உள்ளூர் செய்திகள் (District)

அகரம் முத்தாலம்மன்

அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் கண் திறக்கும் வைபவம் நாளை நடக்கிறது

Published On 2022-10-16 05:34 GMT   |   Update On 2022-10-16 05:34 GMT
  • திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே அகரத்தில் பிரசித்தி பெற்ற அகரம் முத்தாலம்மன் கோவில் உள்ளது.
  • இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் கண் திறப்பு நாளை காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே அகரத்தில் பிரசித்தி பெற்ற அகரம் முத்தாலம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கோவிலில் பல்லி சகுனம் உத்தரவு கேட்டு உத்தரவு கொடுத்து விட்டால் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான உத்தரவு கொடுத்துவிட்டதால் திருவிழா 9ம் தேதி இரவு சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள், புராண நாடகங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் அம்மனின் பண்டாரப் பெட்டி மற்றும் உற்சவர் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளும் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மனின் கண் திறப்பு நாளை (திங்கட்கிழமை) காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. பின்னர் அம்மன் ஆயிரம் பொன் சப்பரத்தில் உலா வந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றைய தினம் இரவு 12 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் அளித்துவிட்டு அம்மன் அங்கிருந்து புஷ்ப விமானத்தில் புறப்பட்டு வாணகாட்சி மண்டபத்தில் எழுந்தருள்வார்.

பின்னர் இரவு 12 மணிக்கு மேல் வாணவேடிக்கை நிகழ்ச்சி விடிய விடிய நடைபெறும். மறுநாள் (18-ந் தேதி) செவ்வாய்கிழமை மதியம் 1.30 மணி அளவில் அம்மன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சொருகு பட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

Tags:    

Similar News