பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை - கலெக்டர் பேட்டி
- மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
- ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்ட சில வாகனங்கள் அந்தக் குறைகள் அனைத்தும் முழுமையாக சரி செய்த பிறகு தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களை சேர்ந்த 270 பள்ளி வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தணிக்கை செய்யப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். ஒவ்வொரு வாகனமாக ஏறி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அவசரகால வழி கதவு உள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பலவற்றை தணிக்கை செய்து ஆய்வு செய்தார். இதில் சிறு சிறு குறைகள் கண்டறியப்பட்ட சில வாகனங்களை இயக்கக் கூடாது. அந்தக் குறைகள் அனைத்தும் முழுமையாக சரி செய்த பிறகு தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு நடந்த கண் பரிசோதனை முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
தஞ்சை மாவட்டத்தில் இன்று 718 பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சிறுசிறு குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் அந்தக் குறைகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்த பிறகே இயக்க அனுமதிக்கப்படும். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் கண்டிப்பாக 5 வருடம் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நேரத்திற்கு பஸ்கள் செல்ல அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.