உள்ளூர் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா: பேரூர் நொய்யல் படித்துறை, பவானி ஆற்றில் குவிந்த பக்தர்கள்

Published On 2023-08-03 09:27 GMT   |   Update On 2023-08-03 09:27 GMT
  • போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
  • மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

பேரூர்,

பேரூர் நொய்யல் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா இன்று சிறப்பாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழாவன்று (ஆடி18) பேரூர் நொய்யல் படித்துறையில், இறந்துபோன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன பெண்கள் ஆகியோருக்கு இலைப்படையல் வைத்து 7 கூழாங்கற்களை கன்னிமார் தெய்வங்களாக உருவகித்து, காதோலை, கருகுமணி, தாழைமடல், நாணல்இலை, தின்பண்டங்கள் ஆகியன வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம், இறந்து போன குழந்தைகளின் பித்ருதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.

இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, காலை முதலே பஸ்களில் ஏராளமான பக்தர்கள் பேரூருக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் நொய்யல் ஆற்றின் படித்துறைக்கு சென்று, ஆற்றின் இரு கரைகளிலும் பக்தர்கள் அமர்ந்து இறந்துபோன குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இலைப் படையல் வைத்து 7 சப்த கன்னிமார் வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த பசுமாடு கன்றுகளுக்கு அகத்திக்கீரைகள் வழங்கியதோடு நொய்யல் ஆற்றோரம் அமர்ந்திருந்த சாதுக்கள் மற்றும் பிச்சைக்காரர்களுக்கு அன்னதானங்களையும் வழங்கினர்.

ஆடிப்பெருக்கு விழா என்பதால், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர்.

மேலும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே தடுப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

இந்த நிலையில் பேரூர் படித்துறையில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு அருளாசி பெற்றுச்சென்றனர். மேலும், வனபத்ரகாளி யம்மன் கொடி மரம் முன்பு அம்மனுக்கு விளக்கேற்றி தாங்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேற வேண்டி பூஜைகள் செய்தனர்.

மேலும்,பவானி ஆற்றங்கரையில் அதிகாலை முதலே ஆற்றில் குளித்து சப்த கன்னிமார்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபட்டு வருகின்றனர்.இதனால் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

Tags:    

Similar News