தி.மு.க. கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் மீதம் இருப்பது 22 தொகுதிகள்தான். அதில் 20 தொகுதிகளை வைத்துக் கொண்டு 2 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க தி.மு.க. தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் தே.மு.தி.க. குறைந்தபட்சம் 7, அதிகப்பட்சம் 9 என்ற எண்ணிக்கையில் இரு அணிகளிடமும் தொகுதிகளை எதிர்பார்க்கிறது.

தே.மு.தி.க. விரும்பும் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., தி.மு.க. இரு கூட்டணியிலும் தொகுதிகள் இல்லை என்பதே எதார்த்தமான நிலையாக உள்ளது. என்றாலும் 5 முதல் 7 தொகுதிகளையாவது பெற்று விட வேண்டும் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாகத்தான் 40 தொகுதிகளிலும் போட்டியிட தே.மு.தி.க. நிர்வாகிகளிடம் விருப்ப மனு வாங்கும் அறிவிப்பை தே.மு.தி.க. மேலிடம் வெளியிட்டுள்ளது. விருப்ப மனு வாங்கும் கால கட்டத்துக்குள் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிடமும் தொடர்ந்து பேசி எந்த அணியில் சாதகமான நிலை வருகிறதோ அங்கு சேரலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே எந்த கட்சி அதிக தொகுதிகளை தருகிறதோ அங்கு சேர்ந்து விடலாம் என்று தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் அனைவரும் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை வலியுறுத்தி வருகிறார்கள். எனவே எந்த கூட்டணியில் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்பது தே.மு.தி.க.வின் இலக்காக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி தி.மு.க.- அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் தே.மு.தி.க.வுக்கு குறைவான தொகுதிகளை கொடுத்து அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே திட்டமாக உள்ளது. அதற்கேற்ப தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க., தி.மு.க. தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதுவரை தே.மு.தி.க. பிடி கொடுக்கவில்லை. இதனால் இழுபறி நீடித்தப்படிதான் உள்ளது.

இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜனதா தலைவர்கள் தற்போது மும்முரமாகி உள்ளனர். நேற்று சிறு-குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வந்த மத்திய மந்திரி பியூஸ்கோயல் இது தொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர், “எப்படியாவது தே.மு.தி.க.வை நமது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடுங்கள். இதற்காக மீண்டும் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள். விஜயகாந்தை விட்டு விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

தே.மு.தி.க.வை இழுப்பது பற்றி சுமார் 30 நிமிடங்கள் மத்திய மந்திரி பியூஸ்கோயல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடனும் ஆலோசனை நடத்தினார். அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் தே.மு.தி.க.வுடன் மீண்டும் புதியதாக பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுக்கலாம் என்று பியூஸ்கோயல் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் விஜயகாந்தை திருப்தி செய்து தங்கள் அணிக்குள் கொண்டுவர முடியும் என்று பியூஸ்கோயல் கருதுகிறார்.

கூடுதல் தொகுதிகளுக்கு தே.மு.தி.க. சம்மதிக்கும் பட்சத்தில் தொகுதி பங்கீட்டை உடனே முடிக்கவும் அ.தி.மு.க.-பா.ஜனதா தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக மத்திய மந்திரி பியூஸ்கோயல் விரைவில் மீண்டும் சென்னை வர உள்ளார்.

அவர் தே.மு.தி.க. தலைவர்கள் விஜயகாந்த், பிரேமலதா, சுதீசை சந்தித்து இன்னொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது. அதன் பிறகு தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பா.ஜனதா சமரசம் செய்தாலும் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. எனவே பா.ஜனதா புதிய சமரச திட்டத்தை தே.மு.தி.க. ஏற்குமா? என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.

இதுகுறித்து தே.மு.தி.க. மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “ பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. முக்கிய அங்கம் வகிக்கும். அ.தி.மு.க., தி.மு.க. இரு தரப்பினரிடமும் பேசி வருகிறோம். 5 முதல் 8 தொகுதிகள் கிடைத்தால் கூட்டணி உறுதியாகி விடும். வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம். அதில் சுமூக முடிவு ஏற்பட்டதும் கூட்டணி அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார்” என்றார்.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களது விருப்ப மனுக்களை 6-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்துக்கு தே.மு.தி.க. எந்த முடிவையும் அறிவிக்காது என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தே.மு.தி.க.வை சமரசம் செய்து தங்கள் அணியில் சேர வைப்பதற்கு தி.மு.க. மூத்த தலைவர்களும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர்களும், அ.தி.மு.க. தலைவர்களும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

எனவே தே.மு.தி.க. எந்த கூட்டணி பக்கம் சாயும் என்பது இன்னும் 2 நாட்களில் தெரிவதற்கு வாய்ப்பு உள்ளது. #ADMK #Vijayakanth #BJP

Tags:    

Similar News