உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் மாணவரை கீழே தள்ளி விட்ட அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் மீது வழக்குப்பதிவு

Published On 2023-05-12 09:26 GMT   |   Update On 2023-05-12 09:26 GMT
  • வேறு நிறுத்தத்தில் இறங்கி கொள்ள ெசான்னதின் பேரில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
  • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடார் வீதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகன் மோகன் பிரபு(17). பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். இவர்களது உறவினர்கள் கோவையில் இருப்பதால், மோகன் பிரபுவை கோவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.

இதற்காக மோகன்பிரபு கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார். பின்னர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர், மோகன் பிரபுவிடம் பஸ் சிங்காநல்லூர் செல்லாது, ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து சிங்காநல்லூருக்கு செல்லுமாறு கூறினார்.

அதற்கு அவர் கண்டக்டரிடம் ஏன் தகவல் பலகையை மாற்றாமல் வைத்துள்ளீர்கள் என கேட்டார். அதில் சிங்காநல்லூர் என்று போடப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஸ் கண்டக்டர் மோகன் பிரபுவை தகாத வார்த்தைகளால் பேசினார். பஸ்சை நிறுத்தி எழுந்து வந்த டிரைவர், மோகன் பிரபுவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க்கில் கீழே தள்ளி இறக்கி விட்டு சென்றார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து மோகன் பிரபு ஆர்.எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அரசு பஸ் டிரைவர் ஆனந்த கிருஷ்ணன், பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News