செய்திகள் (Tamil News)
மது விற்பனை

தூத்துக்குடியில் ஒரே நாளில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை

Published On 2021-06-16 03:36 GMT   |   Update On 2021-06-16 03:36 GMT
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக மீண்டும் திறக்கப்பட்டன.
தூத்துக்குடி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வு காரணமாக மீண்டும் திறக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 144 கடைகள் திறக்கப்பட்டன.

நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து கடைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால் சில கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. பல கடைகளில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. இதனால் மதுபானங்கள் விற்பனையும் பெரிய அளவில் உச்சத்தை எட்டவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனையாகும் அளவுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன.

நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் ரூ.4½ கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி இருந்தன. இதில் 1,700 பெட்டி பீர் வகைகளும், 6 ஆயிரம் பெட்டி இதர மது பானங்களும் விற்பனையாகி இருந்தன. இது வழக்கமான விற்பனைதான் என்றும், அனைத்து மதுபானங்களும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News