தெருநாய்களுக்கு உணவளித்து வரும் தனியார் நிறுவன ஊழியர்
- கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார்.
- இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ரவிகாந்த் (வயது 52). தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
விலங்குகள், பறவைகள் மீது அதீத பற்று கொண்ட இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, வீட்டில் பானைகள், செயற்கை கூடுகள் அமைத்து, பல ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளுக்கு வாழிடம் அமைத்து கொடுத்து வருகிறார். கோடை காலங்களில் குருவிகளுக்கு, தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைத்து வருகிறார்.
வாழப்பாடி பகுதியில் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை, குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளை, வாழப்பாடி கிழக்குக்காடு மயானம் அருகே கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இப்படி கைவிடப்பட்ட ஏராளமான நாய்க்குட்டிகள் இப்பகுதியிலேயே தங்கி உணவின்றி தவித்து வருகின்றன.
இதனைக் கண்ட ரவிகாந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார். இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு, 'தெரு நாய்கள் குட்டி போடும்போது ஆண் குட்டிகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், பெண் குட்டிகளை கொண்டு வந்து மயானத்தில் விட்டு சென்று விடுகின்றனர். இந்த குட்டிகள் உணவின்றி தவித்து வருகின்றன.
இதனால், இந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டும் என மனதில் தோன்றியது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து உணவளித்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது' என்றார்.